நூல் அறிமுகம்: ஈத்து
தனது கவிதைத் தொகுப்புகளால் கவனம் ஈர்த்த முத்துராசா குமாரின் சமீபத்திய எழுத்து ‘ஈத்து’ என்ற பெயரில் சிறுகதைத் தொகுப்பாய் வெளியாகியிருக்கின்றது.
மாறிக் கொண்டிருக்கும் தமிழ்ச் சமூக அசைவியக்கத்தின் சாட்சியமாய் இருக்கின்றன கதைகள். 90-களுக்கு பிந்தியத் தமிழ்ச்சமூகம் நிலவுடமைச் சமூக உறவுகளிலிருந்தும், அதை கட்டிக்காத்த சமூக, பண்பாட்டு நிறுவனங்களிலிருந்தும் பாரிய மாற்றத்தை சந்தித்திருக்கின்றது.
இம்மாற்றத்தை புறவயமாகவும், தன்னளவிலும் உணரும் ஒரு தன்னிலையாக ஈத்து தொகுப்பில் வரும் கதைகளின் கதைச் சொல்லி இருக்கிறார்.
பழங்குடிகள், தோற்பாவை கலைஞர்கள், வயல் எலிகளை வேட்டையாட இடுக்கித் தயாரிப்பவர், முது கிழவிகள், புலம் பெயர் வாதைக்கு ஆளானவர்கள், ஊரை விட்டு வெளியேறவே முடியாதவர்கள் எனப் பலத்தரப்பட்ட கதை மாந்தர்கள் உள்ள போதும், அவர்களை புறவயமாக பார்த்து அவர்கள் வாழ்வின் மாற்றங்களை கதையாகச் சொல்லும் கதைச் சொல்லியின் குரலே அதிகம் தென்படுகின்றது.
சமூகம் மாறிக் கொண்டிருப்பதை, பழையது அழிந்துக் கொண்டிருப்பதை ‘ஈத்து’ கதைகளில் தொழிற்படும் உருவக முரண்நிலை பதிலீடு செய்ய முயல்கிறது.
இதனை metaphorical fallacy என்பார் மார்க்ஸிய அறிஞர் இஸ்துவான் மெஸ்ஜாரோஸ், உருவக வழு என்பது இதற்கு பெயர். எதார்த்ததைப் பதிலீடு செய்ய முயலும் உருவகம் தன்னளவில் சார்பு நிலையிலான உண்மையாக மட்டுமே இருக்க முடியும் அதன் வாக்கிய கட்டமைப்புக்கு அப்பால் அதற்கு எத்தகைய உண்மைத் தன்மையும் இல்லை.
நூல்: ஈத்து
ஆசிரியர்: முத்துராசா குமார்
சால்ட்- தன்னறம் வெளியீடு
பக்கங்கள்: 122
விலை: ரூ.152/-