பாரிஸில் நடந்து வரும் பாராலிம்பிக்ஸ் தொடரின் T63 பிரிவில் உயரம் தாண்டுதலில் இந்திய வீரர்கள் அசத்தலாக செயல்பட்டுள்ளனர். 1.94 மீட்டர் தாண்டிய அமெரிக்காவின் ஏல்ரா தங்கப் பதக்கத்தையும், 1.88 மீட்டர் தாண்டிய இந்தியாவின் சரத் குமாருக்கு வெள்ளிப் பதக்கமும், 1.85 மீட்டர் தாண்டிய இந்தியாவின் மாரியப்பனுக்கு வெண்கலப் பதக்கமும் அளிக்கப்பட்டது.
முன்னதாக 2016 ரியோ பாராலிம்பிக்ஸ், 2020 டோக்கியோ பாராலிம்பிக்ஸ் மற்றும் 2024 பாரிஸ் பாராலிம்பிக்ஸ் என்று 3 தொடர்களிலும் மூன்று பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையை மாரியப்பன் படைத்துள்ளார்.
இதனால் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து ரசிகர்களும், நட்சத்திரங்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மாரியப்பன் தங்கவேலு 2016ஆம் ஆண்டு கொடுத்த பேட்டி ஒன்று ட்ரெண்டாகி வருகிறது.
சேலம் மாவட்டம் பெரியவடகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவருக்கு 5 வயது இருக்கும் போது வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்திருக்கிறார். அப்போது அந்த வழியாக சென்ற பேருந்து மோதியதால், காலின் கட்டை விரல் தவிர்த்து மற்ற பகுதிகள் சிதைந்துள்ளது.
இருந்தாலும் தன்னம்பிக்கையுடன் விளையாட்டில் ஆர்வம் காட்டி வந்துள்ளார். பள்ளிப் பருவத்திலேயே உயரம் தாண்டுதலில் அசத்தி வரும் மாரியப்பன், உடற்கல்வி ஆசிரியரின் வழிகாட்டுதலை தொடர்ந்து அடுத்தடுத்த கட்டத்திற்கு முன்னேறி சென்றுள்ளார்.
2015ஆம் ஆண்டு சர்வதேச பாரா போட்டிகளில் பங்கேற்க தொடங்கிய அவர், 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்று தங்கம் வென்றார்.
இதன்பின் மாரியப்பன் தங்கவேலு அளித்த பேட்டியில், எனது வெற்றிக்கு காரணம் சத்யநாராயணா சார் தான். இந்த வெற்றிக்கு பின் எனது தாயார் சொல்லும் தகவல்கள் என்னை சோகமாக்குகிறது.
ஏனென்றால் கடந்த காலங்களில் எங்களை மதிக்காத பலரும், தாயாரைத் தேடி வந்து நெருக்குகிறார்கள் என்று கூறி கண்கலங்குகிறார். எனது தாயையும், 4 குழந்தைகளையும் தவிக்கவிட்டுச் சென்ற தந்தை, திடீரென உரிமை கோருவதாகக் கூறி அழுகிறார்.
சிறு வயதில் எனது தாயை எரித்து கொலை செய்ய முயற்சித்தவர் அவர். எனது அம்மாவுக்கு கொஞ்சம் கூட கருணையே காட்டியவில்லை. அவருக்கு என்றுமே என் மனதில் இடம் கிடையாது.
என்னை அனைவரும் மாரியப்பன் தங்கவேலு என்று அழைப்பதை கூட விரும்பவில்லை. என்னை மாரியப்பன் என்று மட்டும் அழைத்தாலே போதும் என்று தெரிவித்துள்ளார். பாரிஸ் பாராலிம்பிக்ஸுக்குப் பிறகு இந்தப் பேட்டி தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது.