இயற்கை வளம் அனைவருக்குமான பொதுச் சொத்து!

பெருந்தலைவர் காமராசர்

பரண்:

”நம் எல்லையிலுள்ள மேற்கு மலைத் தொடரில் துவங்கி உங்கள் ராஜ்ஜியத்தின் வழியாக கடலிலே வீழ்ந்து, யாருக்கும் பயன்படாமல் வீணாகிறதே, அந்தத் தண்ணீரை நாங்கள் பயன்படுத்திக் கொள்ளலாமா?” என்று தமிழ்நாடு சர்க்கார் கேட்டால்,

கேரளத்தின் முதல்வர் தாணுப்பிள்ளை, ”யார் வீட்டு நீரை யார் பயன்படுத்துவது? எங்கள் ராஜ்யத்தில் தண்ணீர் இருக்கிறது என்று உங்களுக்கு யார் சொன்னது? அது வீணாகிறது என்று நீங்கள் எப்படிச் சொல்லலாம்? வருங்காலத்தில் அதைப் பயன்படுத்தி விவசாயம் செய்யவும், மின்சாரம் எடுக்கவும் நாங்கள் திட்டம் போடலாம். அப்போது அது எங்களுக்குத் தேவையாக இருக்கலாம். ஆகவே தண்ணீரைக் கேட்காதீர்கள்” என்று மறுத்து வருகிறார்.

“பாரத தேசம் ஒரே நாடு, இதில் வாழும் மக்கள் தங்கள் சுக துக்கங்களையெல்லாம் பகிர்ந்துகொள்ள வேண்டிய ஒரே குடும்பத்தினர்.

ஒரு பகுதியில் ஒரு குறிப்பிட்ட கனிமவளம் அதிகம் இருந்தால் அதை மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும். நாட்டின் இயற்கைச் செல்வம் நாட்டு மக்களுக்கெல்லாமே பொதுவான சொத்து” என்ற தத்துவப்படிதான் கேரளத்தில் உபரியாக உள்ள நீரைக் கேட்கிறது தமிழகம்.

இதே தமிழகத்திலுள்ள தஞ்சையில் லாரிகளைக் கொண்டுவந்து, அறுவடையாகும் நெல்லையெல்லாம் வாங்கிச் சென்றுதான் கேரள மக்களும் பசி தீர்த்துக் கொள்கின்றனர்.

ஆகவே, தமிழகத்தில் உணவு உற்பத்தி பெருகினால் கேரளத்துக்கும் நன்மைதான். ஆனால், எப்போதோ தங்களுக்குத் தேவைப்படலாம் என்ற காரணத்தைச் சொல்லி உபரியாக உள்ள நீரைத் தர மறுக்கிறார் சமதர்மம் ஓதும் பிரஜா சோஷலிஸ்டு கட்சியின் தலைவர், பட்டம் தாணுப்பிள்ளை!”

– பெருந்தலைவர் காமராசர்

  • நன்றி : விகடன் பொக்கிஷம் 1961
You might also like