மனிதர்களின் உறவுச் சிக்கல்களைத் தீர்க்கும் ஆராய்ச்சி!

“அன்பு / காதல் / நேசம்” என்பதை நாம் பல விதங்களில் பயன்படுத்துகிறோம். பல்வேறு சூழ்நிலைகளில் அந்த சொல் பயன்படுத்தப்படுகிறது.

ஆனால், இந்தப் பலவித நேசங்களுக்கிடையில் வேறுபாடு இருக்கிறது, இல்லையா? இந்த வேறுபாட்டைக் கண்டறிவதற்காக பின்லாந்தின் ஆல்டோ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த சில அறிவியலாளர்கள் ஒரு ஆராய்ச்சியை மேற்கொண்டனர்.

ஆராய்ச்சிக்காக, மகிழ்ச்சியான திருமண வாழ்வில் இருக்கும் 55 பெற்றோர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களிடம் ஆறு விதமான நேசங்களைப் பற்றிய விவரணைகள் தரப்பட்டன.

காதலர், குழந்தை, நண்பர், செல்லப் பிராணி, முன்பின் பரிச்சயமில்லாத நபர், இயற்கை ஆகியவற்றின் மீது அன்பு செலுத்துவதைப் பற்றிய விவரணைகள் தந்துவிட்டு, அவர்கள் FMRI எனப்படும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

FMRI (Functional Magnetic Resonance Imaging) மூலம் மூளையின் எந்தப் பகுதி தூண்டப்படுகிறது என்பதை அறிந்துகொள்ளமுடியும்.

இதை வைத்து, ஒரு குறிப்பிட்ட செயல்பாட்டின்போது எந்தப் பகுதி வேலை செய்கிறது என்று புரிந்துகொள்ளலாம்.

அன்பு பற்றிய இந்த ஆராய்ச்சியில், யார் மீதான அன்பு உணர்ச்சி வரும்போது எந்தப் பகுதி வேலை செய்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள FMRI பயன்படுத்தப்பட்டது.

குழந்தைகள் மீது பெற்றோர் வைத்திருக்கும் அன்பில்தான் மிக அதிகமான மூளைப்பகுதிகள் தூண்டப்படுகின்றன என்றும் அதற்கு அடுத்தபடியாகக் காதலர் மீது வைத்திருக்கும் அன்பு வருகிறது என்றும் ஆராய்ச்சியில் தெரிய வந்தது.

முன்பின் பரிச்சயமில்லாதவர்மீது அன்பு செலுத்தும்போது சமூகம் சார்ந்த மூளைப் பகுதிகள் தூண்டப்பட்டன.

அன்பு என்கிற சிக்கலான மனித உணர்வை இப்படி ஒரு மூளைத் தூண்டுதல் வரைபடத்தால் முழுமையாக விளக்கிவிடமுடியாது.

ஆனால், மனித இனத்தின் சமூகக் கட்டமைப்புகளைப் புரிந்துகொள்ள இது உதவும் என்றும், மனிதர்களின் உறவுச் சிக்கல்களைத் தீர்க்க இந்த ஆராய்ச்சி அடிப்படையாக அமையும் என்றும் ஆய்வுக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

– நாராயணி சுப்ரமணியன்

You might also like