நம்மூர் பெண்கள் இன்னும் ரொம்பத் தூரம் போகவேண்டியிருக்கிறது!
இலண்டன் பயணம் குறித்து பத்திரிகையாளர் எஸ்.கே. முருகன்
உலகின் மிகப்பெரிய மில்லினியம் வீல் எனப்படும் லண்டன் ஐ, பிக் பென் டவர் கிளாக், ரிவர் குரூஸ் பார்த்துவிட்டு ராயல் வாக் ஏரியாவில் நிதான நடை போட்டோம். ஜிலுஜிலு காற்று முகத்தில் அறையும் நேரத்திலும் ஐஸ் க்ரீம், விஸ்கிக்கு வரிசையில் நிற்கிறார்கள்.
நம்மூர் பொருட்காட்சியில் கடற்கன்னி, மேஜிக் கண்ணாடி, பேய் வீடு பாணியில் இங்கே பேடிங்டன், லயன் கிங், லண்டன் டார்க் ஹிஸ்டரி என்று ஹைடெக் ஷோ நிறைய நடக்கிறது.
பாடகர், இசையமைப்பாளர், வித்தைக்காரர்கள் தங்கள் அபாரத் திறமையைக் காட்டியபடி, ‘ஐந்து பவுண்டுக்குக் குறைவாகக் கொடுத்து என் திறமையை அவமதிக்காதீர்கள்’ என்று அதிரவைக்கிறார்கள்.
இதையெல்லாம் வேடிக்கைப் பார்த்தபடி யாருமில்லாத ஒரு பெஞ்சில் அமர்ந்தேன். நிறைய பெஞ்ச் காலியாக இருந்தாலும் என்னை நோக்கி ஒரு வெள்ளைக்காரப் பெண் தள்ளுவண்டியில் பிள்ளையுடன் வந்து அமர்ந்தார்.
சிரிக்கலாமா… வேண்டாமா என்று நான் யோசித்தபடி அவரை பார்த்துக் கொண்டிருந்தேன். வண்டியில் இருந்து குழந்தையைத் தூக்கி மார்போடு அணைத்தவர், சட்டென ஆடையை இறக்கி பிள்ளைக்குப் பால் கொடுக்கத் தொடங்கிவிட்டார்.
ஒரு புழு, பூச்சியாகக்கூட அந்த பெண் என்னை கண்டுகொள்ளவில்லை என்றாலும், தமிழரின் பாரம்பரியத்தைக் காப்பதற்காக நைசாக அந்த இடத்தைவிட்டு நழுவி நீண்ட தூரம் வந்த பிறகே நிம்மதியாக மூச்சு விட முடிந்தது.
ரயில் பயணத்தில் கணவன் சேலையால் மறைப்பு ஏற்படுத்திய பிறகும் லைட்டை அணைக்கச் சொல்லிவிட்டு பால் கொடுக்கும் நம்மூர் இளம் பெண்கள் இன்னமும் ரொம்பத் தூரம் போகவேண்டியிருக்கிறது.
நன்றி: முகநூல் குறிப்பு