‘சீயான்’விக்ரம் நடிப்பில் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை அடுத்து தயாரான படம் ‘தங்கலான்’. பா.ரஞ்சித் இயக்கத்தில் பல ஆண்டுகளாக இந்தப்படம் உருவாக்கப்பட்டது.
படத்தில் மாளவிகா மோகனன் விக்ரமிற்கு ஜோடியாக நடிக்க, பார்வதி, பசுபதி, ஹரிகிருஷ்ணன் அன்புதுரை உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் கோலார் தங்கவயல் பகுதியை மையமாகக் கொண்டு கதைக்களம் பின்னப்பட்டிருந்தது. படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.
சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. வரும் 30-ம்தேதி முதல் இந்தியிலும் வெளியாக உள்ளது.
படம் ரிலீஸ் ஆகி நேற்றுடன் (ஞாயிற்றுக்கிழமை) நான்கு நாட்கள் ஆகிறது. இந்த நிலையில், முதல் மூன்று நாளில் படத்தின் வசூல் தொடர்பாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
படம் முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் 26 கோடியே 44 லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளது. இதனை படக்குழுவே தெரிவித்தது.
மேலும் 2024-ம் ஆண்டில் இதுவரை வெளியான தமிழ் படங்களில் முதல் நாளில் அதிக வசூலைக் குவித்த படமாக இந்தப் படத்தின் முதல் நாள் வசூல் அமைந்துள்ளது. படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.
வாய்வழியாக (மவுத்டாக்) விக்ரம் ரசிகர்கள், படத்தினைப் புகழ்ந்து பேசி படத்தை மற்றவர்கள் பார்க்க ஊக்குவித்து வருகின்றனர்.
அரசியல் தளத்தில் இருக்கும் பல கட்சித் தலைவர்கள் ‘தங்கலான்’ படத்தை சிலாகித்து வருகின்றனர். ‘ரிப்பீட்’ ஆடியன்ஸ் வந்து கொண்டிருப்பதால், வசூல் அதிகரித்த வண்ணம் உள்ளது.
வெளியான அடுத்த இரண்டு நாட்களில் படம், 27 கோடியே 20 லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளது. இதன் மூலம் ‘தங்கலான்’ முதல் மூன்று நாட்களில் 53 கோடியே 64 லட்சம் ரூபாயை வசூல் செய்துள்ளது.
நேற்று (18-ம் தேதி) வாரத்தின் இறுதி நாள் என்பதால், படத்தின் வசூல் முதல் நாளைப் போலவே ‘கல்லா’ கட்டியுள்ளது. இதனால் படத்தின் வசூல் 100 கோடி ரூபாயை எட்டி இருக்கும் என கூறப்படுகிறது.
– பாப்பாங்குளம் பாரதி.