ரூ.60 கோடி சம்பளம் வாங்கும் நெல்சன்!

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரங்களுக்கு இணையாக இயக்குநர்களும், தங்கள் ஊதியத்தை உயர்த்தி விட்டார்கள். தமிழில் அதிக சம்பளம் வாங்கும் டைரக்டராக இருந்தவர் ஷங்கர்.

‘இந்தியன் -2‘ படத்துக்கு அவர் 40 கோடி ரூபாய் வாங்கினார். இந்தத் தகவலை அந்தப் படத்தை தயாரித்த ‘லைகா‘ நிறுவனம் நீதிமன்றத்தில் பகிரங்கமாக வெளிப்படுத்தியது அனைவரும் அறிந்த செய்தி.

ஷங்கருக்கு அடுத்தபடியாக கூடுதல் ஊதியம் பெற்றவர், அவரது சிஷ்யர் அட்லீ. தமிழில் 20 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கி வந்த அட்லீ, இந்தியில் ஷாருக்கானை வைத்து டைரக்டு செய்த ‘ஜவான்’ படத்துக்கு 30 கோடி ரூபாய் ஊதியம் பெற்றுக்கொண்டார்.

சம்பள விஷயத்தில், இப்போது, இந்த இரண்டு இயக்குநர்களையும் தாண்டி முதலிடத்தில் இருக்கிறார், நெல்சன் திலீப்குமார். ‘கோலமாவு கோகிலா‘ படம் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமானார். முதல் படத்திலேயே நல்ல பெயர் கிடைத்தது.

குறுகியக் காலத்திலேயே ‘இளைய தளபதி’ விஜயை, நெல்சன் நெருங்க முடிந்தது. விஜயை வைத்து ‘பீஸ்ட்’ படத்தை டைரக்டு செய்தார், ஆனால் அந்தப் படம் ஓடவில்லை.

எனினும் உடனடியாக ‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்தை, நாயகனாக வைத்து படம் செய்யும் வாய்ப்பு நெல்சனை தானாக தேடி வந்தது.

சன் பிக்சர்ஸ் தயாரித்த அந்தப்படம் தான் –  ’ஜெயிலர்’.

சூப்பர் ஸ்டாரைத் தவிர அந்தப் படத்தில் மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராப், விநாயகன், ரம்யா கிருஷ்ணன், தமன்னா பாட்டியா, வசந்த் ரவி, மிர்னா மேனன், யோகி பாபு மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்தனர்.

200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான ‘ஜெயிலர்’ திரைப்படம் விமர்சகர்களால் நேர்மறையான வரவேற்பைப் பெற்றது. அதிக வசூலும் செய்தது. மொத்த வசூல் 650 கோடி ரூபாய் என தகவல்.

இதனால் ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க ’சன் பிக்சர்ஸ்‘ திட்டமிட்டது. ‘ஜெயிலர்-2′ என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் ரஜினி நடிக்க நெல்சன் இயக்குகிறார். முதல் பாகத்தில் இடம் பெற்ற யோகிபாபு உள்ளிட்டோர் இதிலும் நடிக்க உள்ளனர்.

ஜெயிலர் படத்துக்கு 10 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய நெல்சன், இரண்டாம் பாகத்துக்கு 60 கோடி ரூபாய் வாங்கியுள்ளாராம்.

’காற்றிருக்கும் போதே தூற்றிக்கொள்’னு பெரியவங்க சொன்னதை, சரியாப் பிடிச்சுக்கிட்டார் நெல்சன்.

வெல்டன்.

– பாப்பாங்குளம் பாரதி.

You might also like