பெண் அரசியல் பேசும் ‘ஆண்கள் இல்லாத வீடு‘!

நூல் அறிமுகம்: 

அடுக்கடுக்காக சிறப்பான கவிதைகளைக் கொண்டுள்ள இந்தத் தொகுப்பில் ‘ஆண்கள் இல்லாத வீடு‘ என்ற ஆகச்சிறந்த கவிதையை எழுதியிருக்கிறார் அக்கா, நர்மதா குப்புசாமி எனும் இமையாள்

ஆண்களின் இடையீடு இல்லாத நாளொன்றில் பெண்ணின் இயல்பான புழக்கங்களைக் கூறுகிற கவிதையிது.

ஆண்மையவாதக் கவியுலகினைச் சிதறடிக்கும் இப்படிப்பட்ட கவிக்குரல்களின் அணுத்திறப்பான வெடிப்பினை ஆரம்பம் முதலே கொண்டாடுகிறவன் என்ற வகையில் இந்தத் தொகுப்பின் கவிதைகள் என் கருத்துக்கு வலிமை சேர்க்கிற அளவு சிறப்புமிக்கதாயிருக்கின்றன.

இத்தொகுப்பின் மூலம் ‘இமையாள்‘ நம்பிக்கை பொய்க்காத கவிஞராக உருவெடுத்திருக்கிறார்.

‘ஆண்கள் இல்லாத வீடு’ இந்தத் தலைப்பே ஒரு அரசியல் பேசுகிறது. இது, பெண்ணியம் சார்ந்த, காதல் சார்ந்த, சமூகம் சார்ந்த, அன்றாடங்கள் சார்ந்த அற்புதமான கவிதைகளைக் கொண்டுள்ள நூல்.

  • கவிஞர்.கலாப்ரியா

பர்தா பெண்ணின் ஓவியம்

பர்தா பெண்ணை வரைவது
அத்தனை எளிது.
அவளது அலங்காரங்களில்
கவனம் செலுத்தவேண்டியதில்லை
அவளது ஆடை நிறம் குறித்து குறிப்புகள்
எதுவும் தேவையில்லை.
பர்தா பெண்ணின் கைகள் மட்டும்
தொலைவிலிருந்தும் தெரியலாம்
ஒரு குழந்தையைப் பற்றியபடியோ புத்தகங்களை மார்போடு அணைத்தபடியோ
தாயின், தோழியின் கரம் பற்றியோ
கணவனின் கரம் பற்றியோ
எதுவோ ஒன்றாய்
முக லாவண்யங்களுக்கும்
உணர்ச்சிகளுக்கும்
முக்கியத்துவமில்லை என்றாலும்
கண்களுக்கான சிறு இடைவெளியில்
அவள் காண்கிற உலகின் வண்ணங்களை
உங்களால் இனம்காண முடிந்தால்
ஒரு முழுமையான பர்தா பெண்ணை
ஓவியமாக்கிவிட முடியும்.

அனுமதிக்கப்பட்ட வானம்

என் பாட்டியின் தாய்க்கு
வானம் அனுமதிக்கப்படவில்லை.
என் பாட்டிக்கு
நீர்துறைக்குச் செல்லும்வரை
சிறிது வானம்.
என் தாய்க்கோ
பள்ளிவரை ஒரு துண்டுவானம்.
எனது வானம்
வேலை செய்யுமிடம் வரை
சற்று விரிந்தது.
பாட்டியின் தாய் சொன்னாள்,
‘வானம் என்று எதுவுமில்லை!
அம்மா சொன்னாள்,
‘வானம் என்பது சதுரம்’
நான் சொன்னேன்,
‘வானம் என்பது அரைக்கோளம்’
வானம் சிரித்தது.

******

நூல்: ஆண்கள் இல்லாத வீடு
ஆசிரியர்: இமையாள்
தேநீர் பதிப்பகம்
பக்கங்கள்: 84
விலை: ரூ.114/-

You might also like