தெருக்கூத்துக் கலையை மையமாக வைத்து வெளியான படங்களில் அவதாரம் மட்டுமே பெரும்பாலான ரசிகர்கள் அறிந்ததாக உள்ளது. ஒரு சில நிமிடங்கள் மட்டுமே அக்கலையைக் காட்டிய படங்களில் இருந்து அப்படத்தை வேறுபடுத்தியிருந்தார் இயக்குனர் நாசர். தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்வை அதில் சொல்லியிருந்தார். அதேபாணியில் தெருக்கூத்துக் குழுவைச் சார்ந்த சிலரது வாழ்வைச் சொல்கிறது, பாரி இளவழகனின் ‘ஜமா’. அவரே இதில் நாயகனாகவும் நடித்திருக்கிறார்.
இந்தப் படத்திற்கு இசையமைத்திருப்பவர் இளையராஜா.
எப்படியிருக்கிறது ‘ஜமா’?
அர்ஜுனன் ஆகும் கனவு!
ஒரு கிராமம். அங்கு வசிக்கும் கல்யாணத்திற்கு (பாரி இளவழகன்) தெருக்கூத்து கலை மீது வேட்கை அதிகம். அதனைத் தனது உயிராகவே எண்ணுகிறார். குந்தி, திரௌபதி என்று கூத்தில் பெண் வேடமிட்டு நடிப்பது அவரது வழக்கம். அதன் தொடர்ச்சியாக, அனிச்சையாகவே அவரிடத்தில் பெண் தன்மை புகுந்து கொள்கிறது.
கல்யாணத்திற்கு ஒரு திருமணம் செய்ய வேண்டும் என்பது அவரது தாயின் (கேவிஎன் மணிமேகலை) ஆசை. ஆனால், பெண் பார்க்கச் செல்லும் இடங்களில் ‘மாப்பிள்ளை வேண்டாம்’ என்று சொல்லும் அளவுக்கே அவரது நடவடிக்கைகள் இருக்கின்றன. சமையல் சொல்லித் தருவது, புடவை கட்டியிருப்பதில் திருத்தம் சொல்வது என்றிருக்கிறார் கல்யாணம். அதனால், அருகிலுள்ள ஊர்களில் அவருக்குப் பெண் தர யாரும் தயாராக இல்லை.
ஆனால், கூத்து வாத்தியார் தாண்டவத்தின் (சேத்தன்) மகள் ஜெகதாம்பாள் (அம்மு அபிராமி) மட்டும் கல்யாணத்தையே சுற்றிச் சுற்றி வருகிறார். தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்கிறார். ஆனால், கல்யாணமோ மறுக்கிறார். காரணம், வாத்தியாரின் மனதைப் புண்படுத்தக் கூடாது என்ற எண்ணம்.
ஒருநாள், ‘பெண் வேடம் ஏற்று நடிப்பதால் தானே இத்தனை பிரச்சனை. நீ அர்ஜுனன் வேடம் கேள்’ என்கிறார் கல்யாணத்தின் தாய். அவரும் தாண்டவத்தின் வீடு தேடிச் சென்று, அதனைச் சொல்கிறார். அதனைக் கேட்டதும், கல்யாணத்தை அடிக்கிறார் தாண்டவம். ‘யாருக்கு என்ன வேஷம் கொடுக்கணும்னு எனக்கு தெரியும்’ என்று சொல்லி அவமானப்படுத்துகிறார். பிறகு, சமாதானம் பேசுவது போல நடிக்கிறார்.
சில நாட்கள் கழித்து, கல்யாணத்தைத் தன் வீட்டுக்குப் பெண் கேட்டு வருமாறு கூறுகிறார் ஜெகதாம்பாள். தாயுடன் கல்யாணம் செல்ல, அவர்கள் சொல்வதைக் கேட்டு கொதிக்கிறார் தாண்டவம். அருவெருப்பாகப் பேசி அவமானப்படுத்துகிறார். அப்போது, தந்தையை எதிர்த்துப் பேசிவிட்டு கல்யாணத்துடன் செல்கிறார் ஜெகதாம்பாள்.
ஆனால், அடுத்த சில மணி நேரத்தில் ஜெகதாம்பாளைத் தாண்டவத்தின் வீட்டிற்கே அழைத்துச் செல்கிறார் கல்யாணம். ‘எனக்கு நீயும் நம்ம ஜமாவும் மட்டுமே போதும்’ என்கிறார். அந்த நிகழ்வு, ஜெகதாம்பாள் மனதைச் சுக்குநூறாக்குகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்னர், தனக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்று சொன்ன கல்யாணமா இது என்று அதிர்ச்சியடைகிறார். அதன் தொடர்ச்சியாக, கல்யாணத்தின் தந்தை இளவரசனுக்கும் (ஸ்ரீ சங்கர் தயாள்) தாண்டவத்திற்கும் இடையேயிருந்த நட்பு சொல்லப்படுகிறது. தெருக்கூத்து கலையில் பலரால் அதிசயிக்கப்பட்ட இருவரும் ஒருகட்டத்தில் பிரிந்து போனதும், அதனால் குழுவில் இருந்து வெளியேறிய கவலையிலேயே தந்தை மாண்டதும் கல்யாணத்தை வாட்டியெடுக்கிறது.
இந்த நிலையில், கல்யாணம் செய்த ஒரு செயலால் அவரது தாயை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. அது, அவரது உயிரையும் பறிக்கிறது.
அப்படியென்ன செயலைக் கல்யாணம் செய்தார்? தாண்டவமும் இளவரசனும் பிரிய என்ன காரணம்? ஜெகதாம்பாள் – கல்யாணம் காதல் என்னவானது என்று சொல்கிறது ‘ஜமா’வின் மீதி.
இந்தக் கதையின் தொடக்கத்திலேயே, ‘அர்ஜுனன் வேஷமிடுவது தான் தனது கனவு’ என்று கல்யாணம் சொல்லிவிடுகிறார். அந்த வேடம் ராஜபார்ட் என்பதுதான் இக்கதையில் முரண்களை விளைவிக்கும் மையம். அதனால், ‘ஜமா’ படத்தின் அடிப்படைக் கதை ஒரு கமர்ஷியல் திரைப்படத்திற்கு ஏற்ற வகையிலேயே உள்ளது.
’ஜமா’ என்றால்..!
தெருக்கூத்தை நடத்தும் குழுவுக்கு ‘ஜமா’ என்று பெயர். அதுவே இப்படத்தின் பெயருக்கான காரணம்.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள பள்ளிகொண்டாம்பட்டு கிராமத்தில் நிகழ்வதாக, இக்கதை அமைக்கப்பட்டுள்ளது. தெருக்கூத்தைப் பார்த்துவிட்டு, அதன் மீதுள்ள ஆர்வத்தில் ஒரு ஊரைச் சேர்ந்த சிலர் குழுவொன்றைத் தொடங்குவதாகச் சொல்கிறது இப்படம். அதனால், தாங்கள் செய்யும் விவசாய வேலைகளுக்கு நடுவே இக்கலையையும் அவர்கள் மேற்கொள்வதாகக் காட்டியிருக்கிறது. அந்த வகையில், இது ‘அவதாரம்’ படத்திலிருந்து பெரியளவில் வேறுபடுகிறது.
’ஜமா’ திரைக்கதை ஆக்கத்தில் சில குறைகள் தென்படுகின்றன. அவற்றைக் குறைகள் என்பதை விட, இயக்குனர் திரைக்கதையில் கையாண்டுள்ள சில விஷயங்கள் நெருடலை ஏற்படுத்துகின்றன என்பதே சரியானது.
கல்யாணம் – ஜெகதாம்பாள் காதலை முன்பாதியில் ‘பிளாஷ்பேக்’ ஆகச் சொல்லியிருக்கிறார் இயக்குனர் பாரி இளவழகன். இளவரசன் – தாண்டவம் இடையே கூத்துக் குழுவை யார் நடத்துவது என்பதில் வரும் பிரச்சனைகளைப் பின்பாதியில் சொல்லியிருக்கிறார்.
இவ்விரு விஷயங்களுக்கும் இடையே தொடர்பிருப்பதாகச் சொன்னாரா, இல்லையா என்பதே அதனைப் பார்ப்பவர்களின் கேள்வியாக இருக்கும். அதற்கேற்ப ஏதேனும் ஒன்றைக் கூட்டியும் இன்னொன்றைக் குறைத்தும் சொல்லியிருக்கலாம். அது, ரத்தினச் சுருக்கமாக ஒரு பிரச்சனையைத் திரைக்கதையில் அணுக வசதியாக இருந்திருக்கும்.
கல்யாணத்திடம் குடிகொண்ட பெண் தன்மை குறித்து நகைச்சுவையாகச் சில காட்சிகள் முன்பாதியில் உள்ளன. அது போன்ற காரணங்களுக்காக, ஒரு ஆணின் மீதான பெண்ணின் ஈர்ப்பு குறைந்துவிடாது என்கிறார் இயக்குனர். தெளிவுறச் சொல்லப்பட்டிருந்தாலும், அது நம் மனதைத் தைப்பதில்லை. திரைக்கதையில் அந்த இடம் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டிருக்க வேண்டும்.
போலவே தெருக்கூத்து வாத்தியாரின் மகள் உடனான வாழ்வா அல்லது கூத்தில் இடம்பெறும் வாய்ப்பா என்று நாயகன் குழம்புவது தெளிவாகச் சொல்லப்படவில்லை.
தனிக்குழுவை ஆரம்பிக்க நாயகன் முயற்சிக்க, அதற்கு உடனிருப்போர் துணை நிற்பதில்லை. அதற்கான காரணம், கடைசி இருபது நிமிடக் காட்சிகளில் சொல்லப்படுகிறது.
மகாபாரதத்தில் கர்ணன் மரணம் தொடர்பான கூத்து காட்சி நீண்ட நேரம் திரையில் ஓடுகிறது. அதனை ரசித்துப் பார்க்கும் அளவுக்கு, இக்கதையோடு நம்மை ஒன்ற வைத்திருப்பது இப்படத்தின் ப்ளஸ். அதற்காக, இயக்குனரை நாம் பாராட்ட வேண்டும்.
கதாபாத்திர வார்ப்பு, கதையிலுள்ள முடிச்சுகள், அவற்றின் முடிவுகளைத் தெளிவுற வடிவமைத்திருக்கிறார் இயக்குனர் பாரி இளவழகன். ஆனால், அதனைப் பொட்டிலடித்தாற்போலச் சொல்கிற ஒரு திரைக்கதையைத் தவறியிருக்கிறார். அதனால், தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்வைக் காணும் அனுபவத்தைச் செறிவுடன் தரும் வேலையை மட்டுமே ‘ஜமா’ செய்கிறது.
ஆனால், மேற்சொன்ன விஷயங்கள் எல்லாம் படம் பார்த்து முடித்தபிறகே நமக்கு நினைவுக்கு வரும். அந்தளவுக்கு இதில் நடிப்புக் கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பு வியக்க வைக்கும் அளவுக்கு உள்ளது.
சிறப்பான முயற்சி!
நாயகனாக நடித்திருக்கும் பாரி இளவழகனே இதனை இயக்கவும் செய்திருக்கிறார். அறிமுகப் படம் என்பதால், அவர் வெவ்வேறு தோற்றங்களில் வந்துபோவது நம்மைப் பெரிதாகப் பிரமிக்க வைக்கவில்லை. இதையே வேறொரு நடிகர் செய்தால் கொண்டாடித் தீர்ப்போம் என்பதே உண்மை.
அம்மு அபிராமி இதில் நாயகி. நாயகனைச் சுற்றிச் சுற்றி வந்து காதலிக்கும் பாத்திரம் என்றபோதும், அவரது இருப்பு திரைக்கதையில் வேறுபட்டு நிற்கிறது.
சேத்தன் இதில் தாண்டவம் எனும் கூத்து வாத்தியாராக நடித்துள்ளார். ரசிகர்கள் கொண்டாடுகிற ஒரு நடிப்பைத் திரையில் தந்துள்ளார்.
போலவே, ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ வெப் சீரிஸில் வில்லனாக கலக்கிய ஸ்ரீ சங்கர் தயாள் இதில் இளவரசனாக நடித்துள்ளார். பின்பாதியில் வரும் பிளாஷ்பேக் காட்சியின் நீளம் போரடித்தாலும், அதில் அவரது நடிப்பு அக்குறையை மறக்கடிக்கிறது.
இவர்களை அடுத்து நாயகனின் தாயாக வரும் கேவிஎன் மணிமேகலை நம்மை ஈர்க்கிறார். ‘குங்குமப்பூவும் கொஞ்சுபுறாவும்’, ‘நண்பன்’ உட்படப் பல படங்களில் நடித்துள்ள இவர், ஆற்காடு வட்டாரத் தமிழைப் பேசும் விதமே தனி.
இப்படத்தில் நாயகன் கல்யாணத்திற்கு ஆதரவாகப் பேசுபவர்களாக இரு பாத்திரங்கள் உள்ளன. அவை வருமிடங்கள் நம்மைச் சிரிக்க வைக்கின்றன. அவற்றை ஏற்ற நடிகர்களில் ஒருவரான வசந்த் மாரிமுத்து, திரையில் புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறார்.
கிராமத்துச் சூழல், தெருக்கூத்து நிகழும் பின்னணி, கலைஞர்களின் முக பாவனைகளைத் தெளிவுறக் காட்டியதில் ‘சபாஷ்’ சொல்ல வைக்கிறார் ஒளிப்பதிவாளர் கோபால் கிருஷ்ணா.
கலை இயக்குனராகப் பணியாற்றியிருக்கும் ஸ்ரீகாந்த் கோபால், அந்த வட்டார மக்களின் வாழ்வுமுறையைத் திரையில் பதிவு செய்ய முற்பட்டிருக்கிறார்.
ஒலி வடிவமைப்பினைக் கையாண்டிருக்கும் ஏ.எம்.செந்தமிழன், எஸ்.சதீஷ்குமார் கைவண்ணத்தில் தெருக்கூத்து காட்சிகள் வித்தியாசமான திரையனுபவத்தைத் தருகின்றன.
’ஜமா’ கதையைத் திரைக்கதை ஆக்கியதில் சில தடுமாற்றங்களைச் சந்தித்திருக்கிறார் இயக்குனர். சொன்னதையே திரும்பச் சொல்வதைத் தவிர்க்கும் வகையில் பிளாஷ்பேக்கில் மௌனத்தைப் பயன்படுத்துவது, கருப்பு வெள்ளை மற்றும் பிரேம்களின் அளவை மாற்றியமைப்பது என்று செயல்பட்டிருக்கிறார்.
கதை சொல்லலைப் பொறுத்தவரை, சில தகவல்கள் வெளிப்படவும் அந்த பிளாஷ்பேக்குகளே காரணமாக உள்ளன. அதனால், அக்காட்சிகளைத் தொகுத்தளித்த விதம் திரையில் குழப்பத்தை உண்டாக்குகிறது. படத்தொகுப்பாளர் பார்த்தா முடிந்தவரை அதனைச் சரிப்படுத்தியிருக்கிறார்.
ஒப்பனை, ஆடை வடிவமைப்பு உட்படப் பல தொழில்நுட்ப அம்சங்கள் இதில் சிறப்பாக அமைந்துள்ளன.
இந்தப் படத்தில் இளையராஜாவின் பங்கு என்னவென்பதை மிகச்சில நிமிடங்கள் திரையைப் பார்த்தாலே சொல்லிவிட முடியும்.
தனது பின்னணி இசையால் முன்பாதியில் நாயகன் நாயகி காதலை மேலுயர்த்திக் காட்டியவர், பின்பாதியில் தெருக்கூத்து எனும் கலையின் மீது நாயகனின் தந்தை கொண்ட காதலைத் தன் இசையால் விரிவாகச் சொல்லியிருக்கிறார். அந்தக் காட்சிக்கோர்வைகளில் அவரது இசை ஒலிக்கும்போது ‘ஆஹா’ என்றிருக்கிறது.
’இந்தப் பாடலை எப்படி ரசிக்க மறந்தோம்’ என்ற எண்ணம் தொண்ணூறுகளுக்கு பிறகு வெளியான இளையராஜாவின் பாடல்களைக் கேட்கையில் தோன்றும். அந்த ரகத்தில், இப்படத்திலும் பாடல்கள் அமைந்துள்ளன.
இதுவரை நாம் காணாத சில கலைஞர்களைக் கொண்டு, ’ஜமா’ போன்ற ஒரு கதையைத் திரையில் குறைவான பட்ஜெட்டில் சொல்வதென்பது சவாலான முயற்சி. அதனைச் சிறப்பாகக் கையாண்டிருக்கிறார் இயக்குனர் பாரி இளவழகன்.
திரையில் தென்படும் ஒரு கதையோடு ரசிகர்கள் தங்களைப் பொருத்திக் கொள்வது எளிதான காரியமல்ல. அதனைச் சாதித்திருக்கிறது இப்படம்.
திரைக்கதையில் எளிமையைக் கூட்டியிருந்தால் ‘ஜமா’ தொட்டிருக்கும் உயரம் வேறாக இருந்திருக்கும் என்பதையும் வருத்தத்துடன் சொல்ல வேண்டியிருக்கிறது.
முழுக்க கமர்ஷியல் சினிமாவுக்கான அம்சங்களைக் கொண்ட படம் என்று இதனைச் சொல்ல முடியாது. அதேநேரத்தில், முதன்முறை பார்க்கையில் திரைக்குள் இழுத்துக் கொள்வதற்கான கூறுகளையும் கொண்டது இந்த ‘ஜமா’!
- உதயசங்கரன் பாடகலிங்கம்