நண்பன் ஒருவன் வந்த பிறகு: 2-ம் பாதியில் முளைக்கும் சிறகு!

வெற்றி பெற்ற ஒரு திரைப்படத்தை அணுஅணுவாக ரசித்து, அதே போன்று இன்னொரு திரைப்படத்தை உருவாக்கலாமா? தமிழ் சினிமாவில் அப்படிப் பல படங்கள் தயாராகியிருக்கின்றன. அவற்றுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பும் கிடைத்திருக்கின்றன. அந்த வரிசையில் இடம்பெறும் வகையில், ‘சென்னை 600028’ உள்ளிட்ட சில ‘நாஸ்டால்ஜியா’ வகையறா திரைப்படங்களைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருப்பதை உணர்த்தியது ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ பட ட்ரெய்லர்.

‘மீசைய முறுக்கு’ படத்தில் நடித்த அனந்த் ராம், இந்தப் படத்தை எழுதி இயக்கியதோடு நாயகனாகவும் தோன்றியிருக்கிறார்.

‘சென்னை 600028’ போல இனிமையான அனுபவங்களைத் தருகிறதா ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’?

ஜெயிக்கிற குதிர..!

ஏ.ஆர்.ரஹ்மான் திரையுலகில் அறிமுகமான காலகட்டத்தில் பிறந்தது, அவரது பாடல்களுக்குக் கிடைத்த வரவேற்பு பெருகியது போலவே தானும் வளர்ந்தது, சிறு வயதில் படையப்பா திரைப்படத்திற்கு பாட்டி அழைத்துச் சென்றது, வீட்டிலும் பள்ளியிலும் நெருக்கமான நட்பு வட்டம் அமைந்தது, கல்லூரிப் பருவத்தில் இன்னொரு உலகம் தெரிய வந்தது, அதன்பிறகு கனவுகளுடன் இந்த உலகை எதிர்கொள்ளத் தயாரானது என்று ஒரு இளைஞனின் வாழ்வில் நடந்த பல விஷயங்களைச் சில தலைப்புகளாகப் பிரித்து, ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குனர் அனந்த் ராம்.

சென்னையின் மத்தியப் பகுதியில் ‘ஆனந்தம் காலனி’ எனும் குடியிருப்பில் வாழ்ந்து வருகிறார் ஆனந்த் (அனந்த் ராம்). பத்து வயதில் அவருக்கு அறிமுகமான ஆதி (ஆர்ஜே விஜய்) உள்ளிட்ட நண்பர்கள் அங்கு கிடைத்தவர்கள் தான். அவர்களே பள்ளியிலும் உற்ற நட்பாக விளங்குகின்றனர். அந்த காலகட்டத்தில், ஆதி குரூப்புக்கு எதிரே இருக்கிறது லலித் குரூப்.

கால ஓட்டத்தில் லலித்தை மறந்து போகிறார் ஆனந்த். கல்லூரிக் காலத்தில், ஆனந்துக்கு கண்ணம்மாவின் (பவானி ஸ்ரீ) அறிமுகம் கிடைக்கிறது. அவர்களுக்கு இடையே காதல் மலர்கிறது. பொறியியல் கல்லூரியில் ஒன்றாகப் படிப்பதோடு, ஆனந்தம் காலனியிலேயே வசிப்பவராகவும் கண்ணம்மா இருப்பது ஆனந்துக்கு வசதியாகப் போகிறது. கிட்டத்தட்ட திருமணமாகாத ஜோடி போன்றே இருவரும் இருந்து வருகின்றனர்.

கல்லூரிப் படிப்புக்குப் பிறகு, நண்பர்களுடன் இணைந்து ஒரு

‘ஈவெண்ட் மேனேஜ்மெண்ட்’ நிறுவனம் தொடங்குகிறார் ஆனந்த். கல்லூரிக்காக தான் செய்த ‘பிகம் எ ஸ்டார்’ எனும் புராஜக்டை நிறைவு செய்து, ஒரு செயலியாக அறிமுகப்படுத்துவது அவரது திட்டம். அது பல நிறுவனங்களை ஈர்க்கிறது. ஆனால், அதனை அவரால் பூர்த்தி செய்ய முடியாமல் போகிறது.

தேடி வந்த வாய்ப்புகள் கலைந்துபோக, நண்பர்கள் பிழைப்புக்காக வெவ்வேறு வேலைகளில் சேர்கின்றனர். ஒருகட்டத்தில் தனது ‘பிகம் எ ஸ்டார்’ கனவைத் துறந்துவிட்டு வேலைக்குப் போக வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறார். ஆனால், அதனைச் சரிவர அவரால் செய்ய முடிவதில்லை. அதனைக் காண்கிறார் ஆனந்தின் தந்தை (இளங்கோ குமரவேல்). தனக்குத் தெரிந்தவர் மூலமாகச் சிங்கப்பூரில் ஆனந்த் உயர்கல்வி கற்க ஏற்பாடு செய்கிறார்.

போதிய பொருளாதார வசதிகள் இல்லாமல் நண்பர்கள் மத்தியில் சில சங்கடங்களை எதிர்கொள்கிறார் ஆனந்த். காதலி கண்ணம்மாவுக்கு வேறொருவருடன் திருமணம் நடக்க ஏற்பாடாகிறது. வீட்டில் தம்பியின் மருத்துவப் படிப்பு கனவு தன்னை நம்பி இருப்பதை நினைவில் கொண்டிருக்கிறார் ஆனந்த். அனைத்து பிரச்சனைகளும் சேர்ந்து, அவரை வெறுமையில் தள்ளுகிறது.

அந்தச் சூழலில், ஆனந்துக்கு ஆறுதலாக இருக்கிறார் அழகர். சிங்கப்பூரில் கிடைத்த அவரது நட்பு, ஆனந்துக்கு இன்னொரு உலகின் சாவியாக அமைகிறது. அதன் வழியாக, லலித்தை மீண்டும் சந்திக்கிறார். தொடக்கத்தில் இருவருக்குள்ளும் முட்டல் மோதல் ஏற்பட்டாலும், ஒருகட்டத்தில் இருவருக்கும் இடையே நட்பு மலர்கிறது. ஆனந்தின் ‘பிகம் எ ஸ்டார்’ திட்டமும் நனவாகிறது.

அந்த புராஜக்ட் மூலமாகச் சிங்கப்பூரிலேயே வேலை செய்யும் வாய்ப்பும் ஆனந்துக்குக் கிடைக்கிறது. அதேநேரத்தில், சில ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ‘பிகம் எ ஸ்டார்’ செயலியைச் செயல்படுத்தும் வாய்ப்பைத் தருகிறது சென்னையிலுள்ள ஒரு நிறுவனம்.

வசதியான வாழ்க்கை, நண்பர்களுடன் சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பு, இரண்டில் ஆனந்த் எதனைத் தேர்ந்தெடுத்தார்? ‘ந.ஒ.வ.பி’ படத்தின் முடிவில் அது நமக்குத் தெரிய வருகிறது.

‘ஜெயிக்கிற குதிரையா எப்பவும் இருக்கணும்’ என்பது இளம் பருவத்தில் நாம் கேட்க நேர்கிற ஒரு வாக்கியம். அப்படி வெற்றி பெற்ற ஒரு சாதாரண இளைஞனின் நினைவலைகளாக அமைந்துள்ளது ‘ந.ஒ.வ.பி’ படத்தின் திரைக்கதை.

அசத்தும் இரண்டாம் பாதி!

ஆனந்த் ராம் இப்படத்தை எழுதி இயக்கியிருப்பதோடு நாயகனாகவும் நடித்திருக்கிறார். இரண்டாம் பாதியில் முகம் நிறைய வெறுமையுடன் திரிவதும், அதனை மீறி மகிழ்ச்சியை முகத்தில் காட்டுவதுமாக நடித்திருப்பது அருமை. ஆனால், அவரே முதல் பாதியில் மீசையில்லாமல், நீளமான தலைமுடி உடன் பள்ளிச் சீருடையில் வரும்போது மனம் வாடி வதங்குகிறது.

அவர் மட்டுமல்ல, அவருடன் பள்ளிப் பருவ நண்பர்களாக வரும் ஆர்ஜே விஜய், இர்பான், மோனிகா சின்னகொட்லா உட்பட அனைவருமே நம் பொறுமையைச் சோதிக்கின்றனர். உடல் அளவில் சிறிதளவு கூட மாற்றத்தை வெளிக்காட்டாமல் இருந்தது குறையாகத் தெரிகிறது.

ஒருவேளை இரண்டாம் பாதியிலுள்ள சில காட்சிகளை முன்கூட்டியே காட்டியிருந்தால் அந்தக் குறை தென்பட்டிருக்காமல் போயிருக்கலாம். அப்படிச் சொல்லும் வகையில் இரண்டாம் பாதியில் அனைவரிடமும் சிறகு முளைத்தாற் போன்றதொரு நடிப்பு காணக் கிடைக்கிறது.

அதனை மீறி இளங்கோ குமரவேல், விசாலினி, ஐஸ்வர்யா, கேபிஒய் பாலா உட்படப் பலரும் முன்பாதியை ரசிக்கக் காரணமாக உள்ளனர். கொளப்புல்லி லீலாவும் தன் பங்குக்குப் பாட்டியாக வந்து அசத்தியிருக்கிறார்.

முன்பாதியைப் போலவே நகைச்சுவையும் செண்டிமெண்டும் கலந்த காட்சிகளைக் கொண்டிருக்கிறது இரண்டாம் பாதி. ஆனால், முன்பாதியை விடப் பின்பாதியில் சென்டிமெண்ட் காட்சிகள் நம்மிடத்தில் தாக்கம் ஏற்படுத்துகின்றன.

இரண்டாம் பாதியில் அழகராக வரும் வினோத், அவரது ரூம்மேட்களாக நடித்தவர்கள், லலித் ஆக நடித்தவர் என்று அனைவரும் சிறப்பான பங்களிப்பைத் தந்துள்ளனர்.

அதிலும் ‘வத்திக்குச்சி பத்திக்காதுடா’ பாடலுக்கு வினோத் ‘பெர்பார்ம்’ செய்யும் காட்சியில் சிரிப்பைக் கட்டுப்படுத்துவது கடினம்.

இப்படத்திற்கு ஏ.ஹெச்.காஷிப் இசையமைத்திருக்கிறார்.

அவரது இசையில் தனுஷ் பாடியிருக்கும் ‘ஆலாதே’, யுவன் பாடியிருக்கும் ‘நீ ஏன் நீ ஏன் தூரம் இருக்கிறாய்’, ஜி.வி.பிரகாஷ் பாடிய ‘ஓகே சொல்லிட்டா’, காஷிப்பின் ‘தேடி தேடி போகிறேன்’ பாடல்கள் நெஞ்சைத் தொடுகின்றன. இது போதாதென்று ‘வாரானே’, ‘வெட்டி பையன்’, ‘சகலை ரகளை’, ‘பகோடா’ பாடல்கள் கால்களைத் தானாக ஆட்டம் காண வைக்கின்றன.

சில இடங்களில் ஏ.ஆர்.ரஹ்மானின் பழைய பாடல்கள் ‘நாஸ்டால்ஜியா’வை கிளப்பினாலும், அதையும் மீறிக் காட்சிகளின் தன்மையை மேலுயுர்த்த முயற்சித்துள்ளது காஷிப்பின் பின்னணி இசை.

தமிழ்செல்வன் ஒளிப்பதிவு ‘கலர்ஃபுல்’லான ஒரு உலகை நம் முன்னே காட்டுகிறது. படத்தின் குறைவான் பட்ஜெட்டை மறக்கடிக்க, ‘வீடியோ’ பதிவு மற்றும் ‘மொபைல்’ வீடியோ போன்று படம்பிடித்திருப்பது அருமை.

படத்தொகுப்பாளர் பென்னி ஆலிவர் பின்பாதியைச் செறிவுடன் வார்த்திருக்கிறார். அதே போல முன்பாதியைக் கையாளவில்லை.

கலை இயக்குனர் ராகுல் பாடல் காட்சிகளில் நம்மை ஒரு கனவுலகுக்கு அழைத்துச் செல்ல முயற்சித்திருக்கிறார். அதேநேரத்தில் இருபதாண்டுகளுக்கு முந்தைய விஷயங்களைத் திரையில் காட்டுவதில் திருப்தியைத் தரவில்லை.

‘ஆலாதே’ உள்ளிட்ட சில பாடல்களில் அசாரின் நடன வடிவமைப்பு திரும்பத் திரும்பத் திரையைப் பார்க்கத் தூண்டுகிறது.

இயக்குனராக அனந்த் ராம், இதில் மிகப்பெரிய ‘ரிஸ்க்’கை எடுத்திருக்கிறார். தான் எதிர்கொண்ட வாழ்வைத் திரையில் சொல்ல, தானே திரையில் தோன்ற வேண்டுமென்று முடிவெடுத்திருக்கிறார். அவரது தன்னம்பிக்கைக்கு ஏற்ப, முதல்பாதியில் அவரது நடிப்பு அமையவில்லை.

அதேநேரத்தில், இரண்டாம் பாதியில் இயக்குனர் அசத்தியிருக்கிறார். என்னதான் காட்சிகளை யூகிக்க முடிந்தாலும், அதனையும் மீறி ஈர்க்கிறது காட்சியாக்கம். அந்தக் காட்சிகளில் இருக்கும் செறிவினை முன்பாதியில் கிடைக்கச் செய்திருந்தால், இப்படம் வேறொரு உயரத்தை எட்டியிருக்கும்.

ரஹ்மான் தந்த ‘முஸ்தபா.. முஸ்தபா..’ பாடலில் இடம்பெற்ற வரிகளை இதற்கு ‘டைட்டில்’ ஆக்கியிருக்கிறார் இயக்குனர். அதற்கேற்ப ஒரு கதையையும் பிடித்திருக்கிறார்.

ஆனால், இதில் வரும் ‘பிகம் எ ஸ்டார்’ அரதப்பழசாகும் அளவுக்கு இன்று ‘ஏஐ’ வீடியோக்கள் வந்துவிட்டன. அது, இப்படம் கால தாமதத்தை எதிர்கொண்டிருப்பதைச் சொல்லாமல் சொல்லிவிடுகிறது.

நாயகன் ஒரு 90’ஸ் கிட் என்பதால், ரஹ்மானின் திரையுலக வளர்ச்சியோடு அவர் வளர்வதாக உள்ளது திரைக்கதை. அதற்கேற்ப, ரஹ்மானின் பல பாடல்கள் இதில் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அது இப்படத்தில் அழுத்தமாகச் சொல்லப்பட்டிருக்க வேண்டும். அந்த ‘கூஸ்பம்ஸ் மொமண்ட்’ இதில் அமையவில்லை.

போலவே பள்ளிப்பருவத்தில் தனது எதிரியாக நினைத்த ஒரு நபருடன் நாயகனுக்கு ஏற்படும் நட்பை இன்னும் அழுத்தமாகச் சொல்லியிருக்க வேண்டும். அதனைத் தவறவிட்டிருக்கிறார் இயக்குனர்.

அது போன்ற குறைகளைத் தாண்டி குமரவேல் அனந்த் ராமிடம் தனது கனவு பற்றிப் பேசுவது, விசாலினி அனந்தை வேலைக்குப் போகச் சொல்லித் திட்டுவது, ஆர்ஜே விஜய் உள்ளிட்ட நண்பர்களுடன் அனந்த் முரண்படுவது, வினோத் பாத்திரம் தான் மதுரையில் வாழ்ந்த விதம் பற்றி அனந்திடம் விவரிப்பது, அவரை ‘தீனா’ பாடலில் வரும் அஜித் ஆக நடிக்க வைப்பது போன்ற காட்சிகள் நமக்கு வித்தியாசமான அனுபவங்களைத் தருகிறது.

அது போன்ற தருணங்களைப் படம் முழுக்க நிறைத்திருந்தால், வழக்கமான கமர்ஷியல் படங்களுக்கான தன்மையோடு சில காட்சிகளை இணைக்காமல் இருந்திருந்தால், ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ முழுமையானதொரு ‘பீல்குட்’ படமாக அமைந்திருக்கும். அது அமையாமல் போனதில் வருத்தம் தான். இப்படி வருத்தப்படும் அளவுக்குப் படம் நமக்குப் பிடித்துப் போகிறது என்பதைத் தனியே சொல்ல வேண்டியதில்லை..!

– உதயசங்கரன் பாடகலிங்கம்

#நண்பன்_ஒருவன்_வந்த_பிறகு_விமர்சனம் #Nanban_Oruvan_Vantha_Piragu_Review #N_O_V_P_Review #அனந்த்_ராம் #ஆர்ஜே_விஜய் #பவானி_ஸ்ரீ #anathram #r_j_vijay #bavani_sri #ந__ஒவ_பி_விமர்சனம்

You might also like