ஃபுட்டேஜ் – பொறுமையை விலையாகக் கேட்கும் ‘பரீட்சார்த்த முயற்சி’!

சில திரைப்படங்கள் பரீட்சார்த்த முயற்சியாக உருவாக்கப்படும். அதில் சொல்லப்படும் விஷயங்களும் முக்கியத்துவமிக்கதாக இருக்கும். அப்படிப்பட்ட முயற்சிகள், வெகுஜன ரசனைக்குக் கொஞ்சம் நெருக்கமாக இருந்தாக வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் அவை மீது ரசிகர்களின் கவனம் விழுவது குதிரைக்கொம்பாக மாறும்.

மஞ்சுவாரியார், விஷாக் நாயர், காயத்ரி அசோக் நடிப்பில் சைஜு ஸ்ரீதரன் இயக்கியுள்ள ‘ஃபுட்டேஜ்’ படம் பார்த்தபோது மேற்சொன்னதே மனதில் தோன்றியது.

சரி, படம் எப்படி இருக்கிறது?

புட்டேஜில் இருப்பது என்ன?

பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பிய ஒரு ஆடவன். நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த, அதன் கஷ்ட நஷ்டங்களை அனுபவிக்க விரும்பாத ஒரு யுவதி. இவர்கள் இருவரும் ‘லிவ் – இன்’னில் இருக்கின்றனர். இவர்கள் இருவரும் விளாக்கர்களாக செயல்படுகின்றனர்.

தங்களது அன்றாட வாழ்வின் முக்கியமான தருணங்களை அவர்கள் வீடியோவாகப் பதிவு செய்கின்றனர். தங்களை மட்டுமல்லாமல் சுற்றியிருப்பவர்கள் குறித்து சில தகவல்களையும் ஆவணப்படுத்துகின்றனர். அதற்காக, சிலரை அவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இந்த இரு விளாக்கர்களும் தங்களது அபார்ட்மெண்டில் வசிக்கும் ஒரு பெண்ணைக் கவனிக்கின்றனர். அந்தப் பெண் மருத்துவமனையொன்றில் மருத்துவராகப் பணியாற்றியவர். பாலியல் அத்துமீறலுக்கு ஆளான ஒரு பெண்ணை அவரது குடும்பத்தினர் கைவிட, தனது வீட்டில் வைத்து அவரைப் பராமரித்தவர். காயங்கள் குணமடைந்து பழைய நிலைக்குத் திரும்பிய அப்பெண் ஒருநாள் குடியிருப்பு வளாகத்தின் மேலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்ததாகச் சொல்லப்படுகிறது. அதன்பிறகு, அந்த மருத்துவர் எவருடனும் பேசுவதில்லை.

அது கொலையா, தற்கொலையா என்ற முடிவுக்கு வருவதற்குள், அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த நபர் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.

இவர்களது வீட்டில் வீட்டு வேலைகள் செய்பவர் தான், அவரது வீட்டிலும் வேலை பார்க்கிறார். அவரிடத்தில் இந்த விளாக்கர்கள் விசாரிக்கையில், அந்தப் பெண் மருத்துவர் குறித்து மேலும் சில தகவல்களையும் கூறுகிறார்.

அவர் யாருடனும் பேசுவதில்லை. வீட்டு வேலைகளைச் செய்ய வேண்டுமென்பதைச் சொல்ல, தாளில் எழுதிக் காண்பிப்பதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறார். போல, சில நாட்களாக இரண்டு ஆட்கள் சாப்பிடும் அளவுக்குச் சமைக்கச் சொல்வதாகவும், வீட்டில் அவர் மட்டுமே தனியாக இருப்பதாகவும் கூறுகிறார்.

ஒருநாள் அந்தப் பெண் மருத்துவர் இல்லாத நேரத்தில், அவர்கள் இருவருக்கும் வீட்டைத் திறந்துவிடுகிறார் வேலைக்காரப் பெண்மணி. அந்த வீட்டில் இருவரும் வீடியோ எடுக்கின்றனர். திடீரென்று அந்தப் பெண் வந்துவிட, ஓரிடத்தில் மறைந்திருக்கின்றனர். பிறகு, ’தப்பித்தோம் பிழைத்தோம்..’ என்று அங்கிருந்து வெளியேறுகின்றனர்.

அந்த பெண் மருத்துவர் வீட்டில் எடுத்த வீடியோவைப் பார்க்கையில், ஓரு அறைக்குள் ஒரு பெண் இருப்பது போன்ற தோற்றம் காணக் கிடைக்கிறது.

ஒரு நள்ளிரவில் கீழே அந்தப் பெண் மருத்துவர் வீட்டில் இருந்து ஏதோ சத்தம் கேட்கிறது. அவர் எங்கோ வெளியே செல்கிறார் என்று தெரிகிறது. எட்டிப் பார்த்தால், ஒரு பெரிய சூட்கேஸை அவர் தள்ளிச் செல்கிறார். இருவரும் அவசர அவசரமாக அவரைப் பின்தொடர்ந்து செல்கின்றனர்.

அவர்கள் அப்பெண் மருத்துவரின் காரில் தகவலறிவதற்காகப் பொருத்திய ‘ட்ராக்கர்’ மூலம், ஒரு காட்டுப் பகுதியில் அவரது கார் நுழைவது தெரிய வருகிறது. அந்த இடத்திற்குச் செல்கின்றனர்.

அங்கு சென்றதும், அவரை வெவ்வேறு திசைகளில் இருந்து கண்காணித்து வீடியோ பதிவு செய்வது என்று இருவரும் முடிவு செய்கின்றனர். இரு திசைகளில் பிரிகின்றனர்.

சில நிமிடங்கள் கழித்து, காரின் பின்புறத்தில் ஒரு பெண்ணை அந்தப் பெண் மருத்துவர் ஏற்றுவதைப் பார்க்கிறார் அந்த விளாக்கர். அது தன்னுடைய பார்ட்னர் என்று நினைத்து, அவரது காரின் பின்னால் ஓடுகிறார்.

குறிப்பிட்ட தொலைவு சென்றதும், அங்கிருக்கும் நீர்நிலையைப் பரிசலில் கடந்து செல்கிறார் அந்தப் பெண் மருத்துவர். அவருடன் அந்தப் பெண்ணும் இருக்கிறார்.

காதலியைக் காப்பாற்ற வேண்டுமென்ற நோக்கில், நீருக்குள் கேமிராவோடு குதிக்கிறார். அதன்பின் என்னவானது என்று சொல்கிறது இப்படத்தின் மீதி.

இந்தக் கதையின் முன்பாதி அந்த ஆண் விளாக்கரின் கேமிராவில் பதிவானதைக் கொண்டு நகர்கிறது. இரண்டாவது பாதி அந்தப் பெண் கேமிராவில் என்னென்ன பதிவு செய்தார் என்பதைக் காட்டுகிறது.

அதனால், வழக்கமாக நாம் பார்க்கிற படங்களில் இருக்கிற ஒளிப்பதிவினைக் காண முடியாது. அதுவே, இப்படத்தை ஒருவர் பார்த்து ரசிப்பதற்கான தடையாகவும் உள்ளது.

பொறுமை வேண்டும்!

’லிவ்இன்’னில் வாழும் ஜோடிகளாக விஷாக் நாயர், காயத்ரி அசோக் நடித்துள்ளனர். அவர்கள் நெருக்கமாக இருக்கும் தருணங்கள் முதல் ஒருவரோடு ஒருவர் சாதாரணமாக உரையாடுவதை வரை பல காட்சிகள் இதில் இருக்கின்றன. அக்காட்சிகளில் அவர்களது இருப்பும் குரலும் இயல்பாக அமைந்துள்ளன.

முக்கியப் பாத்திரமாக வரும் மஞ்சு வாரியார் இதில் தொலைவில் தன் முகம் காட்டியிருக்கிறார். ஆனாலும், அப்பாத்திரத்தின் குணாதிசயங்கள் தெரியும் வகையிலேயே அவர் நடிப்பு அமைந்துள்ளது.

இவர்கள் தவிர்த்து வேலைக்காரப் பெண்மணி, பேய்க்கதை சொல்லும் பாட்டி, விளாக்கின் உள்ளடக்கத்தை தரும் மனிதர்கள் என்று மிகச்சிலர் இதில் முகம் காட்டியுள்ளனர்.

ஷினோஸின் ஒளிப்பதிவு, முழுக்க ‘ஹேண்டி’ பாணியில் அமைந்துள்ளது. ஒரு கேமிராவில் எடுக்கப்பட்ட ‘ஃபுட்டேஜ்’ பெரிதாக ‘எடிட்’ செய்யாமல் இருந்தால் எப்படியிருக்குமோ, அதனைத் திரையில் காட்டியிருக்கிறது.

இயக்குனர் சைஜு ஸ்ரீதரன் ஒரு படத்தொகுப்பாளர். அவரே இதனையும் தொகுத்திருக்கிறார். படத்தொகுப்பை மனதில் கொண்டே, அவர் திரைக்கதையையும் எழுதியிருக்கிறார். அவருடன் இணைந்து ஷப்னா முகம்மது இதன் எழுத்தாக்கத்தைக் கையாண்டிருக்கிறார்.

காடு, மேடு என்று பல இடங்களைச் சுற்றி வருகிறது திரைக்கதை. காட்டுக்குள் ஒரு உடைந்த படகு இருப்பதாகவும் காட்டப்படுகிறது. கலை இயக்குனர் அப்புண்ணி சாஜன் குழுவினரின் உழைப்பு அதில் தெரிகிறது.

படம் முழுக்க விஷாக்கும் காயத்ரியும் உடுத்தும் ஆடைகள், அப்பாத்திரங்கள் உணரும் மனநிலையை நம்மில் புகுத்துகிறது. ஆடை வடிவமைப்பாளர் சமீரா சனீஷ் அதன் பின்னிருக்கிறார்.

சூழலில் இருக்கும் ஒலிகளே படம் முழுக்க ஒலிப்பதால், மிகச்சில இடங்களில் வரும் சுஷின் ஷ்யாமின் பின்னணி இசையை நம்மால் தனித்து அறிய முடிவதில்லை. அது பாராட்டப்பட வேண்டிய விஷயமும் கூட.

இயக்குனர் சைஜு ஸ்ரீதரன் தனது முதல் படத்தை இந்தப் பாணியில் எடுத்ததன் மூலமாக, தீவிர சினிமா ரசிகர்களின் கவனத்தைப் பெற்றிருக்கிறார். ஒரு கேமிராவில் பதிவான ஃபுட்டேஜை கொண்டு கதை சொல்லும் பாணியில் சில ஹாரர், கேனிபல் படங்கள் இதற்கு முன் வந்திருக்கின்றன.

அந்த வகையில், இப்படம் வழக்கமானதொரு பழிவாங்கும் கதையாக இருக்கிறது. அதனைத் திரையில் சொல்லியிருக்கும் விதம், யார் கதையில் முதன்மையானவர் என்ற கேள்வியை எழுப்பும்விதமாக உள்ளது.

வழக்கமாக, இது போன்ற கதைகளில் அந்த விளாக்கர் ஜோடியைப் போலவே, அவர்கள் கண்காணிக்கும் பெண் மருத்துவர், இதர பாத்திரங்களின் வாழ்வும் திரைக்கதையில் இடம்பெறும். அதனைத் தவிர்த்து, ஒற்றைப் பார்வையை முன்வைக்கிறது இப்படம். நிச்சயமாக, அதனை உணரவும் ரசிக்கவும் பெரும் பொறுமை வேண்டும்.

யூடியூப் ஷார்ட்ஸ், இன்ஸ்டாரீல்ஸ் போன்று ‘ஃபுட்டேஜ்’ படமும் இரு விளாக்கர்களின் கேமிரா பார்வையைச் சொல்கிறது. அதன் வழியே அவர்களது மனநிலையும் நமக்கு உணர்த்தப்படுகிறது. ‘அந்த கதை சொல்லலை ரசிப்பதில் தவறென்ன இருக்கிறது’ என்பவர்களுக்கு மட்டுமே இந்த ‘ஃபுட்டேஜ்’ பிடிக்கும்..

  • உதயசங்கரன் பாடகலிங்கம்

#ஃபுட்டேஜ்_விமர்சனம் #மஞ்சுவாரியார் #விஷாக்_நாயர் #காயத்ரி_அசோக் #சைஜு_ஸ்ரீதரன் #ஃபுட்டேஜ்_விமர்சனம் #Manju_warrier #footage_movie_review #vishak_nayar #saiju_sridharan #gayathri_ashok

You might also like