அப்போதெல்லாம் மெட்ராஸ் வருவதென்பது பெருங்கனவு. 80-களின் தொடக்கத்தில், பிறந்த ஊரான தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து மதுரைக்கு குடும்பத்தோடு இடம்பெயர்ந்தோம். புதிய தொழில்… புதிய பாதை என மதுரையில் எனது தந்தையின் பயணம் தொடர்ந்தது.
பள்ளி தொடங்கி பால்யம் வரை மதுரையிலேயே கழிந்தது… என்றாலும் மெட்ராஸ் மீதான கவர்ச்சியும், காதலும் குறையவில்லை.
ஒருமுறை மதுரையில் இருந்து குடும்பத்தோடு மெட்ராசுக்கு ரயிலில் புறப்பட்டோம். சென்னை வரை ரயில் பயணம். பேருந்து வாயிலாக திருமலை செல்லத் திட்டம். அப்போது நேரடியான ரயில் போக்குவரத்து இல்லை என நினைக்கிறேன்.
எழும்பூர் ரயில் நிலையம் வந்தாகிவிட்டது. அங்கிருந்து பேருந்து பிடித்து திருமலை சென்றோம். இடையில் பேருந்து, தலைமைச் செயலக பேருந்து நிறுத்தத்தில் சிறிது நேரம் நின்றிருந்ததாக நினைவு. தலைமைச் செயலகத்தை வாய் பிளந்து பார்த்துக்கொண்டிருந்தேன்.
கனவில் வந்ததெல்லாம் கையில் கிடைத்தால் எப்படி இருக்கும், அப்படியான ஒரு உணர்வு. அவ்வளவுதான் சென்னைக்கும் எனக்குமான தொடர்பு.
தொலைக்காட்சியிலும், திரைப்படங்களிலும் பார்த்து பிரமித்த சென்னை எனக்கான புகழிடமாகவும் மாறும் என நினைக்கவில்லை.
என்னதான் ஊர்ப்பெருமை பேசினாலும், சென்னையை எப்போதும் விட்டுக் கொடுத்ததில்லை.
வாழ்வதற்காக வந்த என்னைப் போன்ற எத்தனையோ பேரை வாஞ்சையோடு அரவணைத்து வாழ்வளித்தது. வாழ்வளித்துக் கொண்டிருக்கிறது. இனியும் வாழ்வளிக்கும். லவ் யூ சென்னை.
நன்றி: முகநூல் குறிப்பு