மழை பிடிக்காத மனிதன் – கதை கதையாம் காரணமாம்!

‘டைட்டிலே சூப்பரா இருக்கே’ என்று சிலாகிப்பது போன்று சில திரைப்படங்கள் திரையனுபவத்தைத் தரும். சில படங்களின் கதைகள் டைட்டிலுக்கு சம்பந்தமில்லாமல் இருக்கும்; சில படங்கள் ‘டைட்டில் மட்டும் தான் நல்லாயிருக்கு’ என்று சொல்வதாக அமையும். அதனால், ஒரு மனிதரை அடையாளம் காண உதவும் முகம் போன்று பொருத்தமான டைட்டில் ஒரு திரைப்படத்திற்கு அமைவது மிக அவசியம்.

அதனாலேயே, விஜய் ஆண்டனியை நாயகனாகக் கொண்டு ஒளிப்பதிவாளர் எஸ்.டி.விஜய் மில்டன் ‘மழை பிடிக்காத மனிதன்’ என்றொரு படத்தை இயக்கவிருக்கிறார் என்ற தகவல் அவ்வளவு பிடித்தமானதாக இருந்தது. கவிதைத்தனமான தலைப்பு, அதனுள்ளே ஒரு ஆக்‌ஷன் கதை என்பதுவே இப்படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

நீண்ட காலமாகக் காத்திருப்பில் இருந்த இப்படம் தற்போது வெளியாகியிருக்கிறது.

எப்படியிருக்கிறது ‘மழை பிடிக்காத மனிதன்’?

கதையும் காரணமும்..!

ஒரு மனிதர் அந்தமான் அருகிலிருக்கும் ஒரு தீவினில் கால் பதிக்கிறார். அவருடன் வருகிறவர், ‘இங்க நீ யாருங்கறதை வெளியே காட்டிடாதே. நீ செத்துப்போனதா இந்த உலகம் நம்பிகிட்டு இருக்கு’ என்கிறார்.

அந்த நபர் சென்றுவிட, இந்த நபர் மட்டும் கடற்கரையில் அமர்ந்திருக்கிறார். அப்போது மழை பொழிய வானம் தயாராகிறது. உடனே அவர் பயந்து பின்வாங்கி, ஒரு ஓரமாக ஒதுங்குகிறார். நனையாமல் அவர் நின்றாலும், மழையில் ஒரு நாய்க்குட்டி சிக்கித் தவிப்பதைக் காண்கிறார். அதனைக் காப்பாற்றுவதோடு, தன்னுடன் அழைத்துச் செல்கிறார்.

பிற உயிர்களுக்கு உதவுகிற அந்த மனம், கடலோரத்தில் ஹோட்டல் நடத்திவரும் ஒரு தாயையும் மகனையும் அவருக்கு அறிமுகப்படுத்துகிறது. பிறகு, அந்த நாயை வளர்த்து வரும் மனிதர்களைக் காண வைக்கிறது.

‘யாருடனும் உறவு பேண வேண்டாம்’ என்று தன்னை அழைத்து வந்த நபர் விடுத்த எச்சரிக்கையை மீறி, அந்த தீவினில் தான் கண்ட அம்மனிதர்களின் நலன்களே முக்கியம் என்று வாழ ஆரம்பிக்கிறார் அந்த மனிதர்.

அவ்விரு குடும்பத்தினரையும் பாதிக்கிற எந்தச் செயலாக இருந்தாலும், அதனை முறியடிப்பதில் குறியாக இருக்கிறார். அப்போது, அவர்களைப் பாதிக்கும்விதமாக ஒரு செல்வந்தர் செயல்படுகிறார்.

அவரையும் அவரது ஆட்களையும் தடுக்கும் வகையில் சில செயல்களைச் செய்கிறார் அந்த நபர். அப்போதும், தான் யார் என்பதை அவர் வெளிப்படுத்தவில்லை.

குறிப்பிட்ட தருணத்தில் அவரது அடையாளம் வெளியுலகுக்குத் தெரிய வருகிறது. அதன்பிறகு என்னவானது? அவரை நம்பியிருந்தவர்கள் பாதிப்புக்கு உள்ளானார்களா என்று சொல்கிறது ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் மீதி.

அடையாளங்களை மறைத்துக்கொண்டு வாழ நேர்கிற ஒரு மனிதன், ஒருகட்டத்தில் தனது இருப்பை வெளிப்படுத்த நேரும்போது என்னவாகிறது என்பதே ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் ஒருவரிக்கதை. இது போன்று ஓராயிரம் கதைகள் வந்திருக்கின்றன. இந்த ‘பாட்ஷா’ டைப் கதைக்கு எப்படி திரைக்கதை அமைக்கின்றனர் என்பதைப் பொறுத்து வெற்றியின் அளவு இருக்கும்.

ஆனால், இந்த ஒருவரிக் கதைக்குத் திரைக்கதை அமைத்த விதத்தில் நம்மைச் சோதனைக்கு உள்ளாக்கியிருக்கிறது ‘மழை பிடிக்காத மனிதன்’ குழு.

காரணங்களை அடுக்கிவிட்டு, பிறகு கதை சொல்லத் தொடங்கும் உத்தி இதில் பின்பற்றப்பட்டிருக்கிறது. அதாகப்பட்டது, படம் தொடங்கும் முன்னரே இந்த கதாபாத்திரம் யார்? அவருக்கு என்னவானது? எதனால் அவர் தனது அடையாளங்களை மறைத்துக்கொண்டு வாழ வேண்டும் என்பது போன்ற காரணங்கள் ‘விஎஃப்எக்ஸ்’ உதவியோடு ’வாய்ஸ் ஓவரில்’ சொல்லப்படுகின்றன. அதன்பிறகே, விஜய் ஆண்டனி பாத்திரத்தை அந்த தீவுக்கு அழைத்து வருகிறது சரத்குமார் பாத்திரம்.

படம் வெளியானபிறகு, இந்த ‘கதை கதையாம் காரணமாம்’ வகையறா விளக்கத்தைத் தான் இத்திரைக்கதையில் இணைக்கவில்லை என்று சொல்லி சர்ச்சை கிளப்பியிருக்கிறார் இயக்குனர் விஜய் மில்டன். ஆனால், அந்த ஒரு நிமிடக் காட்சி இல்லாமலிருந்தாலும் இப்படம் போரடிக்கத்தான் செய்யும் என்பதே உண்மை.

‘பழைய’ நெடி!

‘சலீம்’ படத்தை நினைவூட்டும் வகையில் இதில் வந்து போயிருக்கிறார் விஜய் ஆண்டனி. சரத்குமார், சத்யராஜ் உள்ளிட்ட சிலர் இதில் ‘ஜஸ்ட் லைக் தட்’ தலைகாட்டியிருக்கின்றனர். பழனி மலையில் இருக்கும் பெண் சித்தர் போல, இதில் ஆங்காங்கே ‘தத்துவ’ வசனம் பேசியிருக்கிறார் சரண்யா.

சரண்யாவின் மகனாக நடித்திருக்கும் பிருத்வி ஆம்பர் படம் முழுக்கத் துறுதுறுவென்று வருகிறார். ஆனால், அவரது முகத்தை நினைவில் கொள்ள நல்லதாக ஒரு ‘க்ளோஸ்அப்’ ஷாட் படத்தில் இல்லை.

‘மீரா சிகைக்காய் விளம்பரத்தில் பார்த்த மேகா ஆகாஷ் இனி தேடினாலும் கிடைக்க மாட்டார்’ என்பது போன்று முகத்தில் அப்பாவித்தனத்தையும் குறும்புத்தனத்தையும் இழந்துவிட்டு, ‘என்னைத்தான் இதுல ஹீரோயினா நடிக்க வைக்கிறாங்க’ என்றவாறே வந்து நிற்கிறார். என்ன கொடுமை சார் இது?

மேகாவுக்கும் சேர்த்து நடித்து வைப்போம் என்று அவரது தங்கையாக வரும் பிரனிதி களமிறங்கியிருக்கிறார். பிருத்வி உடன் இணைந்து ஒரு பாடலுக்கும் ஆடியிருக்கிறார்.

வில்லனாகக் கன்னட நடிகர் டாலி தனஞ்ஜெயா நடித்திருக்கிறார். ‘கன்னடத்தில் அவர் ஹீரோ ஆயிற்றே’ என்று கொஞ்சம் பில்டப்களுடன் இதில் காட்டியிருக்கிறார் இயக்குனர். ஆனால், அந்தக் காட்சிகள் கொஞ்சம் கூட நம்மைக் கவர்வதாக இல்லை.

இவர்கள் தவிர்த்து வில்லனின் அடியாட்கள், அந்த தீவில் வசிப்பவர்கள் என்று சிலரைக் காட்டியிருக்கிறார் இயக்குனர். அவர்களில் தலைவாசல் விஜய்யும் ஒருவர்.

விஜய் மில்டன் ஒரு ஒளிப்பதிவாளராக, இதில் திறம்படச் செயல்பட்டிருக்கிறார். அழகியல் உணர்வைக் காட்டும் வகையில் ஒவ்வொரு பிரேமையும் வார்த்திருக்கிறார். கலை இயக்குனர் ஆறுசாமி அதற்கேற்ற வகையில் தனது குழுவினரை வேலை வாங்கியிருக்கிறார்.

படத்தொகுப்பாளர் பிரவீன் கே.எல். தனது பட வரிசையில் இதனைச் சொல்லாமல் தவிர்க்க வேண்டும் என்கிற அளவுக்கு இதில் அவரது பங்களிப்பு அமைந்திருக்கிறது.

ஸ்டண்ட் காட்சிகளில் சுப்ரீம் சுந்தர், மகேஷ் மேத்யூ மற்றும் கெவின் குமார் மிரட்டியிருக்கின்றனர். இடைவேளைக்கு முன்னதாக வரும் சண்டைக்காட்சி ‘அதகளம்’ செய்கிறது.

ஒரு உணவுப்பொருள் அது எப்படிப்பட்ட உணவாகும் என்பதைத் தானே முடிவு செய்துகொள்ளும் என்று சொல்வது சரியா? அதாகப்பட்டது, ‘ஆம்லெட்டா, ஆஃபாயிலா, கலக்கியா அல்லது அவித்த முட்டையா’ என்பதனை அந்தந்த முட்டையே தீர்மானித்துக் கொள்ளும் என்று சொன்னால் ஏற்றுக்கொள்வீர்களா? அதே போன்று ஒரு கதை அதுவே தன்னை எழுதிக்கொள்ளும் என்பதையும் சாதாரண ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த வரிசையில் சேர்ந்திருக்கிறது ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் ஸ்கிரிப்ட்.

இத்தனைக்கும் ‘அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது’, ‘கோலிசோடா’, ‘பத்து எண்றதுக்குள்ள’ போன்ற வழக்கத்திற்கு மாறான திரைக்கதைகளைத் தந்த விஜய் மில்டனே இப்படத்தின் எழுத்தாக்கத்தைக் கையாண்டிருக்கிறார்.

‘ஸ்கிரிப்ட் நல்லாயில்ல’ என்று சொல்வதைக் காட்டிலும், இப்படம் நெடுக நிறைந்திருக்கும் ‘பழைய நெடி’ தான் ரொம்பவே கடுப்பேற்றுகிறது.

‘இயற்கை’ படத்தில் சீமா பிஸ்வாஸை பிரதியெடுத்தது போல சரண்யா பாத்திரம், அது போதாதென்று தனது காதலர் யாரென்று சொல்ல முடியாமல் தவிக்கும் குட்டி ராதிகா போன்று இதில் தோன்றியிருக்கும் மேகா ஆகாஷ், கீனு ரீவ்ஸின் ‘ஜான் விக்’ போன்று இதில் இடம்பெற்றிருக்கும் நாய்க்குட்டி, தலைமறைவாகத் திரியும் ஒரு மனிதன் என்று பல வெளிநாட்டு ஆக்‌ஷன் படங்களில் பார்த்த நாயக பாத்திரம், நாயகனை முற்றிலுமாகத் தெரிந்தவர்களாக இருக்கும் இரண்டு வயதில் மூத்த நபர்கள், அவர்கள் எத்துறையைச் சார்ந்தவர்கள் என்ற விவரிப்பு என்று சில ‘கிளாசிக்’ படங்களின் சிறப்பம்சங்களை அப்படியே பொதித்து வைத்திருக்கிறது ‘மழை பிடிக்காத மனிதன்’ திரைக்கதை. ஆனால், அவை ஒன்றோடொன்று பொருந்தி நிற்கவில்லை என்பதுதான் இப்படத்தின் சறுக்கலுக்குக் காரணம்.

இப்படித் தான் பார்த்த படங்களில் இருந்து சிறப்பான விஷயங்களில் இருந்து ‘இன்ஸ்பையர்’ ஆகி ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தை உருவாக்கியிருக்கிறார் விஜய் மில்டன். மகேஷ்பாபு நடித்த ‘சரிலேக்கு நீக்கெவரு’ படத்தின் கிளைமேக்ஸை பிரதி எடுத்தது போலவே இதன் கிளைமேக்ஸையும் அமைத்திருக்கிறார்.

படம் முழுக்க வில்லன் ஆட்களை ரத்தம் கக்கும் அளவுக்கு அடித்துவிட்டு, மயிலிறகால் வருடிக் கொடுப்பது போல வசனம் பேசினால் ரசிகர்கள் ஒத்துக்கொள்வார்கள் என்று இயக்குனருக்கு யார் சொல்லிக் கொடுத்தார்களோ?! அவர் கையாண்டிருக்கும் திரைக்கதை ட்ரீட்மெண்ட் நம்மை ஓவராக ‘பஞ்சர்’ ஆக்கியிருக்கிறது.

அதே நேரத்தில், இத்திரைக்கதையின் நடுப்பகுதி மிகச்சீராக உள்ளதையும் இந்த இடத்தில் குறிப்பிட்டாக வேண்டும். வடிவேலு பாணியில் சொல்லப்போனால், ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் பிகினிங்கும் சரியில்லை, பினிஷிங்கும் சரியில்லை. இதில் ‘சலீம்’ பட ரெபரென்ஸ், விஜயகாந்தை நினைவூட்டும் ஷாட், சத்யராஜின் கேமியோ என்று பலவற்றைச் சேர்த்திருக்கிறது படக்குழு.

என்ன வேணும்?

ரசிகர்கள் ஒரு கதையைத் திரையில் காண்கையில் எதையெல்லாம் எதிர்பார்ப்பார்கள்? நன்றாகக் கதை சொல்ல வேண்டும் என்பது மட்டுமே அவர்களது எதிர்பார்ப்பாக இருக்கும். ஆனால், ‘என்ன வேணும்’ என்று கடைக்காரரிடம் ‘எண்ணெய்தான் வேணும்’ என்று திரும்பத் திரும்ப வாடிக்கையாளர் சொல்லும் ‘வடிவேலு’ காமெடியை அப்படியே ‘உல்டா’ செய்திருக்கிறது ‘மழை பிடிக்காத மனிதன்’ திரைப்படம்.

ஒவ்வொரு படத்திலும் தான் ஏற்கும் பாத்திரம் பிற நாயக நடிகர்கள், நட்சத்திரங்கள் அண்டாத வகையில் இருக்க வேண்டும் என்று மெனக்கெடுகிறார் விஜய் ஆண்டனி. அது பாராட்டுக்குரியது. ஆனால், தான் நடித்த முந்தைய பாத்திரங்களைப் போல அவை இருக்கக் கூடாது என்று மெனக்கெட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

சசிகுமார் படங்கள் ஒருகட்டத்தில் எப்படி ஒரு முட்டுச்சந்தில் சிக்கிக்கொண்டனவோ, அதே போன்றதொரு இக்கட்டான சூழலைத் திரையில் எதிர்கொண்டு வருகிறார் விஜய் ஆண்டனி. சசிகுமாருக்கு ஒரு ‘அயோத்தி’ போல, விஜய் ஆண்டனிக்கும் வித்தியாசமான கதை சொல்லலுடன் கூடிய ஒரு படம் விரைவில் அமைய வேண்டும். அதுவே நமது எதிர்பார்ப்பு.

அது ‘சலீம்’, ‘பிச்சைக்காரன்’ அல்லது அவரது முந்தைய வெற்றிப்படங்களைப் பிரதியெடுத்ததாக இருக்கக் கூடாது. அந்தப் படங்கள் போன்று தனித்துவமானதாக’ இருக்க வேண்டும்.

‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தை ஒரே ஒருமுறை தியேட்டரில் அமர்ந்து முழுமையாகப் பார்த்தால், விஜய் ஆண்டனியே அதனைப் புரிந்துகொள்வார் என்று நம்பலாம். அப்படியொரு நம்பிக்கையை இப்படம் தந்திருக்கிறது.

  • உதயசங்கரன் பாடகலிங்கம்
You might also like