ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் இருந்தால் வரி இல்லை!

மத்திய பட்ஜெட்டில் சலுகை

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு மூன்றாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை நேற்று (ஜூலை – 22) தாக்கல் செய்யப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக 2024-25 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்தார். இதன்மூலம் தொடர்ந்து 7-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்த முதல் நபர் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் பெற்றுள்ளர்.

பட்ஜெட்டை தாக்கல் செய்யும் முன்பாக நிர்மலா சீதாராமன், பட்ஜெட் முன்னுரையை வாசித்தார்.

“மூன்றாம் முறையாக பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஆட்சி அமைத்து வரலாறு படைத்துள்ளது – அரசின் மீது நம்பிக்கை வைத்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்” என அப்போது அவர் குறிப்பிட்டார்.

இதனை தொடர்ந்து நிர்மலா தாக்கல் செய்த பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு :

விவசாயத்துக்கு ரூ. 1.52 லட்சம் கோடி

* வேளாண்மை மற்றும் அதை சார்ந்த திட்டங்களுக்கு 1.52 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் – வேளாண் துறையில் டிஜிட்டல் தொழில்நுட்பம் மாநிலங்களின் ஒத்துழைப்புடன் நிறைவேற்றப்படும்.

வேர்க்கடலை, கடுகு உள்ளிட்ட எண்ணெய் வித்துப் பயிர்கள் உற்பத்தியில் தன்னிறைவு எட்ட நடவடிக்கை.

* வேலை வாய்ப்பை உருவாக்குதல், திறன் மேம்பாடு உள்பட 5 அம்ச திட்டத்துக்கு 2 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

* மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் உள்நாட்டு உயர்க் கல்வி நிறுவனங்களில் மேற்படிப்புப் பயில ரூ.10 லட்சம் கல்விக்கடன் வழங்கப்படும். புதிதாக பணியில் சேரும் இளைஞர்களுக்கு ஒரு மாத சம்பளம் அரசு சார்பில் வழங்கப்படும்.

* இபிஎஃப்ஓ-வில் பதிவு செய்யப்பட்டு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை பெறும் இளைஞர்களுக்கு ஒரு மாதம் சம்பளம் வழங்கப்படும். இத்திட்டம் மூலம் 30 லட்சம் இளைஞர்கள் பயன்பெறுவர்.

* தொழில்துறையுடன் இணைந்து பெண்களுக்கு தங்கும் விடுதிகள் அமைக்கப்படும். இவ்வாறாக அமைப்பதன் மூலம் பெண்கள் வேலைவாய்ப்பு ஊக்குவிக்கப்படும்.

* முத்ரா கடன் வரம்பு ரூ.20 லட்சமாக அதிகரிக்கப்படுகிறது. முன்பு ரூ.10 லட்சம் வரம்பாக இருந்தபோது கடன் பெற்று, அதை உரிய முறையில் திருப்பிச் செலுத்தியவர்கள் புதிய வரம்பின் கீழ் பயன் பெறலாம்.

3 கோடி வீடுகள் கட்டப்படும்:

* நகரங்கள், கிராமப் புறங்களில் மேலும் 3 கோடி வீடுகள் அமைக்கப்படும்.

* ஊரகப் பகுதிகள் சார்ந்த திட்டங்களுக்கு ரூ.2.66 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு.

* தொழிலாளர்களுக்கான தங்கும் இடம் வசதி அரசு – தனியார் பங்களிப்பில் உருவாக்கப்படும்.

* நாட்டின் 500 முன்னணி நிறுவனங்களில் 1 கோடி இளைஞர்களுக்கு பணி அனுபவம் பெறும் வகையில் இண்டர்ன்ஷிப் பயிற்சி அளிக்கப்படும். இண்டர்ன்ஷிப் திட்டத்தின் கீழ் ஒருமுறை உதவியாக இளைஞர்களுக்கு 6,000 ரூபாய் வழங்கப்படும்.

* நாடு முழுவதும் 20 தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும்.

* தொழில் நிறுவனங்களுக்கு புதிய தீர்ப்பாயம் உருவாக்கப்படும். இதன் மூலம் நிலுவையில் உள்ள ஏராளமான வழக்குகள் முடிவுக்கு வரும்.

* 30 லட்சத்துக்கும் அதிகமாக மக்கள் தொகை கொண்ட 14 பெருநகரங்களில் பொதுப் போக்குவரத்து சார்ந்த வளர்ச்சித் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

* அடுத்த 5 ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில நகரங்களில் அரசு சார்பில் 100 சாலையோர உணவு மையங்களை உருவாக்கப்படும்.

வரிச் சலுகைகள்:

* புற்றுநோய் சிகிச்சைக்கான மூன்று மருந்துகளுக்கு முற்றிலும் சுங்கவரி விலக்கு அளிக்கப்படுகிறது.

* வரிச் சலுகைகளால் மொபைல் போன்கள், மொபைல் உதிரி பாகங்கள், சார்ஜர்களின் விலை குறைகிறது.

* தங்கம், வெள்ளிக்கு இறக்குமதி வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்படுகிறது.

* பிளாட்டினத்துக்கான இறக்குமதி வரி 12 சதவீதத்தில் இருந்து 6.4 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது

* பிளாஸ்டிக் பொருட்களுக்கான இறக்குமதி வரி உயர்த்தப்படுகிறது.

* ஆன்லைன் வர்த்தகத்துக்கான டிடிஎஸ் பிடிப்பு குறைக்கப்படுகிறது.

* டிடிஎஸ் தாக்கலில் நிகழும் தாமதம் இனி கிரிமினல் குற்றமாகக் கருதப்படாது.

* அறக்கட்டளைகளுக்கு இரட்டை வரி முறை நீக்கப்பட்டு, அதே ஒரே வரி முறையாக நடைமுறைப்படுத்தப்படும்

* புதிய வருமான வரி திட்டத்தில் நிரந்தரக் கழிவு ரூ. 50,000-ல் இருந்து ரூ.75 ஆயிரமாக உயர்வு.

* ஆண்டு வருமானம் 3 லட்சம் ரூபாய் வரை இருந்தால் வருமான வரி இல்லை.

* ரூ.3 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை 5% வருமானவரி செலுத்த வேண்டும்.

* ரூ.7 முதல் ரூ.10 லட்சம் வரை 10%, ரூ.10 முதல் ரூ.12 லட்சம் வரை 15% வருமானவரி செலுத்த வேண்டும் – ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை 20%,

* ஆண்டு வருமானம் ரூ.15 லட்சத்துக்கு மேல் இருந்தால் 30% வருமான வரி செலுத்த வேண்டும் என பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

– மு .மாடக்கண்ணு

You might also like