இசைஞானி இளையராஜாவுக்கும் பூக்களுக்கும் அப்படி என்ன ராசியோ தெரியாது?
அவரது புகழ்பூத்த பல பாடல்கள், பூக்களின் பெயர்களில்தான் தொடங்கி இன்றும் மலர்ந்து மணம் வீசி வருகின்றன.
பதினாறு வயதினிலே (1977) படத்தில் இருந்து இது ஆரம்பித்திருக்கலாம். அந்தப் படத்தில், இரண்டு மலர்ப்பாடல்கள் இடம்பெற்றன.
1. ‘செவ்வந்திப் பூமுடிச்ச சின்னக்கா சேதி என்னக்கா’,
2. ‘செந்தூரப் பூவே செந்தூரப் பூவே சில்லென்ற காற்றே’.
இரண்டாவது பாடலை எழுதியவர் கங்கை அமரன். ‘செந்தூரப் பூ என்று ஒரு பூவே இல்லை’(!) அவர் பின்னாளில் சொன்னதாக ஞாபகம்.
‘பூவரசம் பூ பூத்தாச்சு பொண்ணுக்குச் சேதியும் வந்தாச்சு’ என்ற பாடல் 1978ல் வெளிவந்த கிழக்கே போகும் ரயில் படத்தில் இடம்பெற்ற பாடல். அதே ஆண்டு வெளிவந்த முள்ளும் மலரும் படத்தில் இடம்பிடித்த பாடல், ‘செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல் என்மீது மோதுதம்மா’.
அரிதாக மலரும் குறிஞ்சி மலரும் இசைஞானியின் பாடலுக்குத் தப்பவில்லை. ‘குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை உறிஞ்சத் துடிக்கும் உதடு இருக்க’ என்ற பாடல், அழகே உன்னை ஆராதிக்கிறேன் (1979) படத்தில் இடம்பெற்றது.
1982ல் நினைவெல்லாம் நித்யா படத்தில், ‘ரோஜாவைத் தாலாட்டும் தென்றல் பொன்மேகம் நம் கண்கள்’.
1983ல், ‘செவ்வரளித் தோட்டத்திலே உன்னை நெனச்சேன் தேடிக்கிட்டு பாடுதம்மா’ என்று ஒரு பாடல். படம்: பகவதிபுரம் ரயில்வே கேட்.
1984ல், ‘ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்’. (கொம்பேறி மூக்கன்)
1986 ஓர் அற்புதமான ஆண்டு. ‘மதுர மரிக்கொழுந்து வாசம் என் ராசாத்தி உன்னுடைய நேசம்’, ‘செண்பகமே செண்பகமே தென்பொதிகை சந்தனமே’ என இரு மலர்ப்பாடல்கள், எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் மலர்ந்து மணம்வீசிய ஆண்டு அது.
‘கொடியிலே மல்லிகைப் பூ மணக்குதே மானே’ என்ற பாடல் இடம்பெற்ற கடலோரக் கவிதைகள் படம் வெளிவந்த ஆண்டும் அதுதான்.
‘வாசலிலே பூசணிப்பூ வச்சிப்புட்டா வச்சிப்புட்டா’ என்று வாசலில் பூசணிப்பூவை வைத்த ஆண்டு 1988. (படம்: செண்பகமே செண்பகமே).
அதே ஆண்டு. மணமகளே வா படத்தில் ‘ஆவாரம்பூவைத் தொட்டு ஆலோலம் பாடும் காற்று’ என்று ஒரு பாடல். இந்தப் படம், பஞ்சு அருணாசலம் அவர்கள் இயக்கிய முதல் படமாம்.
1991ல் ‘கூடலூரு குண்டுமல்லி’ (படம்: கும்பக்கரை தங்கையா), 1992ல் ‘அடுக்குமல்லி எடுத்துவச்சு தொடுச்சு வச்சேன் மாலை’ (படம்: ஆவாரம்பூ). அதே ஆண்டில், ‘பாரிஜாத பூவே அந்த தேவலோகத் தேனே’ (படம்: என் ராசாவின் மனசிலே) (பாரிஜாதம் என்பது தமிழில் பவளமல்லி)
1992ல் செம்பருத்தி படத்தில், ‘செம்பருத்திப்பூவு சித்திரத்தைப் போல அம்பலத்தில் ஆடுகிறேன்’
1993ல், ‘ஒரு மந்தாரப்பூ வந்தா மந்திரமா அவ முத்தம் ஒன்னு’ (சின்ன ஜமீன்)
1994. மல்லிகை மொட்டு மனசைத் தொட்டு இழுத்த ஆண்டு. ‘மல்லிகை மொட்டு மனசைத் தொட்டு இழுக்குதடி மானே (படம்: சக்திவேல்)
1997ல், ‘செம்பருத்தி செம்பருத்தி பூவைப் போல பெண் ஒருத்தி’ (படம்: ராமன் அப்துல்லா)
அது என்னவோ தெரியவில்லை?
1997க்குப் பிறகு பூக்களின் பெயரில் தொடங்கும் பாடல்கள் இசைஞானியின் இசையில் வந்ததாகத் தெரியவில்லை.
அதேப்போல, ‘பட்டுப்பூவே மெட்டுப்பாடு’, ‘பூவே செம்பூவே உன் வாசம் வரும்’, ‘செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ?’ என்ற பாடல்கள் எல்லாம் பூ வரிசைப் பாடலில் வருமா என்பதும் தெரியவில்லை.
நன்றி: மோகன ரூபன் முகநூல் பதிவு.