எந்தப் பின்னணியும் இல்லாமல் திரையுலகில் நுழைந்த பலர் வந்த வேகத்தில் காணாமல் போயிருக்கின்றனர். மிகச்சிலர் ஆண்டுக் கணக்கில் பல படங்களில் நடித்து ரசிகர்களின் ஆதரவை வாரியிறைத்திருக்கின்றனர். இவற்றில் இரண்டாவது ரகத்தைச் சேர்ந்தவர் நடிகர் யோகிபாபு.
ஒருகாலத்தில், ‘வாய்ப்பு கிடைப்பதே கஷ்டம்’ என்று பலரால் கணிப்புக்கு உள்ளானது இவரது இருப்பு. இன்று, இவர் இல்லாத படங்களே இல்லை எனும் நிலைமை உள்ளது. விடாமுயற்சி, தனிப்பட்ட திறமை, பழகும் பாங்கு, திரைத்துறை குறித்த புரிதல் என்று அதற்குப் பல காரணங்கள் உள்ளன.
அதுவே, இன்றுவரை அவருக்கான ‘சந்தை மதிப்பை’ப் பல நேரங்களில் ஏற்றங்களுக்கு உள்ளாக்குகிறது; சரிவுகளில் இருந்து காத்து வருகிறது.
‘கோமாளி’ நாயகன்!
தமிழ் சினிமாவில் கவுண்டமணி, செந்திலுக்கு அடுத்தபடியாக வந்தவர்களில் வடிவேலு மட்டுமே தனித்துவமான நகைச்சுவை நடிப்பினால் ரசிகர்களைக் கவர்ந்தார்.
சந்தானம், சூரி, சதீஷ் உட்படப் பலர் முன்னவர்களின் பாணியையே வெவ்வேறுவிதமாகப் பிரதிபலித்தனர் என்று நாசூக்காகச் சொல்லலாம்.
குறிப்பாக, கவுண்டமணியின் எகத்தாளத்தையும் ஆதிக்க குணத்தை வெளிப்படுத்தும் சொல்லாடல்களையும் தங்களுக்கேற்றது போலக் கையாண்டனர்.
யோகிபாபுவோ கவுண்டமணியோடு சேர்ந்து செந்திலையும் தனது நடிப்புக்கான முன்மாதிரியாக எடுத்துக்கொண்டார். அதனால்தான், ஒரே படத்தில் ‘கெத்தான’ உடல்மொழியுடன் அவர் நடிப்பார்; பிற்பாதியில் ஒடுங்கிய நிலையில் தன்னைத் திரையில் வெளிப்படுத்துவார்.
‘கோலமாவு கோகிலா’, ‘ஜெயிலர்’ போன்ற படங்கள் மட்டுமல்லாமல், ’வாரிசு’, ‘மாவீரன்’ என்று பல படங்களை அதற்கு உதாரணம் காட்டலாம்.
‘கோமாளி’, ‘லோக்கல் சரக்கு’, ‘குயிகோ’, ’லவ் டுடே’ என்று ஒரு சில படங்களே அந்த பாணியில் இருந்து விலகி நிற்கும். ‘ஆண்டவன் கட்டளை’ போன்ற படங்கள் யோகிபாபுவை வேறு தளத்தில் வைத்து பார்க்கத் தூண்டும்.
அது மாதிரியான படங்களிலும் கூட, நாயகன் என்ற அந்தஸ்தை தனதாக்கிக் கொண்டாலும் ‘கோமாளி’யாகத் தன்னை வெளிப்படுத்தும் இடங்களைத் திரைக்கதையில் சரியாகக் கண்டறிந்து, அக்காட்சிகளில் சிறப்பாக நடிக்கும் வழக்கம் யோகிபாபுவிடம் இன்றளவும் தொடர்ந்து வருகிறது.
‘ஜெட்’ வேக உழைப்பு!
‘லொள்ளு சபா’ நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு தேடிச் சென்று, உதவி இயக்குநர் ஆனது முதல் ’யோகி’, ‘கலகலப்பு’ படங்களில் முகம் காட்டுவதற்கு முன்பே அடியாளாக, பின்னணியில் நிற்பவராக நடித்தவர் யோகிபாபு.
அந்த அனுபவங்களே, ஒரு காட்சியில் எந்தளவுக்கு ரசிகர்கள் மனதில் நிலைக்கும்விதமாக நடிப்பை வழங்க வேண்டும் என்ற பாடத்தைக் கற்றுத் தந்தது.
பட்டத்து யானை, சென்னை எக்ஸ்பிரஸ், வீரம் படங்களில் அடியாளாக நடித்த யோகிபாபு, ’மான் கராத்தே’வுக்குப் பிறகு குழந்தைகளும் விரும்பக்கூடிய நட்சத்திர நடிகர் ஆனார்.
பிறகு, ஆண்டுக்கு 20 படங்கள் நடிப்பதெல்லாம் அவரைப் பொறுத்தவரை சாதாரணம் ஆனது.
காக்கா முட்டை, ரெமோ, கலகலப்பு 2, குலேபகாவலி, சர்கார் என்று 2015ஆம் ஆண்டு முதல் யோகிபாபுவின் நகைச்சுவை நடிப்புக்கு ரசிகர்கள் சிவப்புக் கம்பள வரவேற்பைத் தரத் தொடங்கினர்.
அதன்பிறகு ஆண்டுக்கு 20 படங்களில் நடிப்பது என்ற முடிவில் தொடர்ந்து பல படங்களில் இடம்பிடித்தார். அவற்றில் சில படங்கள், 2012க்கு பிறகு அவர் ஒப்புக்கொண்டவையாக இருந்தன.
‘சிரிப்பே வரலை’ என்பது போல கிண்டலடிக்கப்படும் வகையில், யோகிபாபுவின் காட்சிகள் தனியாக எடுக்கப்பட்டுச் சில படங்களில் இணைக்கப்பட்டன. அவற்றைவிட, முதன்மை பாத்திரங்களோடும் கதையோடும் இணைந்த அவரது பாத்திரங்கள் பெரிய வரவேற்பைப் பெற்றன.
அவற்றின் உச்சமாக மண்டேலா, கூர்க்கா, தர்ம பிரபு போன்ற படங்களில் அவர் கதை நாயகனாகவும் தோன்றினார்.
பரியேறும் பெருமாள், ஆண்டவன் கட்டளை, கர்ணன் போன்ற படங்களில் குணசித்திர பாத்திரத்திலும் நடித்தார். இந்த ‘ஜெட்’ வேக உழைப்புதான் அவரைத் தனித்துவமானவராக அடையாளம் காட்டியது.
இந்த ஆண்டில் மட்டும் ஜூலை மாதம் வரை, ’குருவாயூர் அம்பல நடையில்’ என்ற மலையாள அறிமுகம் உட்படப் பதினோரு படங்களில் நடித்துள்ளார் யோகிபாபு.
அந்தகன், கோட், கங்குவா என்று சில நட்சத்திர நாயகர்களோடு திரையில் தோன்றும் அதே நேரத்தில் போட், கஜானா என்று தன்னை முன்னிலைப்படுத்தும் படங்களையும் அவர் தந்து வருகிறார்.
இவ்வாறு மாறி மாறி வெவ்வேறுவிதமான கதையம்சங்களைக் கொண்ட படங்களில் நடிப்பதும், ரசிகர்கள் மனதில் தனக்கான சமநிலையைத் தக்கவைத்துக்கொள்வதுமே அவரை இன்றும் ரசிகர்கள் கொண்டாடக் காரணமாக உள்ளது.
மாறும் ‘ட்ராக்’!
சந்தானம் நகைச்சுவை நாயகனாக மாறி ‘தில்லுக்கு துட்டு’, ‘ஏ1’, ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ என்று வேறுவிதமான பாதையில் பயணித்து வருகிறார்.
விடுதலை, கருடன் என்று இன்னொரு பாணியைக் கையிலெடுத்துக்கொண்டு, ஒரு ‘ட்ரெண்ட்செட்டர்’ ஆக உருவெடுத்திருக்கிறார் சூரி. இந்த வரிசையில் இன்னும் பல நகைச்சுவை நடிகர்கள் நாயகர்கள் ஆகலாம்.
இவர்களுக்கு மத்தியில் ‘நாயகனாகவும் நடிப்பேன், நகைச்சுவை பாத்திரங்களிலும் மிளிர்வேன்’ என்று தனி ‘ட்ராக்’கில் பயணித்து வருகிறார் யோகிபாபு. திரையுலகச் செயல்பாட்டைப் பொறுத்தவரை, இது கடினமானதும் கூட.
இதற்கு நடுவே தனது கதை, திரைக்கதை, வசனம் எழுதும் திறமையை வெளிப்படுத்தும் முயற்சியிலும் அவர் இறங்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
‘யோகிபாபு விரைவில் இயக்குனராகவும் மிளிர்வார்’ என்று சமீபத்திய பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார் நடிகர் விஜய் சேதுபதி.
ஜெயம் ரவி போன்றவர்களும் கூட, அதை முன்னரே சொல்லியிருக்கின்றனர்.
அந்த வகையில் சக நாயகர்களின் எதிர்பார்ப்புகளையும் சம்பாதித்திருக்கிறார் யோகிபாபு.
தெலுங்கில் பிரபாஸ் உடன் ‘தி ராஜா சாப்’ படத்தில் நடிக்கிறார். தமிழில் இருந்து இந்திக்கு டப்பிங் செய்யப்பட்ட படங்களின் வழியே வடமாநிலங்களிலும் இவரது புகழ் பரவியிருக்கிறது.
இத்தகைய சூழலில் சிறப்பான பாத்திர வார்ப்புடன், சாதாரண மனிதர்களின் வாழ்பனுபவங்களை நகைச்சுவையாகச் சொல்கிற படங்களில் அவரைப் பொருத்துகிற திரைக்கதைகளுக்குப் பரவலான வரவேற்பு கிடைக்கும் என்ற நிலை உருவாகியிருக்கிறது.
‘மண்டேலா’ போன்ற படங்களில் யோகிபாபு அதிகக் கவனம் செலுத்துவதற்கான காலம் கனிந்திருக்கிறது.
நிச்சயமாக இந்த ‘ட்ராக்’ யோகிபாபுவின் பன்முகத்திறமையைப் பல மடங்கு ஊதிப் பெருக்கும் என்று நிச்சயமாக நம்பலாம். ரசிகர்களுக்கு அவர் தரும் பரிசுகளாக இருக்கும் என்றும் சொல்லலாம்!
– உதய் பாடகலிங்கம்