ஒரே ஓர் ஒலிம்பிக்கில், ஒரே ஒரு தங்கப் பதக்கம் பெற்றாலே உலகம் ஒருவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும். ஆனால் ஒரே விளையாட்டில், நான்கு ஒலிம்பிக்குகளில் நான்கு தங்கப் பதக்கம் வென்றவரை எப்படி கொண்டாடுவது? எப்படிப் பாராட்டுவது?
அதுபோன்ற ஓர் ஆளுமைதான் அல்பிரட் ஒர்டர். அமெரிக்க வட்டெறியும் (Discus) வீரரான ஒர்டர், வட்டெறிவது எப்படி என்று யாரிடமும் போய் கற்றவரில்லை. ஆனால், 12 ஆண்டுகாலமாக ஒலிம்பிக் வட்டெறியும் போட்டியில் ஒர்டர்தான் ஆட்சி செலுத்தினார். அவரை யாராலும் அசைக்க முடியவில்லை.
1956 மெல்பர்ன் ஒலிம்பிக்கில்தான் ஒர்டரின் ஆட்டம் ஆரம்பமானது. ஒர்டர் அப்போது இருபது வயது இளைஞர். ஒர்டர் விட்டெறிந்த வட்டு, 56.36 மீட்டர் தொலைவைப் போய் தொட்டது. அதன்மூலம் ஏற்கெனவே இருந்த உலக சாதனையை தனது முதல் ஒலிம்பிக் போட்டியிலேயே முறியடித்தார் ஒர்டர். தங்கப் பதக்கத்தை அவர் தனதாக்கிக் கொண்டார்.
அடுத்ததாக 1960 ரோம் ஒலிம்பிக். அந்த காலகட்டத்தில் மற்றொரு அமெரிக்க வீரரான ரிங் பப்கா, வட்டெறிவதில் உலக சாதனை ஒன்றை நிகழ்த்தியிருந்தார்.
ரோம் ஒலிம்பிக். தகுதிச்சுற்றுப் போட்டியில் 58.42 மீட்டர் தொலைவுக்கு வட்டை வீசி எறிந்தார் ஒர்டர். இது ஓர் ஒலிம்பிக் சாதனை. ஆனால், இறுதிப் போட்டியில் முதல் சில வாய்ப்புகளில் அவரால் இந்த இலக்கை எட்ட முடியவில்லை. 57.65 மீட்டரையே தொட முடிந்தது.
இந்த நேரம் உலக சேம்பியனான ரிங் பப்கா, ஒர்டருக்கு ஒன்றைச் சொல்லித்தந்தார். ‘நீ வட்டை விட்டெறிவதற்காக சுழலும்போது இடதுகையை மிகவும் தாழ்வாகக் கொண்டு போகிறாய். அப்படிச் செய்யாதே!’ என்றார் பப்கா.
பப்கா சொன்னதைக் கடைபிடித்தார் ஒர்டர். ரோம் ஒலிம்பிக்கில் 59.18 மீட்டர் தொலைவுக்கு வட்டெறிந்து, ரிங் பப்காவின் சாதனையை அவர் முறியடித்தார். அதாவது அறிவுரை தந்த பப்காவை அவர் வீழ்த்தினார். கூடவே தங்கத்தையும் வென்றார்.
அதன்பிறகு அடுத்தடுத்து வந்த 1964 டோக்கியோ ஒலிம்பிக், 1968 மெக்சிகோ ஒலிம்பிக் போட்டிகளிலும் ஒர்டர் தங்கம் வென்றார். ஆக, நான்கு ஒலிம்பிக் போட்டிகள். நான்கு தங்கம்!
இப்போது இன்னொரு கதை.
1960-களில், நீளம் தாண்டும் வீரர்களுக்கு ஒரு பெருங்கனவு இருந்தது. 8.53 மீட்டர் தொலைவை, அதாவது 28 அடி தூரத்தை முதல் ஆளாகத் தாண்டவேண்டும் என்ற கனவு அது.
அந்தநிலையில், 1968 மெக்சிகோ ஒலிம்பிக் வந்தது. அதில் அமெரிக்க வீரரான பாப் பிமோன் என்ற 23 வயது கருப்பின இளைஞரும் நீளம் தாண்டும் போட்டியில் பங்கேற்றார்.
தடகள தகுதிச்சுற்றுப் போட்டி, பிமோனுக்கு பெரும் தடைக்கல்லாக இருந்தது. அதில், மொத்தம் 3 வாய்ப்புகள்தான்.
பிமோன், இரண்டு தவறான தாவல்களைத் தாவி, முதல் இரு வாய்ப்புகளையும் வீணடித்து விட்டார். எஞ்சியிருந்தது ஒரே ஒரு தாவல்தான். அதில் சரியாகத் தாவி அவர் தகுதி பெற்றால்தான் இறுதிச்சுற்றை நோக்கிப் பயணப்பட முடியும். இல்லாவிட்டால் கோவிந்தா.
அந்த நேரம் பிமோனுக்கு அறிவுரைச் சொன்னார் சக அமெரிக்க வீரர் ஒருவர். அவர் பெயர் ரால்ப் பாஸ்டன். உயரம் ஆறடி மூன்றங்குலம். 1964 டோக்கியோ ஒலிம்பிக் நீளம் தாண்டும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றவர் அவர்.
‘தடுப்புப் பலகைக்கு சில அங்குலம் முன்பே துள்ளிப் பாய்ந்துவிடு’ என்பதுதான் பாஸ்டன் கூறிய அறிவுரை.
பாஸ்டனின் அறிவுரையை ஏற்று பிமோன் 3-வது தாவலைத் தாவினார். இறுதிப்போட்டிக்கு பிமோன் தகுதி பெற்றார்.
இறுதிப்போட்டியில், மொத்தம் 18 வீரர்கள் பங்கேற்றனர். அவர்களில் 1964 டோக்கியோ ஒலிம்பிக்கில், தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்ற லின் டேவிஸ், ரால்ப் பாஸ்டன், இகோர் டெர் ஒவானேசையான் என்ற மூவரும் இருந்தார்கள்.
பிமோனின் முறை வந்தது. பாஸ்டன் எழுப்பிய உற்சாகக் குரல் காதில் ஒலிக்க, நீளம் தாண்டுவதற்கான ஓடுபாதையில் அதிவேகமாக ஓடிவந்தார் பிமோன். அந்த ஓட்டத்தின்போது மொத்தம் 29 முறைதான் அவரது கால் தரையில் பாவியது.
அதன்பிறகு இயந்திரம் பொருத்தாத ஜெட் எந்திரம் போல அவர் வானில் எகிறினார். தரையை விட்டு முழுதாக ஆறடி உயரத்தில் ஏறி பறந்து வந்து விழுந்தார்.
யாராலும் நம்ப முடியவில்லை. பிமோன் 8.90 மீட்டர் தொலைவைத் தாண்டி இருந்தார். அதன் மூலம் 28 அடியை மட்டுமல்ல, 29 அடி தொலைவையும் அவர் தாண்டிக் கடந்திருந்தார்.
தகுதிச்சுற்றில் ததிங்கிணத்தோம் போட்டு, கடைசித் தாவலில் இறுதிப் போட்டிக்கு நுழைந்த ஒருவர், இறுதிப்போட்டியின் முதல் தாவலிலேயே இப்படி ஓர் உலக சாதனையை நிகழ்த்துவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
நீளம் தாண்டுவதில் அதற்கு முன்பிருந்த உலக சாதனையை விட 55 சென்டி மீட்டர் அதிகம் தாண்டி பிமோன் வெற்றி பெற்றிருந்தார்.
அளவீட்டுக் கருவிகளால் அளக்க முடியாத தொலைவுக்கு அவர் தாவிக் குதித்திருந்தார். அதனால் அளவுநாடா மூலம் பிமோன் தாண்டிய தொலைவு அளக்கப்பட்டது.
பிமோனுக்கு மெட்ரிக் அளவுகள் பற்றி சரிவர தெரியாது. ஆகவே, தான் செய்த சாதனை என்ன என்பதை அவரால் சரிவர புரிந்து கொள்ள முடியவில்லை.
அவர் நேராக ரால்ப் பாஸ்டனிடம் ஓடினார். பிமோனைக் கட்டித்தழுவிக் கொண்ட பாஸ்டன். ‘நண்பா! நீ 29 அடி தூரம் தாண்டியிருக்கிறாய்!’ என்று தெளிவுபடுத்தினார்.
சரி. இப்போது பதிவின் முடிவுக்கு வருவோம்.
அல் ஒர்டருக்கு தட்டெறிவதில் டிப்ஸ் தந்த ரிங் பப்காவும் சரி, பிமோனுக்கு ஹைஜம்ப் தாண்ட ஐடியா தந்த ரால்ப் பாஸ்டனும் சரி. அவர்களும் அதே களத்தில்தான் நின்றார்கள். ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல வேண்டும் என்ற ஆசை அவர்களுக்கும் இருந்திருக்கும்.
இருந்தும்கூட, சொந்தக்காசில் சூனியம் வைப்பதுபோல, சக போட்டியாளன் ஒருவனுக்கு அறிவுரை தந்து, அவனை அவர்கள் வெற்றி பெற வைத்தது எவ்வளவு மகத்தான செயல்?
இன்று ஒர்டரைத் தெரிந்த அளவுக்கு ரிங் பப்காவை உலகுக்குத் தெரியாது. பிமோனைத் தெரிந்த அளவுக்கு தந்த ரால்ப் பாஸ்டனை உலகுக்குத் தெரியாது.
உண்மையில், ஒலிம்பிக் ஆடுகளத்தில், இப்படி மனித மாண்புகளை காட்டிய எத்தனையோ மாபெரும் வீரர்கள் இருந்திருக்கிறார்கள். இனிமேலும் இருக்கப் போகிறார்கள்.
ஒருவேளை பதக்கம் எதையும் அவர்கள் வெல்லத் தவறிவிட்டாலும்கூட உண்மையில் கொண்டாடப்பட வேண்டியவர்கள் இதுபோன்ற வீரர்கள்தான். காரணம், அவர்கள்தான் உண்மையான விளையாட்டு வீரர்கள். வரலாற்று நாயகர்கள்.
– நன்றி: மோகன ரூபன் முகநூல் பதிவு