ஒடுக்கப்பட்ட நிலையில் வாழும் மக்கள் அடக்குமுறைகளுக்கு எதிராக வெகுண்டெழுவதைச் சொல்லும் கதைகளைத் தென்னிந்திய சினிமாக்களில் பார்க்கத் தொடங்கி வெகுநாட்களாகிவிட்டது. அவற்றில் சில படைப்புகள் கலைப்படங்களாக மட்டுமல்லாமல், கமர்ஷியல் வெற்றியைப் பெறுகிற விதத்திலும் இருந்திருக்கின்றன.
அப்படியொரு நிலை வட இந்தியாவில் இருக்கிறதா? அங்கு இப்படிப்பட்ட கதைகளைச் சொல்ல வாய்ப்பு தரப்பட்டிருக்கிறதா? அவை பெருவாரியான ரசிகர்களைச் சென்றடைந்ததா? இந்த கேள்விக்குப் பதிலளிக்கும்விதமாக தற்போது இந்தியில் வெளியாகியிருக்கிறது ‘வேதா’.
அசீம் அரோரா எழுத்தாக்கத்தில், நிகில் அத்வானி இயக்கியுள்ள இப்படத்தில் ஜான் ஆபிரகாம், ஷர்வாரி வாஹ், ஆசிஷ் வித்யார்த்தி, அபிஷேக் பானர்ஜி, குமுத் மிஸ்ரா, தன்வி மல்ஹரா, அனுராக் தாகூர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமன்னா, ‘நாகினி’ மௌனி ராய் இதில் கௌரவத் தோற்றத்தில் வந்து போயிருக்கின்றனர்.
எப்படி இருக்கிறது இந்தப் படம்?
எழுச்சியின் தொடக்கம்!
ராஜஸ்தான் மாநிலத்தில் பார்மர் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் வேதா (ஷர்வாரி வாஹ்). பீர்வா சமூகத்தைச் சேர்ந்தவர். தாய், தந்தை, அண்ணன், அக்கா ஆகியோருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.
‘பிற மனிதர்களைப் போல நாம் ஏன் நடத்தப்படுவதில்லை’ என்ற கேள்வி பெற்றோர்களிடத்தில் இல்லாதபோதும், அப்பிள்ளைகளிடத்தில் நிறையவே இருக்கிறது.
வேதாவின் சகோதரர் வினோத்தும் உயர்சாதியைச் சேர்ந்த ஒரு பெண்ணும் காதலிக்கின்றனர். அது தெரிந்ததும், அப்பெண்ணை விட்டு விலகிவிடுமாறு அவரிடத்தில் தந்தை கெஞ்சுகிறார்.
வேதாவுக்குக் குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்று புகழ் பெற வேண்டுமென்ற ஆசை இருக்கிறது. கல்லூரியில் செயல்படுத்தப்படும் பயிற்சியில் சேர விரும்புகிறார். ஆனால், சாதி வேறுபாடுகள் அதற்குத் தடையாக நிற்கின்றன.
இந்நிலையில், அந்த கிராமத்திற்குப் புதிதாக வருகிறார் அபிமன்யு. எல்லை பாதுகாப்புப் படையில் மேஜர் நிலையில் இருந்த ராணுவ அதிகாரியான அவர், தன் மனைவி ராஷியை (தமன்னா) கொன்ற ஒரு தீவிரவாதக் கும்பலின் தலைவனைக் கொன்று விடுகிறார்.
அந்த நபரை உயிரோடு பிடிக்க வேண்டும் என்று உயரதிகாரி உத்தரவிட்டபிறகும் அவர் அவ்வாறு செய்த காரணத்தால், ராணுவ நீதிமன்ற நடவடிக்கைக்கு உள்ளாகிறார். ராஷியின் தந்தை பணியாற்றும் கல்லூரியில் குத்துச்சண்டை உதவி பயிற்சியாளராகச் சேர்வதற்காக, பார்மருக்கு வந்திருக்கிறார்.
வந்த இடத்தில், அந்த வட்டாரத்தையே ஆட்டிப் படைப்பவராக ஜிதேந்தர் பிரதாப் சிங் (அபிஷேக் பானர்ஜி) இருப்பதைக் காண்கிறார். அருகிலுள்ள ஊர்களை எல்லாம் சேர்த்துக்கொண்டு, அப்பகுதியின் தலைவராக தன்னை அறிவித்ததை அறிகிறார்.
ஜிதேந்தரின் தம்பி சுயோக், வேதா படிக்கும் அதே கல்லூரியில் பயில்கிறார். பேராசிரியர்களே அவருக்குப் பணிவிடை செய்ய வேண்டிய நிலைமை நிலவுகிறது.
தந்தையிடம் கெஞ்சிக் கூத்தாடிப் பெற்ற பணத்தை எடுத்துக்கொண்டு குத்துச்சண்டை பயிற்சியில் சேர வரும் வேதாவை, சுயோக்கும் அவரது ஆட்களும் அடித்து அவமானப்படுத்துகின்றனர். அந்த நிலையிலும், அபிமன்யுவிடம் சென்று ‘நான் குத்துச்சண்டை கற்றுக்கொள்ள வேண்டும்’ என்கிறார் வேதா. அவரும், யாருக்கும் தெரியாமல் குத்துச்சண்டை கற்றுத் தரத் தொடங்குகிறார்.
ஒருநாள், வினோத்தும் அவரது காதலியும் தனிமையில் இருப்பதைப் பார்த்துவிடுகிறார் சுயோக். அந்த விவகாரம், ஜிதேந்தர் தலைமையிலான சாதிப்பஞ்சாயத்தில் விவாதிக்கப்படுகிறது. இறுதியில், வேதாவின் குடும்பத்தினர் அனைவரும் அங்கு அவமானப்படுத்தப்படுகின்றனர்.
இந்த நிலையில், வேதாவின் சகோதரர் வினோத்தும் அந்தப் பெண்ணும் ஊரை விட்டுச் சென்றுவிடுகின்றனர். அது தனது சாதியினருக்கு அவமானம் என்று நினைக்கும் ஜிதேந்தர், வேதாவின் வீட்டுக்கு வருகிறார். ’உங்க பையனுக்கு நானே கல்யாணம் பண்ணி வைக்கறேன். அவனை திரும்ப வரச் சொல்லுங்க’ என்கிறார். ஜிதேந்தர் சொன்னபடியே, வினோத்துக்கும் அப்பெண்ணுக்கும் திருமணம் நடக்கிறது.
அப்போது, கொலை வெறியுடன் அங்கு வருகிறார் ஜிதேந்தர். மணமக்களைக் குத்திக் கொல்லும் அவர், அந்தக் குடும்பத்தில் ஒருவரும் உயிருடன் தப்பிக்கக் கூடாது என்று தனது ஆட்களிடம் சொல்கிறார்.
அதனை மீறி வேதா உயிர் பிழைத்ததையும், அபிமன்யு உதவியோடு ஜிதேந்தரின் ஆட்களை எதிர்கொள்வதையும் சொல்கிறது இப்படத்தின் மீதி.
சுற்றியிருப்பவர்கள் மீது அடக்குமுறைகள் ஏவப்படும்போது அமைதியாக இருந்த நாயகி, தன் மீதும் குடும்பத்தினர் மீதும் அது நிகழும்போது எத்தகைய வலியையும் மனநிலையையும் அடைகிறார் என்பதைச் சொல்கிறது ‘வேதா’. அவர் எழுச்சி கண்டாரா, இல்லையா என்பதோடு இப்படம் முடிவடைகிறது.
வழக்கமான கமர்ஷியல் படம்!
‘இப்பதான் ஜிம்ல வொர்க் அவுட் பண்ணேன்’ என்பது போல இரு கைகளையும் காற்றில் தவழவிட்டவாறு படம் முழுக்க வந்து போயிருக்கிறார் ஜான் ஆபிரகாம். ‘மனைவியை இழந்த சோகத்தில் தவிப்பவர்’ என்பதை உணர்த்த, இறுகிய முகத்துடனே உலா வந்திருக்கிறார். சண்டைக்காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார்.
வேதாவாக வரும் ஷர்வாரியை மையப்படுத்தியே இக்கதை அமைக்கப்பட்டுள்ளது. அதனை உணர்ந்து, அவர் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்.
வெவ்வேறுபட்ட பாத்திரங்களில் தோன்றினாலும், அதன் தன்மையை உணர்ந்து திரையில் பிரதிபலிப்பவர் அபிஷேக் பானர்ஜி. அதனால் தான் ‘ஸ்திரீ 2’வில் அவர் செய்யும் நகைச்சுவையைப் பார்த்து சிரிக்கும் நாம், இதில் அவரது நடிப்பைப் பார்த்து மிரள வேண்டியிருக்கிறது.
ஜான் ஆபிரகாமின் மனைவியாக வரும் தமன்னாவுக்குப் பெரிதாக வேலையில்லை. அவ்வப்போது ‘இண்டர்கட்’டில் வரும் பிளாஷ்பேக் காட்சிகளில் சில ஷாட்களுக்கு வந்து போயிருக்கிறார். அவ்வளவுதான். போலவே, ஒரு பாடலுக்கு நடனமாடியிருக்கிறார் மௌனி ராய்.
அபிஷேக்கின் உறவினராக நடித்துள்ள ஆசிஷ் வித்யார்த்தி மட்டுமே இதில் நமக்குத் தெரிந்த நடிகர். அவரும் வழக்கம்போல வந்து போயிருக்கிறார்.
இன்னும் குமுத் மிஸ்ரா, ராஜேந்திர சாவ்லா, அனுராக் தாகூர், தன்வி மல்ஹரா, ஊர்வசி துபே, ரஜோஸ்ரீ, ஷிதிஜ் சௌகான், பரிதோஷ் சந்த் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.
இந்தப் படம் இந்தியில் இருந்து தமிழ், தெலுங்குக்கு ‘டப்’ செய்யப்பட்டுள்ளது. தமிழ் பதிப்பில் வசனங்கள் தெளிவாக ஒலிக்கின்றன. குரலிலும் சரி, வசனங்களிலும் சரி, செயற்கைத்தனம் தென்படவில்லை என்பது ஆறுதல் தரும் விஷயம்.
மலாய் பிரகாஷின் ஒளிப்பதிவு, மாஹிர் ஜவேரியின் படத்தொகுப்பு, பிரியா சுஹாஸின் தயாரிப்பு வடிவமைப்பு உட்படப் படத்தில் இடம்பெற்ற தொழில்நுட்ப உழைப்பு அனைத்தும் ஒன்றிணைந்து, இயக்குனர் நிகில் அத்வானியின் ‘கமர்ஷியல் கதை சொல்லலுக்கு’ உதவிகரமாக அமைந்துள்ளன.
அர்மான் மாலிக், மனன் பரத்வாஜ், யுவா, ராகவ் – அர்ஜுன் ஆகியோர் தந்திருக்கும் பாடல்கள் ஓகே ரகத்தில் உள்ளன. ஆனால், அதை மறக்கடிக்கும் விதமாகக் காட்சிகளுடன் பொருந்தி நிற்கிறது கார்த்திக் ஷாவின் பின்னணி இசை.
ஜுனைத் ஷெய்க் சண்டைக்காட்சிகளை வடிவமைத்திருக்கும் விதம், ஆங்கிலப் படங்களைப் பார்த்தாற் போன்றிருக்கிறது. ஆனால், சண்டைக்காட்சிகளுக்குத் தந்த முக்கியத்துவத்தை இதர காட்சிகளில் இயக்குனர் காட்டவில்லை. அதனால், இந்த படத்தில் லாஜிக் சார்ந்து பல கேள்விகள் நமக்குள் எழுகின்றன.
ஒரு பகுதியில் வாழும் மக்களையும், அவர்களது வாழ்க்கைமுறையில் நிலவும் முரண்களையும் சொல்லும்போது, அதில் ‘யதார்த்தம்’ அதிகம் தென்பட வேண்டும். ஆனால், இப்படம் முழுக்கவே ‘கமர்ஷியல் சினிமா வாடை’ அதிகம் நிறைந்திருக்கிறது.
என்னதான் வேதா என்ற இளம்பெண்ணைக் கதை மையப்படுத்தினாலும், அவருக்குத் துணையாக நிற்கும் புஜபல பராக்கிராமம் கொண்ட அபிமன்யுவையே திரைக்கதை சுற்றி வருகிறது.
‘அதுதான் தேவை’ என்று திட்டமிட்டு, அவ்வாறு கதை, திரைக்கதை, வசனத்தை அமைத்திருக்கிறார் அசீம் அரோரா. ‘அசுரன்’, ‘கர்ணன்’ உட்படப் பல படங்களைப் பார்த்துவிட்ட காரணத்தால், ‘வேதா’வில் நாம் புதிதாக எதையும் காண முடிவதில்லை.
ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை, வரலாறு, எதிர்காலம் சார்ந்த அவர்களது கனவுகளைச் சொல்கிற படங்கள் தமிழ், மலையாள சினிமாக்களில் அதிகம் வெளியாகிவரும் இக்காலகட்டத்தில், ராஜஸ்தான் பின்னணியில் அமைந்த ‘வேதா’வின் மீது வெளிச்சம் தானாக விழுகிறது.
பெருவாரியான ரசிகர்கள் பார்க்கிற ‘கமர்ஷியல் படமாக’ அமைந்திருப்பதால், இதில் வருகிற விஷயங்கள் நிச்சயமாகப் பொதுவெளியில் விவாதத்தை உண்டாக்கும். அதனாலேயே, தணிக்கைத் துறையில் பல ‘கட்’களை மீறி இப்படம் திரையில் வெளியாகியிருக்கிறது. அந்த வகையில், ‘வேதா’ ஒரு குறிப்பிடத்தக்க சினிமா தான்!
– உதயசங்கரன் பாடகலிங்கம்