சினிமாவில் – உதகமண்டலமும், கொடைக்கானலும் ‘டூயட்’டுக்கான இயற்கை அரங்கங்கள் என்றால், ரயில்கள், சாகச சண்டைக் காட்சிகளுக்கான களமாக இருந்தன.
இதற்கு ‘ஷோலே’ மூலவர் என்றால், அதனைப் பிரதி எடுத்த தமிழ் நகல்களாக அமைந்தன ‘முரட்டுக்காளை’யும் ‘கேப்டன் பிரபாகார’னும்.
மூன்று படங்களிலும் ரயில் சண்டைக் காட்சிகள், ரசிகர்களை இருக்கையின் நுனிக்குத் தள்ளிப் படபடக்க செய்தவை.
அப்படி ரயில் நிலையங்களில் இடம்பெற்ற சில தமிழ்ப் படங்களின் ‘கிளைமாக்ஸ்’ காட்சிகள், ரசிகர்களின் கண்களைக் குளமாக்கியதோடு, தயாரிப்பாளர்களின் கஜானாவையும் கடலாக்கின.
அந்த அமர காவியங்கள் குறித்த ஒரு தொகுப்பு:
அள்ளி முடித்த கூந்தலோடு, விழிகளில் ஏக்கமும், முகம் முழுக்க கவலைச்சுவடுகளும் படிந்து ரயில் நிலையத்தில் காத்திருப்பாள், மயில்.
அடுத்த ரயிலிலாவது சப்பாணி வருவான் என அவளுக்குள் ஒரு நம்பிக்கை. நப்பாசை. சங்கொலி எழுப்பி, புகை கக்கிபடி வரும் நீராவி ரயில் அந்த ஸ்டேஷனில் சற்று நின்று இளைப்பாறும்.
ரயிலில் இருந்து யார் யாரோ இறங்குவார்கள். சப்பாணி வரமாட்டான். ரயில் அவளைக் கடந்து செல்லும். புள்ளியாய் ரயில் மறையும் வரை அதனைப் பார்த்துக்கொண்டே இருப்பாள் மயில்.
அடுத்த ரயிலின் வருகையை எதிர்பார்த்து நிற்கும் அவளது மனசாட்சி, “இந்த மயில் வாழ்நாள் பூரா உனக்காக காத்திருப்பாள்” என வெள்ளித்திரையில் குரலாய் ஒலிக்கும்.
இது, தமிழ்த் திரையுலகின் போக்கையே திசை திருப்பிய 16 வயதினிலே படத்தின் ‘கிளைமாக்ஸ்’. ரயில் நிலையத்தில் மயிலின் காத்திருப்போடு தான் படமும் தொடங்கி இருக்கும்.
பாரதிராஜா எனும் மகத்தான கலைஞனை ‘பச்சை விளக்கு’ கட்டி, வரவேற்று அழைத்து வந்த படம் இது.
தற்செயலாகவோ அல்லது திட்டமிட்டு அமைந்ததோ என தெரியவில்லை, பாரதிராஜாவின் இரண்டாவது படமான ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தின் ‘கிளைமாக்ஸ்’ காட்சியும் ரயில் நிலையத்தில் தான்.
தொடர்க்கதையாக முடிந்திருக்கும், அவரது முதல்படம். ஆனால் இரண்டாம் படத்தில் காதலர்கள், பரஞ்சோதியையும் பஞ்சாலியையும் இணைத்து வைத்து ‘முற்றும்’ போட்டு முடித்திருப்பார், பாரதிராஜா.
ரயிலின் ‘கார்டு’ ஆக இருந்து அவரே காதல் ஜோடியை வழி அனுப்பி வைத்திருப்பார்.
ஒருதலை ராகம்:
ரயிலையும், ரயில் சார்ந்த இடங்களையும் கதைக்களமாகக் கொண்டு நெய்யப்பட்ட அமரகாவியமான ‘ஒருதலை ராகம்’, டி. ராஜேந்தர் எனும் அஷ்டாவதானியை கோடம்பாக்கத்துக்கு சுமந்து வந்த படம் எனலாம்.
சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட அவமானங்களால், உண்மையான காதலை ஏற்றுக்கொள்ள முடியாமல் துடிக்கும் கல்லூரி மாணவியின் காதலைச் சொன்ன திரைப்படம்.
காதலியால் நிராகரிக்கப்பட்ட குருவி, நிபந்தனைப்படி, தனது குருதியால் வெள்ளை ரோஜாவை சிவப்பு ரோஜாவாக மாற்றுகிறது. மாய்ந்தும் போகிறது.
ரயில் பெட்டியில் சடலமாக கிடக்கும் குருவியிடம் காதலைச் சொல்ல வருகிறது, ரோஜா. நிஜம் தெரிந்ததும், ரோஜாவும் தன்னை கருக்கிக்கொள்கிறது.
கமல், ரஜினி, ஸ்ரீதேவி, இளையராஜா போன்றோர், பாரதிராஜாவுக்கு, முதல் படத்தில், அவருக்கான முகவரியை சொல்லும், ஒரு ‘விசிட்டிங் கார்டு’ ஆக இருந்தார்கள்.
டி.ஆருக்கு யாருமே இல்லை. நடிகர் – நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் எல்லோரும் புதுமுகங்கள். ஆனாலும் டி.ஆர் அடித்தார் ‘ஜாக்பாட்’.
மூன்றாம் பிறை:
முழு நிலவாய் ஒளிரும் ஸ்ரீதேவி, ஒரு விபத்தில் மூளை பாதிக்கப்பட்டு ‘மூன்றாம் பிறை’யாக ஒளி மங்கிப் போகிறார். அந்தக் குழந்தையை மீண்டும் மனுஷி ஆக்குகிறார், கமல்ஹாசன்.
‘ஸ்டாம்ப்’பின், பின் பக்கம் எழுதி விடக்கூடிய ஒரு பக்கக் கதை தான். கமல், ஸ்ரீதேவியின் உணர்ச்சிகரமன நடிப்பு, இளையராஜாவின் மயக்கும் இசை, ஊட்டியின் வனப்பு மற்றும் விறுவிறுப்பான திரைக்கதை ஆகியவை இந்தப் படத்தை, வேறொரு தளத்துக்குக் கொண்டு சென்றது.
ஆர்.எம். வீரப்பனின் மருமகன் தியாகராஜன் உருவாக்கி இருந்த சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்த முதல் படம், இது. பாலு மகேந்திரா இயக்கினார்.
படத்தின் அடிநாதமே, ரயில் நிலையத்தில் நிகழும் ‘கிளைமாக்ஸ்’ காட்சிதான். பைத்தியமாக இருந்த ஸ்ரீதேவியை மனுஷியாக்கிய கமல், பழைய நினைவுகளை ஸ்ரீதேவிக்கு வரவழைக்கும் பொருட்டு, பழைய கோமாளி வேடத்தைப் போட, கமலை ‘ஒரு பைத்தியம்’ என கருதி நகர்ந்து செல்கிறது, அந்த முழு நிலா.
பத்து, பதினைந்து காட்சிகளில் ஸ்ரீதேவி வெளிப்படுத்திய அசாத்திய நடிப்பை, இந்த ஒரே காட்சியில் அநாயாசமாக, உடல் மொழியிலும், முகபாவனையிலும் காட்டி, சுலபமாக ‘ஸ்கோர்’ செய்திருப்பார் கமல்.
திரைக்குள் மேகம் கண்ணீர் சிந்த, தியேட்டரில் ரசிகர்கள் கண்ணீர் சிந்தியபடி வெளியேறுவார்கள்.
இந்த ஒரு காட்சிக்காகவே, கமலுக்கு தேசிய விருது கிடைத்தது.
காதல் கோட்டை:
ஜெய்ப்பூரில் வேலை பார்க்கும் சூரியாவும், கோத்தகிரியில் வசிக்கும் கமலியும், ஒருவரை ஒருவர் நேரில் பார்த்ததில்லை. இதற்கு முன் அறிமுகம் ஏதும் கிடையாது. ஆனாலும் காதலர்கள். கடிதங்கள் மூலம் காதலை வளர்க்கிறார்கள்.
சூரியாவை சென்னையில் ஒருமுறை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கமலிக்கு கிட்டுகிறது. சூரியாதான் தனது காதலன் என தெரியாத நிலையில், அவரை திட்டித்தீர்த்து அவமானப்படுத்துகிறார், கமலி.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ‘கிளைமாக்ஸ்’. அங்கு சூரியாவும் கமலியும் நேரில் சந்திக்கிறார்கள்.
சூரியாவுக்கு கமலி நெய்து அனுப்பிய ‘ஸ்வெட்டர்’ பரஸ்பரம் இருவரையும் அறிமுகம் செய்து வைக்கிறது. காதல் கை கூடுகிறது.
அந்த ரயில் நிலையக் காட்சிகள், ரசிகர்களை இருக்கையின் நுனிக்கு வரவழைத்து, இதயத்தை படபடக்க செய்தவை என்று சொன்னால் மிகையல்ல.
அஜித்தையும், இயக்குநர் அகத்தியனையும் ஒரே நாளில் உச்சத்துக்குக் கொண்டுசென்ற படைப்பு. இந்த படத்துக்காக அகத்தியனுக்கு சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது கிடைத்தது.
பிற்காலத்தில் தேவயானி கே.கே. நகரில், தான் கட்டிய இல்லத்துக்கு ‘கமலி’ என பெயர் வைக்கும் அளவுக்கு ‘காதல்கோட்டை’ அவரது கேரியரில் முக்கிய சினிமாவாக அமைந்தது.
இந்த ஐந்து படங்களும், புரமோஷன், விளம்பரம், உச்ச நட்சத்திரங்கள், நேரு அரங்க ‘டிரைலர்’ வெளியீடுகள் போன்ற ‘ஜிகினா’க்கள் இல்லாமல் வெளியாகி, வெள்ளிவிழா கண்டவை.
சில படங்கள் ஓராண்டு தாண்டியும், ‘சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ்’ போல் தடதடத்து பயணித்து, கோடம்பாக்கத்தை கிடுகிடுக்க வைத்தவை.
– பாப்பாங்குளம் பாரதி.