வாசிப்பின் ருசி:
கண்பார்வை இல்லாத எனக்குள்ள பார்வைத்தெளிவு, கண் பார்வையுடைய பலருக்கு அறவேயில்லை. பணம், பதவி, அதிகாரம், சாதி, மதம், கட்சி என்ற வகைகளில் தனக்குள் இறுகியவனுக்கு வாழ்க்கை பற்றி, வரலாறு பற்றி, இயற்கை பற்றி, கலை பற்றி, பிரபஞ்சம் பற்றி என்ன பார்வை இருக்க முடியும்?
இவர்கள் தான் உண்மையில் பார்வைக்குறைவு உடையவர்கள், அல்லது, பார்வையே இல்லாதவர்கள். மனிதத் தரத்தில் இவர்கள் தாழ்ந்தவர்கள். இவர்களிடம் அன்பு இல்லை. இவர்களுக்கு வாழ்வின் அழகு தெரியாது. அர்த்தம் தெரியாது.
மனிதன் என்ற முறையில் வாழ்பவன், பிரபஞ்சம் அளவுக்குத் தன்னை விரித்துக்காண வேண்டும். உயிர்களோடு நல்லுறவு தேவை. உலக வரலாற்றுக்குள் இவன் தன்னைக் கரைத்துக்கொள்ள வேண்டும். இத்தகைய பேறு பெற்றவன் தான் உண்மையில் பார்வையுடையவன்.
எனக்குள் இந்தப் பார்வை குறைவில்லாமல் இருக்கிறது. சில வசதிக்குறைவுகள் என்னை வருத்துகின்றன. எனினும் இவற்றுக்காக என்னை நான் இழந்துவிடவில்லை.
மக்களுக்கு நான் இன்னும் என்னால் இயன்றதையெல்லாம் செய்கிறேன். என் வசதிக்குறைவையும் மீறிச் செய்கிறேன். என்னைப் போதிய அளவுக்கு நண்பர்கள், மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதும் என் வருத்தம்.
53 வயது வரை கண்பார்வையோடு இருந்து, கிராமங்கள் நகரங்கள், மலைகள், கடல்கள், வானம், பூமி என பலவற்றைப் பார்த்து வண்ணங்கள், வடிவங்களில் மனத்தைப் பறிகொடுத்து மனைவி, மக்கள், உறவினர்கள், நண்பர்கள் என பலர் முகம் பார்த்து, நிறையப் படித்து, வரலாறு, வாழ்க்கை எனப் புரிந்துகொண்டு, தத்துவம் பயின்று வரலாற்றில் வாழ்கிற வாழ்க்கையை எனக்குள் வரித்துக்கொண்டு இப்படி எத்தனையோ வழிகளில், திசைகளில் உறவு கொண்டு நான் பெற்றது பலமான ஆளுமை.
பிறப்பு முதலேயே கண்பார்வை இல்லாத அல்லது 5 அல்லது 10 வயதில் கண்பார்வை இழந்த பத்தாயிரக்கணக்கான என் சகோதரர்கள், சகோதரிகள், குறைந்த அளவுக்கே கற்று, தொழில் பயின்று, குறைந்த கூலிக்கு வேலை பார்த்து பலரிடம் அவமானப்பட்டு வாழ நேர்ந்திருக்கிற வாழ்க்கை என்னைப் பெரிதும் வருத்துகிறது.
பிரபஞ்சத்தோடு, வரலாற்றோடு, இயற்கையோடு தன்னைக் கரைத்துக் கொள்கிற வாழ்க்கைப்பேறு இவர்களில் பெரும்பாலோருக்குக் கிட்ட வாய்ப்பில்லை என்பதும், நெடுந்தொலைவிற்கு விரிந்த வாழ்க்கை வாய்ப்பதில்லை என்பதும் என் வருத்தம்.
என் பார்வைக்குறைவு பற்றி யாரேனும் கேட்டால் எனக்கு எரிச்சல் வருகிறது. என் பார்வைக்குறைவை நான் ஒப்புக் கொள்வேன்.
எனக்கான தேவைகளைக் குறைந்த அளவுக்கேனும் உங்களால் சரிப்படுத்த இயலுமானால் உங்களிடம் நான் என்ன எதிர்பார்க்கிறேன்? நீங்கள் பார்ப்பதை எனக்குச் சொல்லுங்கள் உலகில் என்னவெல்லாம் நடைபெறுகின்றன என்பது பற்றிச் சொல்லுங்கள். இவற்றைத்தான் நான் எதிர்பார்க்கிறேன்.
இன்னும் சில ஆண்டுகளேனும் நான் நிறைவோடு வாழ இந்த உதவியைத்தான் நான் உங்களிடம் எதிர்பார்க்கிறேன். இதனால் உங்கள் வாழ்க்கையும் நிறைவு பெறும்.
- எழுத்தாளர் கோவை ஞானி
[மறுபார்வை என்ற தலைப்பிட்ட பார்வையற்ற 21 மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கையைப் பேசும் கட்டுரைகள் உள்ள தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.
வெளியீடு: WELFARE FOUNDATION OF THE BLIND. வெளியான வருடம்: 2006]
– நன்றி: திண்ணை இணைய இதழ்