உடல் எடையைக் குறைக்க உதவும் தேங்காய்!

செப்டம்பர் – 2: உலக தேங்காய் தினம்

சமையலுக்கு ருசியை அதிகப்படுத்துவது தேங்காய்க்கு நிகர் எதுவும் இல்லை. இந்திய சமையல்களில் தவிர்க்க முடியாத ஒன்று தேங்காய்.

தஞ்சை, நெல்லை, நாகர்கோவில், மதுரை ஆகிய மாவட்டங்களில் சமையல்களில் தேங்காயின் பங்கு சற்று தூக்கலாகவே இருக்கும்.

சாம்பார், புளிக்குழம்பு, மீன் குழம்பு, அவியல், பொரியல், கூட்டு என பெரும்பாலான சமையலில் அதன் பங்கு அதிகம் தான்.

இனிப்பு பதார்த்தங்கள் முதல் ஏன் சில இடங்களில் தேங்காய்ப் பால் ரசம் கூட உண்டு. தேங்காய் சேராமல் செய்யும் சமையல் என்பது இந்தியாவில் குறைவுதான்.

இடியாப்பம், ஆப்பத்திற்கு சிறந்த ஜோடியாக இருக்கும் தேங்காய்ப் பால். சமையல் முதல் ஆன்மீகம், சாஸ்திரம், சம்பிரதாயம் என பின்னிப் பிணைந்து இருக்கிறது தேங்காயின் பங்கு.

தேங்காயில் உடலுக்கு தேவையான பல வைட்டமின்கள் நிறைந்து உள்ளது.

பல நன்மைகளை கொடுக்கும் தேங்காயை கொண்டாடும் விதமாகவும், ஊக்கப்படுத்தும் விதமாக 2009 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 2 ஆம் தேதி முதல் ‘உலக தேங்காய் தினம்’ அனுசரிக்கப்படுகிறது.

இந்தியா, மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, கென்யா மற்றும் வியட்நாம் போன்ற தென்னை உற்பத்தி செய்யும் நாடுகளின் விவசாயிகள் மற்றும் தேங்காய் வளர்ப்பு வியாபார பங்குதாரர்களால் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

இந்த சிறப்பான தேங்காய் தினத்தில் அதை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்துப் பார்க்கலாம்.

தேங்காயை தினமும் எடுத்துக் கொள்வதால் பலவிதமான நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றன. இதயம் ஆரோக்கியமாக இருப்பதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.

அளவோடு தேங்காயை எடுத்துக் கொண்டால் ஆரோக்கியமாக வாழ முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.

ஏராளமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த தேங்காவை எப்படி முறையாக பயன்படுத்துவது?

நாம் உட்கொள்ளக் கூடிய ஆரோக்கியமான உணவுகளில் தேங்காய்க்கு முதலிடம் கொடுக்கலாம்.

நமது முன்னோர்களும், சித்தர்களும் வெறும் தேங்காய் மற்றும் வாழைப்பழம் மட்டுமே உண்டு உயிர் வாழ்ந்ததாக நாம் அறிந்திருப்போம். காரணம், இதில் நிறைந்திருக்கும் ஊட்டச்சத்துக்கள் ஏறாலம்.

தேங்காய் சதையில் உயர்ந்த கொழுப்பு மற்றும் கலோரிகள் அதிகம். இதில் மாங்கனீசு, பொட்டாசியம், பாஸ்பரஸ், தாமிரம், இரும்பு, துத்தநாகம் உள்ளிட்ட ஏராளமான சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.

ஆரோக்கியமான உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இதில் ஏராளம். இதில் இருக்கும் நார்ச்சத்துக்கள் குடல் இயக்கத்திற்கு உதவுகிறது.

மேலும் செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள இது துணை புரிகிறது.

இதில் நிறைந்திருக்கும் வைட்டமின்கள் ஏ, டி, ஈ மற்றும் கே ஆகியவை நமது குடலில் இருக்கும் நல்ல பாக்டீரியாவை மேம்படுத்த துணைபுரிகிறது. செரிமான பிரச்சனை மற்றும் குடல் வீக்கத்தில் இருந்து பாதுகாப்பு கொடுக்கிறது.

இதய ஆரோக்கியத்திற்கு தேங்காய்:

தேங்காய் எண்ணெய் உணவில் எடுத்துக் கொள்ளும்போது நல்ல கொலஸ்ட்ரால் அதிகரிக்கிறது. இது வறட்சியான தோலில் தடவிக் கொள்ளும் போது ஈரப்பதத்தை அதிகப்படுத்தி புத்துணர்ச்சியை கொடுக்கிறது. சமைக்காத தேங்காய் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

தேங்காய் எண்ணெயில் சமைத்து உண்பவர்களிடம் நடத்திய ஆராய்ச்சியில் இதை பயன்படுத்துபவர்களின் கொலஸ்ட்ரால் அளவு சீராக இருப்பதாக கூறப்படுகிறது.

உடல் எடையைக் குறைக்கும் தேங்காய்!

தேங்காய் உடல் எடையைக் குறைப்பதாக ஆய்வு ஒன்று கூறுகிறது. இதில் சமைத்த உணவுகளை கொஞ்சம் சாப்பிட்டாலும் வயிறு நிரம்பிய உணர்வை தரக் கூடியது. இதனால் நீங்கள் அதிகமாக நொறுக்கு தீனிகள் சாப்பிடுவது குறைக்கப்படும்.

அது மட்டுமல்லாமல் தேங்காயின் சதைப்பகுதி கொழுப்பு எரிபொருளாகச் செயல்படுகிறது என்றும் ஆராய்ச்சி கூறுகிறது.

இதில் இருக்கும் ஆரோக்கியமான கொழுப்பு, தாதுக்கள், நார்ச்சத்துகள், மோனோ சங்கிலி மற்றும் ட்ரைகிளிசரைடுகள் தேங்காயில் அதிகம் காணப்படுகிறது. இவை உடனடியாக உடலில் செரிக்கப்படுகிறது.

அதோடு, இதில் இருக்கும் தாதுக்கள் மாங்கனீசு, இரும்பு, தாமிரம், மற்றும் மெக்னீசியம் ஆகியவை நிறைந்து இருப்பதால் உடல் எடையைப் பராமரிக்க நினைப்பவர்களுக்கு சிறந்த தேர்வாக தேங்காய் இருக்கும்.

நோயெதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவது:

தேங்காயில் நிறைய மாங்கனீசு இருப்பதால் அவை உடலுக்கு எரிபொருளாக செயல்படுகிறது. இதை எடுத்துக் கொள்வதால் உடலுக்குத் தேவையான வைட்டமின் ஈ மற்றும் இரும்பு சத்துக்கள் இயற்கையாக நமக்கு கிடைக்கிறது.

இதில் மாங்கனீசு மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்கள் இருப்பதால் அவை நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. உடல் நல பிரச்சனைகள் வராமல் பாதுகாக்கிறது.

ஒரு நாள் விட்டு ஒரு நாள் தேங்காய்ப் பால் எடுத்துக் கொள்ளும்போது உடலில் நல்ல கொழுப்பு அதிகரிக்கச் செய்கிறது. அதோடு, உடல் எடையைச் சீராகப் பராமரித்துத் தோலுக்கு நல்ல பொலிவைக் கொடுக்கிறது.

இளநீர் வழுக்கை நன்மைகள்:

இளநீருடன் வழுக்கைத் தேங்காய் எடுத்துக் கொள்ளும்போது உடல் உஷ்ணத்தைக் குறைக்கிறது.

இதில் இருக்கும் காப்பர், எலும்பு ஆரோக்கியத்திற்கும் இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.

இளநீர் வழுக்கையில் 89% அளவிற்கு சேச்சுரேட்டு கொழுப்பு மட்டுமே நிறைந்திருக்கிறது.

இந்த கொழுப்பானது நல்ல கொலஸ்ட்ராலை அதிகரித்து, கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது.

இதில் இருக்கும் நல்ல கொழுப்பு வயிறு நிரம்பிய உணர்வை கொடுப்பதால் உடல் எடை குறைக்கப்படுகிறது.

தேங்காய்ப் பால் – தாய்ப் பாலுக்கு இணையாகக் கூறப்படுகிறது.

எனவே இவ்வளவு நன்மைகளை உள்ளடக்கிய தேங்காவை தினமும் எடுத்துக் கொள்வோம் என தேங்காய் தினமான இன்று உறுதியேற்போம்.

– யாழினி சோமு

You might also like