கனவு மெய்ப்பட வேண்டும்; கைவசமாவது விரைவில் வேண்டும்!

திரைத் தெறிப்புகள்-18:

*
காலத்தால் மறைந்து பல்லாண்டுகள் ஆனாலும் மகாகவி பாரதியின் நம்பிக்கையூட்டும் சொற்கள் அற்புதமாக நமக்கு முன்னால் உயிர்த் துடிப்புடன்  தொடர்ந்து இருந்து கொண்டிருக்கின்றன.

“மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்…

– என்று துவங்கும் பாரதியின் பாடல் பல திரைப்படங்களில் இடம்பெற்றிருக்கிறது. பல கர்நாடக இசைப் பாடகர்களும், திரையிசைப் பாடகர்களும் இதே பாடலை வெவ்வேறு ராக வடிவங்களில் பாடியிருக்கிறார்கள்.

எதிலும் ரத்தினச் சுருக்கமாக நறுக்கென்று எழுதிப் பழக்கப்பட்ட பாரதியின் உணர்ச்சிப் பூர்வமான இந்தப் பாடலை 1985-ம் ஆண்டு வெளிவந்த ‘சிந்து பைரவி’ படத்தில் பாடகர் ஜேசுதாஸ் வளமான குரலில் பாட, அதற்கு வாயசைத்து வெவ்வேறு முக பாவங்களைக் காட்டி நடித்திருப்பார் நடிகர் சிவகுமார்.

ஞான ராஜசேகரன் இயக்கிய ‘பாரதி’ திரைப்படத்திலும் இதே பாடல் எல்.வைத்திய நாதனின் இசையமைப்பில் இடம்பெற்றிருக்கும். இதே பாடலை ‘கள்வனின் காதலி’ படத்தில் டி.எம்.எஸ்.ஸூம், பானுமதியும் பாடியிருப்பார்கள்.

இந்தப் பாடலைக் கேட்கும்போது பாரதியின் கீழ்க்கண்ட வரிகள் மனதோடு உறவாடுவதைக் கேட்பவர்கள் உணர முடியும்.

“கண் திறந்திட வேண்டும்.
காரியத்தில் உறுதி வேண்டும்.
பெண் விடுதலை வேண்டும்.
பெரிய கடவுள் காக்க வேண்டும்.
மண் பயனுற வேண்டும்.
வானகமிங்கு தென்பட வேண்டும்.
உண்மை நின்றிட வேண்டும்.”

– என்று நிறைவடையும் மகாகவியின் பாடலுக்கு இப்போதும் எவ்வளவு உற்சாகம் ஊட்டும் உயிர்ப்புச் சக்தி இருக்கிறது.

You might also like