டெட்பூல் & வோல்வரின் – சூப்பராக இருக்கிறதா? மொக்கை போடுகிறதா?

ஹாலிவுட்டில் தயாராகும் அனைத்து படங்களும் உலகம் முழுக்க வெளியாவதில்லை. ஆக்‌ஷன், ரொமான்ஸ், காமெடி கலந்த திரைப்படங்கள் அவ்வப்போது பரவலான வரவேற்பைப் பெற்றாலும், சூப்பர்ஹீரோக்களை காட்டும் ‘அட்வெஞ்சர்’ வகைமை படங்கள் மட்டுமே உலகம் முழுக்க வெளியாகின்றன. அதற்கேற்ப வசூல் பட்டியலில் குறிப்பிடத்தக்க இடங்களையும் பிடிக்கின்றன.
அதனை மனதில் கொண்டு, ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத இரு சூப்பர்ஹீரோ பாத்திரங்களை ஒரே படத்தில் கொண்டுவந்தால் என்ன என்ற யோசனையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கிறது ‘டெட்பூல் & வோல்வரின்’.
20த் செஞ்சுரி பாக்ஸ் நிறுவனத்தை விலைக்கு வாங்கி ‘20த் செஞ்சுரி ஸ்டூடியோஸ்’ என்று பெயர் மாற்றம் செய்த டிஸ்னி நிறுவனம், நெடுங்காலமாகக் கிடப்பில் இருக்கும் சில ‘சாகச’ பாத்திரங்களுக்கு உயிரூட்டும் முயற்சியில் இறங்கியுள்ளது. அந்த வகையில் மரணமடைவதாகக் காட்டப்பட்ட ‘வோல்வரின்’ பாத்திரத்தை உயிர்ப்பித்து தனது ஆட்டத்தைத் தொடங்கியுள்ளது. காமெடி கலந்த ஆக்‌ஷனில் வெளுத்துக் கட்டுகிற, இதுவரை சூப்பர்ஹீரோக்களுக்கு இருந்த வரையறைகளை வெகுவாக உடைத்த ‘டெட்பூல்’ பாத்திரத்தை அதற்காகப் பயன்படுத்தியிருக்கிறது.
  இந்த முன்கதை மட்டுமல்லாமல் ‘அவெஞ்சர்ஸ்’ சீரிஸ் சம்பந்தப்பட்ட பாத்திரங்களோடும் பரிச்சயம் இருந்தால், இந்தப் படத்தைக் கொண்டாடலாம். அந்த அளவுக்குப் பல பாத்திரங்கள் இதில் ‘கௌரவ தோற்றத்தில்’ தலைகாட்டியிருக்கின்றன.
‘அதெல்லாம் இருக்கட்டும், படம் எப்படியிருக்கு’ என்று கேட்கிறீர்களா? தொடர்ந்து வருவனவற்றைப் படித்தால் நீங்களே ஒரு முடிவுக்கு வந்துவிடுவீர்கள்.
உயிர்ப்பிக்கப்படும் வோல்வரின்!
‘அவெஞ்சர்ஸ்’ குழுவில் ஒருவராக இடம்பெற வேண்டும் என்பது டெட்பூல் ஆக இருந்து வரும் வேடு வில்சனின் (ரேயன் ரினால்ட்ஸ்) ஆசை. அதற்காக, தனது டைம்லைனை (?!) விட்டு வெளியேறி, இன்னொரு காலகட்டத்திற்குச் சென்று ‘அவெஞ்சர்ஸ்’ குழுவின் தலைமைப் பொறுப்பில் இருப்பவரையும் சந்தித்துப் பேசுகிறார். அவரோ, ‘உனக்கு அதற்கான தகுதி இல்லை’ என்று நிராகரிக்கிறார்.
பிறகு, ‘டெட்பூல்’ அந்தஸ்தை துறந்துவிட்டு சாதாரண மனிதராக வேலை செய்து வருகிறார் வேடு வில்சன். தனது நண்பர்கள், தோழிகளுடன் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
அப்போது, வேறொரு ‘டைம்லைனில்’ இருந்து வந்தவர்கள் அவரை அழைத்துச் செல்கின்றனர். அங்கு, பேரடாக்ஸ் என்பவரைச் சந்திக்கிறார் வேடு வில்சன்.
அவரோ, ‘அழியப்போகும் உனது டைம்லைனை காப்பாற்ற வோல்வரினால் மட்டுமே முடியும்’ என்கிறார். அதாவது, நண்பர்களுடன் வேடு வில்சன் மகிழ்ச்சியாக வாழ்ந்துவரும் பிரபஞ்சமே அழியப் போகிறது என்கிறார் அந்த நபர்.
அதனைக் கேட்டதும், எப்பாடுபட்டாவது வோல்வரினை அழைத்து வர வேண்டுமென்று வெவ்வேறு காலகட்டத்திற்குப் பயணிக்கிறார் வேடு வில்சன். அதற்காக ‘டெட்பூல்’ ஆகவும் மாறுகிறார். ஆனால், மிக மோசமான நிலைமையில் இருக்கும் ஒரு ‘வோல்வரினை’ (ஹக் ஜாக்மேன்) மட்டுமே அவரால் அழைத்து வர முடிகிறது.
ஆச்சர்யமுறும் பேரடாக்ஸ் அதனை வெளிக்காட்டாமல், அவர்கள் இருவரையும் ‘வாய்டு’க்கு அனுப்பி வைக்கிறார். குப்பைக்கிடங்கு போல, உதவாக்கரையாகக் கருதப்படும் சூப்பர் ஹீரோக்களை அங்கு அனுப்புவது பேரடாக்ஸின் வழக்கம். அப்படித்தான் வோல்வரினையும் டெட்பூலையும் அங்கு அனுப்புகிறார்.
அந்த இடமானது கேசண்டரா நோவா என்பவரின் கட்டுப்பாட்டில் உள்ளது. அவர், ஒருகாலத்தில் எக்ஸ்-மென் குழுவின் தலைவராக இருந்த சார்லஸ் சேவியருடன் இரட்டைக் குழந்தையாகப் பிறந்த தங்கை. வாய்டில் இருந்து எவரும் தப்பிக்க முடியாது என்பதே விதி என்று அவர் கண்டிப்பாகச் சொல்கிறார். அதனால், அவர் பிடியில் இருந்து தப்பிக்கும் வோல்வரினும் டெட்பூலும் வேறு சில சாகசக்காரர்களைச் சந்திக்கின்றனர்.
எலக்ட்ரா, லாரா, கேம்பிட், பிளேடு ஆகிய நால்வரோடு இவர்கள் இருவரும் சேர்ந்து, மீண்டும் நோவாவைச் சந்திக்கச் செல்கின்றனர். அப்போது நடக்கும் சண்டையின் இறுதியில், மீண்டும் பேரடாக்ஸை சந்திக்கும் வாய்ப்பு வோல்வரினுக்கும் டெட்பூலுக்கும் கிடைக்கிறது.
ஆனால், அவர்கள் பின்னே வரும் நோவா, நேராகச் சென்று பேரடாக்ஸின் இடத்தைப் பிடிக்கிறார். தனது பிடியிலுள்ள வாய்டு தவிர, மற்றனைத்து டைம்லைன்களையும் உருக்குலைக்க முடிவெடுக்கிறார். அது நடந்ததா, இல்லையா? நோவாவின் குரூரச் செயலை வோல்வரினும் டெட்பூலும் தடுத்தார்களா என்று சொல்கிறது மீதிப்படம்.
இறந்துவிட்டதாகக் கருதப்பட்ட வோல்வரின் பாத்திரத்தை உயிர்ப்பித்திருக்கிறது ‘டெட்பூல் & வோல்வரின்’. இப்படத்தின் யுஎஸ்பியும் அதுவே.
சிறப்பான விஎஃப்எக்ஸ்!
‘டெட்பூல்’ எனும் பாத்திரமே சூப்பர்ஹீரோக்களை, சூப்பர்ஹீரோயின்களை கிண்டலடிக்க்ம் விதமாக உருவாக்கப்பட்டது என்பது எனது தனிப்பட்ட கருத்து. அதனால், அது தொடர்பான கேலிகளை அப்பாத்திரம் உதிர்த்தவாறே இருக்கும். கோடிக்கணக்கில் விஎஃப்எக்ஸுக்காக செலவழிக்கப்பட்டு உருவாக்கப்படும் சாகசப்படங்களில் ’டெட்பூல்’ படங்கள் வேறுபட்டதும் அதனால் தான்.
ஆனால், இப்படத்தில் டெட்பூல் பாத்திரமானது ‘அட்வெஞ்சரஸ்’ படங்களுக்கான உதாரணங்களில் ஒன்றாகத் திகழும் ‘வோல்வரின்’னோடு ஒன்றாகச் சுற்றுகிறது. சாகசங்களைச் செய்கிறது. அதனால், சில நேரங்களில் இது ‘அட்வெஞ்சர்’ வகைமையிலும், சில நேரங்களில் ‘ஸ்பூஃப்’ வகைமையிலும் தோற்றமளிக்கிறது.
டைட்டில் காட்சியில் வோல்வரினை தேடி மண்ணுக்குள் புதைந்து கிடக்கும் எலும்புக்கூட்டை டெட்பூல் தேடியெடுப்பதாகக் காட்டப்படுகிறது. அதனைத் தொடர்ந்து பேரடாக்ஸ் அனுப்பும் ஆட்களை டெட்பூல் பந்தாடுவதாகவும் அக்காட்சி உள்ளது. அதில் விஎஃப்எக்ஸ் அசத்தல் ரகம். அதுவும் ‘3டி’யில் அந்தக் காட்சியைப் பார்க்கும் சுகமே தனி.
ஆனால், அந்த அனுபவம் தொடர்ந்து கிடைக்கவில்லை என்பது தான் சோகம். முப்பரிமாணப் படத்தை முன்வரிசையில் அமர்ந்து பார்ப்பது ஒருவகையில் அலாதியான அனுபவம். அதற்கேற்றாற்போல, சிற்சில காட்சிகளே இப்படத்திலுள்ளன. கிளைமேக்ஸ் சண்டைக்காட்சி அந்த வகையில் திருப்தி தருகிறது.
டெட்பூல் ஆக வரும் ரேயன் ரினால்ட்ஸ், வோல்வரின் ஆக வரும் ஹக் ஜாக்மேன், வில்லி நோவா ஆக வரும் எம்மா கோரின் மற்றும் மொரீனா ப்க்கரின், ரோப் டெலினே, லெஸ்லி உக்கம்ஸ், மேத்யூ மெக்பதைன் தவிர்த்து ஜெனிஃபர் கார்னர், வெஸ்லி ஸ்னிப்ஸ் உட்படப் பல பிரபலங்கள் தாங்கள் நடித்த ‘சாகச’ பாத்திரங்களாக இதில் இரண்டொரு காட்சிகளுக்கு வந்து போயிருக்கின்றனர்.
அவற்றைக் கொண்டு இன்னும் பல படங்கள் வெளியாக, அக்காட்சிகள் நிச்சயம் உதவிகரமாக இருக்கும். அதைத் தவிர, அவற்றைச் சிலாகிக்க அவசியம் ஏதும் இல்லை. ஆனால், அக்காட்சிகளுக்கு ரசிகர்கள் தரும் உற்சாகமோ மலைக்க வைக்கும் அளவுக்கு இருக்கிறது.
ஜார்ஜ் ரிச்மண்டின் ஒளிப்பதிவு, ராப் சிமோன்சனின் பின்னணி இசை, டீன் ஜிம்மர்மேன், ஷேன் ரெய்டின் படத்தொகுப்பு, ரே சானின் தயாரிப்பு வடிவமைப்பு என்று பல்வேறு கலைஞர்களின் தொழில்நுட்ப உழைப்பு படத்தின் தரத்தை மேலுயர்த்தியிருக்கிறது.
நாயகன் ரேயன் ரினால்ட்ஸ் மற்றும் ரெட் ரீஸ், பால் வெர்னிக், ஸெப் வெல்ஸ், ஷான் லெவி ஆகியோர் எழுத்தாக்கம் செய்துள்ளனர். டெட்பூல் இதில் காமெடி வசனங்களை உதிர்த்தாலும் முதல் மற்றும் இறுதிப்பகுதி தவிர்த்து மீதமுள்ள காட்சிகளில் பெரிதாக நகைச்சுவை இல்லை. போலவே, ‘இது ஸ்பூஃப் படமா’ என்ற சந்தேகம் எழும் வகையிலேயே பல காட்சிகள் உள்ளன.
ஷான் லெவி இதனை இயக்கியிருக்கிறார்.
இரண்டு புகழ் பெற்ற ‘சூப்பர் ஹீரோ’ பாத்திரங்களை, ஒன்றுக்கொன்று வேறுபட்ட தன்மை கொண்டவற்றை, ஒரே பிரேமில் இடம்பெற வைத்திருக்கிறார். அந்த வகையில், இது ‘பேட் பாய்ஸ்’ ரகத்தில் அமைந்திருக்கிறது. காமெடியும் ஆக்‌ஷனும் கலந்திருந்தாலும் கூட, நாம் எதிர்பார்க்கும் அளவுக்கு ‘சாகசத்தனமாக’ இப்படம் அமைந்திருக்கிறதா என்பது சந்தேகமே. ஏனென்றால், சில காட்சிகளைப் பார்க்கையில் ‘மொக்கை’யாக தெரிகின்றன. சில காட்சிகள் ‘ஓகே’ ரகத்தில் இருக்கின்றன.

 

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், வசூலை மனதில் கொண்டு எடுக்கப்பட்ட ஒரு ஹாலிவுட் கமர்ஷியல் மசாலா ஆகவே ‘டெட்பூல் & வோல்வரின்’ தென்படுகிறது. தயாரித்தவர்களின் கணிப்பு பலித்ததா, இல்லையா என்பது இன்னும் சில நாட்களில் தெரிய வரும். ரசிகர்களான நமது தலையில் அரைக்கப்பட்டிருப்பது எத்தகைய மசாலா என்பது படம் பார்த்து வெளியே வந்தவுடன் உணர முடியும். அவெஞ்சர்ஸ் ரக சாகசப் பட விரும்பிகளாக இருக்கும்பட்சத்தில், அவற்றின் வரிசையில் இப்படம் சூப்பராக இருக்கிறதா, இல்லையா என்று முடிவெடுப்பதைப் பொறுத்து, படம் தரும் அனுபவமும் மாறுபடும்!
– உதயசங்கரன் பாடகலிங்கம்

#டெட்பூல்_வோல்வரின்_விமர்சனம் #Deadpool_Wolverine_Review #Marvel_Might #Ryan_Reynolds #Hugh_Jackman #ரேயன்_ரினால்ட்ஸ் #ஹக்_ஜாக்மேன்

 

You might also like