ஆகஸ்ட் 29 – தேசிய விளையாட்டு தினம்
‘ஓடி விளையாடு பாப்பா’ என்று சொன்ன பாரதி, இந்த மனிதர்கள் வயதானபிறகு உடலை அசைக்கவே சிரமப்படுவார்கள் என்று கணித்திருந்தால் ‘ஓடி விளையாடு மானிடா’ என்றுதான் சொல்லியிருப்பார். அவரையும் குறை சொல்ல முடியாது. அந்த காலத்தில் எல்லா வயதினருக்கும் உடலை வளைக்கவும் நெளிக்கவும் தெம்பிருந்தது; அதற்கேற்ற உடல் உழைப்புமிருந்தது.
வாழ்வின் ஓட்டத்தில் பால்ய கால விருப்பங்களை மறந்துவிட்டு பணம் தேடும் நோக்கில் பல வேலைகளைச் செய்வோர், நடுத்தர வயதிலும் கூட திருவிழாக்கால விளையாட்டு போட்டிகளைக் காண குழந்தைகளை விட வேகமாக ஓடுவார்கள். ‘மாட்டுப்பொங்கல் அன்னிக்கு வெளாட்டு பார்த்தேன்’ என்று வருஷம் முழுக்க உற்சாகம் பொங்க அருகிலிருப்பவர்களிடம் கதை பேசுவார்கள். தெரிந்த உள்ளூர் விளையாட்டு என்றில்லை, தெரியாத ஒன்றாக இருந்தாலும் ‘இதுல என்ன ரூல்ஸு’ என்று கேட்டுத் தெரிந்துகொள்வார்கள்.
ஏன், தொலைக்காட்சி பெட்டிகள் கிராமங்களில் நுழைந்த காலத்தில் ஐஸ் ஹாக்கியை பார்த்து அதிசயித்தவர்கள் பலர். அதையும் கண்கள் விரியப் பார்க்க காரணம், அவர்களிடமிருந்த ‘விளையாட்டு ஆர்வம்’தான். அதுதான், இன்றும் கிராமங்களில் இருந்து பல்வேறு விளையாட்டுகளில் சிறந்து விளங்கும் ஜாம்பவான்களை இந்த நாட்டுக்குத் தந்து கொண்டிருக்கிறது.
விளையாட ஏது வயது?
‘என்ன இன்னும் சின்னப்புள்ள மாதிரி ஆடிக்கிட்டு விளையாடிக்கிட்டு..’ என்ற வார்த்தைகளை கிண்டலாகவோ, அங்கலாய்ப்பாகவோ, கோபமாகவோ, வருத்தமாகவோ, இன்னும் பலவாகவோ கேட்கும் நிலையை இன்றைய வேகயுகம் தந்திருக்கிறது.
இப்போதெல்லாம் பதின்ம வயதில் இருப்பவர்களைப் பார்த்துக்கூட, சில பெற்றோர்கள் இதே வார்த்தைகளை உதிர்க்கின்றனர். அயராமல் படித்துப் பெறும் அதிக மதிப்பெண் தொடங்கி தினசரி வேலைகளில் வெளிப்பட்டாக வேண்டிய பொறுப்பு, வாழ்வில் உயரிய நிலையை அடைதல், கை நிறைய சம்பாத்தியம், இதர வசதிகள் என்று பலவற்றுக்காக ஒருவரது ஓடி ஆடும் ஆசைகள் முடக்கப்படுகின்றன; சில ஆண்டுகளாக நிலை கொண்டிருக்கும் ’சாமர்த்தியமாகப் பிழைத்தல்’ உத்தியை முன்வைத்து ஒரு நாளின் ஒவ்வொரு நொடியும் ரூபாய் நோட்டுகளாக கருதப்படுகின்றன.
உடலை ஒடுக்கி உருக்கி நெகிழ வைப்பதற்கான விஷயங்களை விட்டுவிட்டு நம்மிடம் பெருகும் இந்த மனவோட்டம் ஒருகட்டத்தில் அடிப்படையையே ஆட்டம் காண வைக்கிறது. அப்புறமென்ன, பூங்காக்களையும் கடற்கரைகளையும் நடைபாதைகளையும் தேடித் தேடி நடந்தும் ஓடியும் குறுக்கும் நெடுக்குமாக உடலை வளைத்தும் ‘ஹோ’வென்று பலர் அதிரச் சிரித்தும் இந்த உடலைக் கட்டுக்குள் கொண்டுவர போராட வேண்டியிருக்கிறது.
சிறு வயதிலேயே ஏதேனும் ஒரு விளையாட்டில் ஈடுபட்டவர்கள், பெரியவர்களான பிறகு அவ்வழக்கத்தைக் கைவிட்டாலும் கூட அதனை மீண்டும் கைக்கொள்வதில் எந்த சிரமமும் இருக்காது. அந்த உறுதியை, உற்சாகத்தை, முன்னெடுப்பை வழங்குவது முந்தைய விளையாட்டு நாட்கள் விட்டுச் சென்ற தடங்கள் தான். அதுவே தம் குழந்தைகளையும் தமக்குத் தெரிந்தவர்களையும் விளையாட்டில் ஈடுபடுத்தும் உணர்வைப் பெருக்கும்.
ஆர்வத்தைப் பெருக்கி, கூச்சத்தை ஒதுக்கி வைத்தவர்கள் இன்றும் மைதானங்களில் குழந்தைகளுக்கான குதூகலத்துடன் விளையாடிக் களிப்பதைப் பார்க்க முடியும். தலை நரைத்தபின்னும் இது போன்ற விளையாட்டுகளில் கரைத்துக் கொள்வதே அந்நபர்களின் உடலிலும் உள்ளத்திலும் இளமை பொங்குவதற்கான காரணம்.
தடை போடும் மனங்கள்!
முன்பெல்லாம் அரிதாகச் சில வீடுகளில் விளையாடுவதற்கு ‘தடை’ இடும் வழக்கமிருந்தது. இன்று, அது பள்ளிகளிலும் பரவிவிட்டது. பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே விளையாடக் கட்டுப்பாடு விதிக்கப்பட்ட நாட்கள் காலாவதியாகி, ‘படிக்காம என்ன விளையாட்டு’ என்ற கேள்வியுடன் விளையாட்டுக்கான வகுப்புகளிலும் கூட சில வாத்தியார்கள் பாடம் எடுக்கின்றனர்.
சில தனியார் பள்ளிகளில் பெற்றோர்களே கூட தம் பிள்ளைகள் விளையாட்டுகளில் ஈடுபட வேண்டாம் என்று நிர்வாகத்திடம் கடிதம் சமர்ப்பிக்கின்றனர். காரணம் வேறொன்றுமில்லை, வெயிலில் ஓடியாடி விளையாடுவதால் நிறம் கறுப்பதோடு உடல் சூடாகி புண்கள் உள்ளிட்ட பாதிப்புகள் வந்துவிடுகிறதாம். என்ன விளக்கம் சொன்னாலும், இதனைப் பழிக்காமல் இருக்க முடியாது.
விளையாடும்போது தவறி விழுந்து அடிபடுவதெல்லாம் சாதாரண விஷயம். 2000-களுக்கு முன்பெல்லாம் அதனைப் பெரியளவில் எவரும் பொருட்படுத்தியதில்லை. ஆனால், இன்றைய பெற்றோரோ தம் பிள்ளைகள் மீது தூசி கூட ஒட்டிவிடக் கூடாது எனும் அளவுக்கு ’கருத்தாக’ இருக்கின்றனர். அதேநேரத்தில் தொலைக்காட்சியிலும் கணினியிலும் மொபைலிலும் பிள்ளைகள் மூழ்கிப் போவதை அனுமதிக்கின்றனர். ஒரு பக்கம் உடலின் இயக்கம் குறைய, இன்னொரு பக்கம் மூளையை ஏதோ ஒன்று ஆக்கிரமிக்க, அப்புறம் இரண்டுமே அதுவரை செய்துவந்த பணியில் சுணக்கம் காட்டத் தொடங்குகின்றன. விளைவுகள் என்னவென்று சொல்ல வேண்டியதில்லை.
விளையாட்டினால் ஒருவர் அடையக்கூடிய பயன்கள் என்னவென்று பட்டியலிட வேண்டிய சூழலில் நாம் இல்லை. பள்ளியிலோ, வட்டாரத்திலோ அல்லது தனிப்பட்ட பயிற்சி நிலையம் அளவிலோ கூட ஒரு குழந்தை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க வேண்டியதில்லை. குறைந்தபட்சமாக ஏதேனும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட விளையாட்டுகளை ஆடினால் போதும். குறைந்தபட்சமாக, விளையாடுவதால் நம் உடலின் நெகிழும்தன்மை தொடரும்போது வாழ்வின் ஏதோ ஒருகட்டத்தில் அது நமக்குப் பயனுள்ளதாக இருக்கும்.
விளையாட்டை ஊக்குவிப்போம்!
இன்றைய சூழலில் ஒரு குழந்தைக்கு கல்வி எந்தளவிற்கு முக்கியமோ, அதே போல விளையாட்டிலும் கலைத்திறனிலும் ஆர்வம் காட்டுவது அவசியம். இன்றைய இணைய யுகத்தில் ஒரு விளையாட்டை குறித்து அறிவது மட்டுமல்ல, அதனை விளையாடித் தலையெடுப்பதற்கான சரியான முயற்சிகளைக் கண்டடைவதும் கூட மிகச்சுலபம். வெறுமனே பணம் மட்டுமே அதற்கான தடையில்லை; நமது மனதின் ஆகப்பெரிய தயக்கம்தான் நம் குழந்தைகளின் ஆசைகளுக்கும் லட்சியங்களுக்கும் ஆகப்பெரிய தடை. அதனை உடைத்து, நம்மால் முடிந்த அளவுக்கு குழந்தைகளின் விளையாட்டு ஆசைகளை ஊக்குவிப்போம். போட்டி மனப்பான்மையை விட பங்கேற்றலே ஆகப்பெரிய வெற்றிதான் என்று புரிய வைப்போம். அந்த விதை என்றாவது ஒருநாள் விருட்சமாகிப் பலன்களை அள்ளித் தரும்!
– உதய் பாடகலிங்கம்