‘சூர்யா’ஸ் சாட்டர்டே – ஹீரோ சனிக்கிழமை மட்டும்தான் அடிப்பாரா?

எஸ்.ஜே.சூர்யாவுக்குத் திரும்பிய பக்கமெல்லாம் வெற்றி என்று சொல்லுமளவுக்கு தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்து வருகிறார். தற்போது தெலுங்கில் நானி உடன் ‘சரிபோதா சனிவாரம்’ படத்தில் வில்லனாகத் தோன்றியிருக்கிறார்.

‘சூர்யா’ஸ் சாட்டர்டே என்ற பெயரில் தமிழ், மலையாளம், இந்தி, கன்னட மொழிகளில் ‘டப்’ செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த படத்தின் இயக்குநர் விவேக் ஆத்ரேயா ஏற்கனவே நானி, நஸ்ரியா நடிப்பில் ‘அடடே சுந்தரா’ எனும் படத்தையும், அதற்கு முன்னர் ‘மெண்டல் மாதிலோ’, ‘ப்ரசுவரேவருரா’ என்று படங்களையும் தந்தவர்.

இவரது படங்கள் வித்தியாசமான கமர்ஷியல் படங்களாக இருக்கும் என்பது தெலுங்கு ரசிகர்களின் எண்ணம்.

‘சூர்யா’ஸ் சாட்டர்டே படத்திலும் அதனை விவேக் ஆத்ரேயா நிரூபித்திருக்கிறாரா? இந்தப் படத்தில் ஹீரோ நானி – வில்லன் எஸ்.ஜே.சூர்யாவின் ‘எனிமி’ கெமிஸ்ட்ரி எந்தளவுக்கு இருக்கிறது?

அம்மாவிடம் செய்த சத்தியம்!

ஹீரோ படுபயங்கர கோபப்பேர்வழி. தன்னைக் கோபப்படுத்துபவர்களை அடி வெளுத்தெடுப்பவர். அதனைக் காணும் பெற்றோர் வருத்தத்தில் ஆழ்கின்றனர். அவரது தாய்க்கு உடல்நலப் பிரச்சனை ஏற்படுகிறது.

அதனால், இன்னும் சில காலம் மட்டுமே தான் உயிருடன் இருப்போம் என்ற உண்மையும் தெரிகிறது. அதனால் மகனையும் மகளையும் எதிர்காலத்தை எதிர்கொள்ளும் வகையில் வளர்க்க வேண்டுமென்று நினைக்கிறார்.

மகனிடம் உள்ள கோபத்தைக் குறைக்க வழி என்னவென்று யோசிக்கிறார். ஒரு வழியைக் கண்டுபிடிக்கிறார்.

அதன்படி, தன் அம்மாவிடம் ஒரு சத்தியம் செய்கிறார் ஹீரோ. அதன்படி, வாரத்தின் ஒவ்வொரு நாளும் ‘இன்னிக்கு நான் சண்டை போடலாமா’ என்று கேட்கிறார். இப்படியாக புதன், திங்கள், ஞாயிறு என்று சில வாரங்கள் கழிகின்றன. மீதம் சனிக்கிழமை மட்டுமே இருக்கிறது.

அப்படியொரு சனிக்கிழமையன்று ஹீரோவின் தாய் மரணமடைகிறார். அன்றைய தினம் தாய்மாமன் மரணவீட்டில் வந்து பிரச்சனை செய்கிறார். தாயை அவதூறாகப் பேசுகிறார். அவ்வளவுதான். தனது கோபத்தை வெளிக்காட்ட, சனிக்கிழமையைத் தாய் தந்ததாக நினைக்கிறார் ஹீரோ.

வளர்ந்து பெரியவன் ஆனபிறகும், ஹீரோவின் குணம் மாறுவதாக இல்லை. தன்னைக் கோபப்படுத்துபவர்களிடம், வாரம் முழுக்க அமைதியாக நடந்துகொள்கிறார்.

கோபம் வந்தாலும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்கிறார். ஆனால், ஒவ்வொரு நாள் இரவும் அவர்களது பெயர்களை டைரியொன்றில் எழுதி வைக்கிறார்.

சனிக்கிழமையன்று காலை எழும்போது, அந்த டைரியைப் பார்த்ததும் மீண்டும் அந்த கோபம் தலைதூக்கினால் அந்த நபரைத் தேடிச் சென்று புரட்டியெடுப்பார். இப்படிப் பலரது பகையைச் சம்பாதிக்கிறார் ஹீரோ.

அப்படித்தான் இன்ஸ்பெக்டராக இருக்கும் வில்லனையும் தேடிச் செல்கிறார். அதற்கு என்ன காரணம்? அது தனிப்பட்ட விரோதமா அல்லது வேறு நபர்களுக்காக அப்படியொரு கோபத்தைக் கைக்கொள்கிறாரா?

இறுதியில் வெற்றி பெற்றது ஹீரோவா, வில்லனா என்று சொல்கிறது ‘சூர்யாஸ் சாட்டர்டே’ படத்தின் மீதிக்கதை.

‘கேஜிஎஃப்’ 1 மற்றும் 2 படங்கள் போலவே, இதிலும் ‘அம்மா சென்டிமெண்ட்’ தான் கதையின் அடிநாதம். அதேபோல, ஹீரோ கையை முறுக்கினால் எதிரில் இருப்பவர் அதோகதிதான்.

ஆனால், எதற்கெடுத்தாலும் கையை முறுக்காமல், சனிக்கிழமை மட்டும் அப்படிச் செய்ய வைத்த காரணத்தால் இந்தப் படத்தை வித்தியாசமானதாக உணர வைத்திருக்கிறார் இயக்குநர் விவேக் ஆத்ரேயா.

செறிவான உள்ளடக்கம்!

நானி, எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா, சாய்குமார், அபிராமி, அதிதி பாலன், முரளி சர்மா, அஜய்குமார் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.

ஒரு ஹீரோவாக தான் திரையில் எப்படித் தோன்றினால் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்பது நானிக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது.

அதற்கேற்ப ரொமான்ஸ், காமெடி, ஆக்‌ஷன் என்று ஒவ்வொரு பிரிவிலும் தனது திறமையை அளவோடு வெளிக்காட்டியிருக்கிறார். இந்தப் படத்தின் திரைக்கதை மீது அவர் கொண்டிருந்த நம்பிக்கை அபாரம்.

ஹீரோயினாக வரும் பிரியங்காவுக்கு இதில் டூயட் பாடிவிட்டு, ஹீரோவுக்கு டாட்டா காட்டும் பணியல்ல. அதனை உணர்ந்து, படம் முழுக்க வந்து நம்மில் நிறைவை ஏற்படுத்துகிறார்.

வில்லனாக இதில் எஸ்.ஜே.சூர்யா நடித்திருக்கிறார். ‘தில்’ ஆசிஷ் வித்யார்த்தியை நினைவூட்டினாலும், இதில் அவரது நடிப்பு பிரமாதம்.

பின்பாதியில் நானிக்கு இணையான இடம் திரைக்கதையில் அவருக்குத் தரப்பட்டிருப்பதே இப்படத்தைப் பாதி வெற்றியடையச் செய்துவிடுகிறது.

முரளி சர்மா இதில் எஸ்.ஜே.சூர்யாவின் சகோதரராக வருகிறார். அவர் வரும் காட்சிகளில் சிரிப்பு முட்டுகிறது.

இவர்கள் தவிர்த்து அஜய்குமார், சுபலேக சுதாகர், ஹர்ஷவர்தன், சாய்குமார், அதிதி பாலன், அஜய் கோஷ் என்று பலர் இதில் நடித்துள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரையும் நினைவுபடுத்தும் வகையில் திரைக்கதையில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட காட்சிகள் இருப்பது நல்ல விஷயம்.

இந்த படத்தின் கதையில் வெறுமனே ஹீரோ, வில்லன் மோதலை மட்டும் மையப்படுத்தாமல், அதன்பின்னே குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்த மக்களின் வாழ்வியல் பிரச்சனைகளும் சொல்லப்பட்டிருக்கின்றன.

திரையில் அவை சொல்லப்பட்டவிதம் சினிமாத்தனமாக தெரிந்தாலும், அது சாதாரண மனிதர்களைத் தொடுவதாகவே இருக்கிறது. அவ்வாறு ‘சோகுலபாலம்’ எனும் பகுதி இத்திரைக்கதையில் காட்டப்பட்டிருக்கிறது.

ஹீரோவின் ஆக்‌ஷன் பில்டப் காட்சிகள், அம்மாவுக்குச் செய்த சத்தியம், ஹீரோவின் இயல்பு பற்றிய தந்தையின் பேச்சு, வில்லனின் குணாதிசயங்கள் மட்டுமல்லாமல் இத்திரைக்கதையில் வரும் திருப்பங்களும் கூட எதிர்காலத்தில் வேறு சில படங்களில் கிண்டலடிக்கப்படலாம். அதனை நிகழ்த்தும் அளவுக்குப் புகழ் பெறத்தக்கதாகவும் அக்காட்சிகள் இருப்பது ப்ளஸ்.

இந்த திரைக்கதையில் நாம் ஆயிரம் குறைகள் கண்டுபிடிக்கலாம். ஆனால், தியேட்டருக்குள் இருக்கையில் அதனைச் செய்யவிடாமல் தடுப்பது இயக்குனர் விவேக்கின் சாமர்த்தியம்.

என்னதான் கமர்ஷியல் படம் என்றாலும், ஹீரோவின் மனதைப் பார்வையாளரிடம் உணரச் செய்வதில் வெற்றி பெற்றிருக்கிறது இத்திரைக்கதை.

அதனைத் திரையின் வழி உணரச் செய்ய ஒளிப்பதிவாளர் முரளி.ஜி, படத்தொகுப்பாளர் கார்த்திகா ஸ்ரீனிவாஸ், கலை இயக்குநர் ஜி.எம்.சேகர், சண்டைக்காட்சி வடிவமைப்பாளர்கள் ரியல் சதீஷ், ராம் – லட்சுமண் உட்படப் பெரும் தொழில்நுட்பக் குழுவே உழைத்திருக்கிறது.

இப்படத்தின் டிஐக்கு தனி விருதே தரலாம்.

இப்படம் ஒரு ‘டப்பிங்’ படம் என்று தெரியாத அளவுக்கு வசனங்கள் நேர்த்தியாக உள்ளன. தெலுங்கு எழுத்துகளுக்குப் பதிலாக விஎஃப்எக்ஸில் தமிழ் எழுத்துகள் பல இடங்களில் காண்பிக்கப்படுகின்றன. அது படத்தை நம் மனதுக்கு நெருக்கமாக்கியிருக்கிறது.

ஒரு கமர்ஷியல் மசாலா படத்தில், ஹீரோ எதற்கெடுத்தாலும் கோபப்படுவது புதிய விஷயமல்ல.

ஆனால், அதையே ஒரு கதையாக ஆக்கிச் சுமார் 3 மணி நேரம் போராடிக்காமல் திரையில் சொல்வது சாதாரண விஷயமல்ல. அதனால், இயக்குனர் விவேக் ஆத்ரேயாவை நாம் கொண்டாடத்தான் வேண்டும்.

இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா சொல்வது போல, இதில் நானி ‘சனிக்கிழமை பாட்ஷா’வாக வருகிறார். ஆம், வாரத்தில் ஒருநாள் மட்டுமே ஹீரோ ஆக்‌ஷனில் இறங்குவார் என்பது கேட்கக் கிண்டலாக இருக்கலாம்.

‘சனிக்கிழமை மட்டும்தான் அவர் அடிப்பாரா’ என்று கேள்வி கேட்கச் செய்யலாம். ஆனால், அதனை நம்பும்விதத்தில் சொன்ன வகையில் வெற்றி வாகை சூடுகிறது இந்த ‘சூர்யாஸ் சாட்டர்டே’.

இப்படியொரு செறிவான உள்ளடக்கம் சமீபகாலத்தில் நாம் காணக் கிடைக்கவில்லை. ஒரு தெலுங்கு படம் அதனை சாத்தியப்படுத்தியிருக்கிறது என்பது நம்ப முடியாத அதிசயம்.

தமிழில் ‘நான் ஈ’க்குப் பிறகு நானிக்கு இது பெயர் சொல்லும் படமாக இருக்கும். அதனைச் சாத்தியப்படுத்தியதில் எஸ்.ஜே.சூர்யாவின் பங்கும் கணிசம். அவர்கள் இருவரது ‘ஆன்ஸ்க்ரீன் எனிமி கெமிஸ்ட்ரி’க்காக இந்தப் படத்தைக் காணலாம்!

உதயசங்கரன் பாடகலிங்கம்

You might also like