பாரிஸ் ஒலிம்பிக்: பதக்கப் பட்டியலில் அமெரிக்கா முதலிடம்!

33-வது ஒலிம்பிக் விளையாட்டுத் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த மாதம் 26-ம் தேதி கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வந்தது.

இந்த போட்டிகளில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். கடந்த 16 நாட்களாக நடைபெற்று வந்த விளையாட்டுப் போட்டிகள் நேற்று கோலகலமாக நிறைவடைந்தன.

இதில், 40 தங்கம். 44 வெள்ளி, 42 வெண்கலம் என மொத்தம் 126 பதக்கங்களுடன் அமெரிக்கா முதலிடத்தைப் பிடித்துள்ளது. 40 தங்கம். 27 வெள்ளி, 24 வெண்கலம் என மொத்தம் 91 பதக்கங்களுடன் சீனா 2-வது இடத்தையும் 20 தங்கம், 12 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 45 பதக்கங்களுடன் ஜப்பான் 3-வது இடத்தையும் பிடித்துள்ளன.

ஒரு வெள்ளி, 5 வெண்கலப் பதக்கங்கள் என 6 பதக்கங்களை வென்ற இந்திய அணி 71-வது இடத்தைப் பிடித்துள்ளது.

பாரிஸில் உள்ள ஸ்டேட் டீ பிரான்ஸ் மைதானத்தில் நடைபெற்ற நிறைவு விழாவை 80 ஆயிரத்துக்கும் அதிகமான ரசிகர்கள் கண்டுகளித்தனர். நிறைவு விழாவையொட்டி வீரர், வீராங்கனைகளின் கண்கவர் அணிவகுப்பு நடைபெற்றது.

இந்த அணிவகுப்பு விழாவில் இந்திய அணி சார்பில் துப்பாக்கிச் சுடுதலில் 2 வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாகர், வெண்கலம் வென்ற இந்திய ஹாக்கி அணியின் கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் ஆகியோர் தலைமை தாங்கி தேசியக் கொடியை ஏந்தி சென்றனர்.

இதைத் தொடர்ந்து 2028-ல் அடுத்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்தும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயர் கரென் பாஸ்சிடம் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் கொடி ஒப்படைக்கப்பட்டது.

 

You might also like