ஜூலை 25: உலக நீரில் மூழ்குவதைத் தடுக்கும் தினம்
உலகில் ஆண்டு தோறும் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் நீரில் மூழ்கி உயிரிழப்பதாக ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. இந்தியாவில் ஆண்டுதோறும் சராசரியாக 38 ஆயிரம் பேர் ஆறு, கடல், குளம், வெள்ளம் ஆகியவற்றில் மூழ்கி இறப்பதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு மட்டும் சுமார் 191 பேர் நீரில் மூழ்கி பலியாகி உள்ளனர்.
இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழப்பவர்களில் ஐந்து முதல் 14 வயதுடைய குழந்தைகளை அதிகம் என்கிறது புள்ளிவிவரம்.
இதனைக் கருத்தில் கொண்டு, உயிரிழப்புகளைத் தடுக்கும் வகையில், கடந்த 2021-ம் ஆண்டு முதல் ஐநா சபையும் உலக சுகாதார நிறுவனமும் உலகம் முழுவதும் நீரில் மூழ்கி படியாவதை தடுக்கும் வகையில், ஜூலை 25ஆம் தேதி உலக நீரில் மூழ்குவதைத் தடுக்கும் தினம் என கடைப்பிடித்து வருகிறது.
இந்த தினத்தில் நீரில் மூழ்கி பலியாவதைத் தடுக்க பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த, பல்வேறு தன்னார்வ அமைப்புகள் மூலம் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, தூத்துக்குடியில் உள்ள தன்னார்வ அமைப்புகளான பிரபஞ்சம் அன்பு நிறுவனம் மற்றும் சமம் நிறுவனம், கிறிஸ்தவ வாழ்வுரிமை இயக்கம் ஆகியவை இணைந்து தூத்துக்குடியில் உள்ள புனித மரியன்னை ஆண்கள் பள்ளியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நீரில் மூழ்கி உயிரிழப்பதைத் தடுக்கும் பல்வேறு முன்னெச்சரிக்கை செய்கைகள் பற்றி விளக்கப்பட்டன.