சினிமாவில் அறிமுகமான நான்கே ஆண்டுகளில் இந்தியாவே உற்று நோக்கிய இயக்குநரானார் பிரசாந்த் நீல்.
‘உக்ரம்‘ எனும் கன்னட சினிமாதான் அவர் இயக்கிய முதல் படம். வெளியான ஆண்டு 2014. அந்த படம் அவருக்கு கன்னட சினிமாவில் நல்ல முகவரியை பெற்றுக் கொடுத்தது.
இரண்டாவது படம் – ‘கேஜிஎஃப்‘. (கோலார் கோல்ட் ஃபீல்ட்) 2018-ம் ஆண்டு வெளியான இந்த பான் இந்தியா திரைப்படம், பிரசாந்த் நீலை நாடு முழுவதும் அறிய வைத்தது.
‘கேஜிஎஃப் -2‘, அவரை மிகப்பெரிய வர்த்தக இயக்குநராக உருவாக்கியது. சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வசூலித்தது. இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர், தெலுங்கு பக்கம் சென்றார்.
பிரபாசை கதாநாயகனாக வைத்து ‘சலார்‘ எனும் படத்தை இயக்கினார். இப்போது அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வரும் பிரசாந்த் நீல், ஜுனியர் என்டிஆர் நடிக்கும் தெலுங்கு படம் ஒன்றையும் இயக்க உள்ளார்.
இந்த படங்களை முடித்துவிட்டு அவர், கோடம்பாக்கத்துக்கு வருகை தர உள்ளார்.
ஹீரோ யார் தெரியுமா ?
‘அல்டிமேட் ஸ்டார்’ அஜித்.
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வந்தார். அஜர்பைஜான் நாட்டில் நடந்து வந்த இந்தப் படத்தின் ஷூட்டிங் அண்மையில் நிறைவடைந்தது.
‘விடாமுயற்சி‘யில் நடித்து வந்த அதே நேரத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ படத்திலும் அஜித் நடித்தார். இந்தப் படத்தை முடித்து விட்டு, இயக்குநர் சிறுத்தை சிவாவுடன் அஜித் இணைய உள்ளதாக தகவல் வெளியானது.
ஆனால், அதில் இப்போது மாற்றம். ‘விடாமுயற்சி‘ படப்பிடிப்பில், அஜித்தை இயக்குநர் பிரசாந்த் நீல் சந்தித்துப் பேசியுள்ளார். இந்தச் சந்திப்பின்போது, பிரசாந்த் நீல் இயக்கத்தில் அஜித், இரண்டு தமிழ்ப் படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.
’சலார்-2‘ மற்றும் என்டிஆர் படங்களின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு கடைசியில் முடிகிறது. அதனை முடித்துவிட்டு 2026-ம் ஆண்டு அஜித், படத்தை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளார் பிரசாந்த் நீல்.
அஜித் நடிக்கும் இரண்டு தமிழ்ப் படங்களையும், ‘HOMBALE FILMS’ எனும் பட நிறுவனம் தயாரிக்க உள்ளது.
பெட்டிச் செய்தி: ரூ. 9 கோடியில் புதிய கார்
‘ரேஸ்‘ பிரியரான அஜித்திடம் ஏற்கனவே ‘LAMBORGHINI’ உள்ளிட்ட அரை டஜனுக்கும் மேற்பட்ட கார்கள் உள்ளன. இந்த நிலையில் அவர் 9 கோடி ரூபாய் மதிப்புள்ள ‘FERRARI’ என்ற காரை அண்மையில் துபாயில் வாங்கி உள்ளார்.
விடாமுயற்சி படப்பிடிப்புக்கு சென்ற சமயத்தில் அந்தக் காரை அஜித் ஓட்டிப் பார்த்துள்ளார். பிடித்துப்போகவே அதனை விலைக்கு வாங்கி விட்டார்.
- பாப்பாங்குளம் பாரதி