இயக்குநர் ஸ்ரீதர் – வெவ்வேறுபட்ட வகைமை படங்களை தமிழுக்கு தந்தவர்!

தமிழ்த் திரையுலகில் மிகச்சிறந்த இயக்குநர்களைப் பட்டியலிட்டால், அதில் நிச்சயமாக ஸ்ரீதரின் பெயர் இடம்பெறும். ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘கமர்ஷியல்’ படங்களாக இருப்பதோடு, திரையுலகின் போக்கை மாற்றத்திற்கு உள்ளாக்கிய சிறப்பும் அவரது படைப்புகளுக்கு உண்டு.

திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களை வைத்துப் படம் இயக்கியபோதும் சரி; இரண்டாம் நிலை நாயக நாயகிகள் அல்லது புதுமுகங்களை வைத்து அவர் மேற்கொண்ட சோதனை முயற்சிகளும் சரி; ஒருபோதும் அவரது தனித்துவம் இன்றி வெளியாகவில்லை.

அதுவே கிட்டத்தட்ட நாற்பதாண்டுகளுக்கும் மேலாக அவரைத் திரையுலகில் இயங்கச் செய்தது. காலத்தால் அழியாத பல திரைப்படங்களை ஆக்கச் செய்தது.

எழுத்தாக்கத்தில் கவனம்!

ஏவிஎம் நிறுவனத்திற்குச் சென்று தனது ‘லட்சியவாதி’ திரைக்கதையை ஸ்ரீதர் சமர்ப்பித்தபோது, அவரது வயது பதினெட்டு. அப்போது, அவரது கதை நிராகரிக்கப்பட்டது. அதே கதையை டி.கே.சண்முகத்திடம் கொண்டு சென்றார் ஸ்ரீதர். ‘ரத்த பாசம்’ என்ற பெயரில் அது நாடகமாகத் தயாரானது; பல முறை அரங்கேற்றப்பட்டது.

பின்னர் அதே பெயரில் திரைப்படமாகவும் வெளியாகி வெற்றி பெற்றது. அந்தப் படத்தை ‘பாய் பாய்’ என்ற பெயரில் இந்தியில் ரீமேக் செய்தது ஏவிஎம். இதுவே, ஸ்ரீதர் எப்படிப்பட்ட திறமையுடனும் பிடிவாதத்துடனும் திகழ்ந்தார் என்பதற்குச் சான்றாகவும் அமைகிறது.

ஜூபிடர் நிறுவனத்துடன் இணைந்து அப்படத்தைத் தயாரிக்க ‘அவ்வை’ டி.கே.சண்முகம் முன்வந்தபோதும் கூட, திரைக்கதை வசனத்தை ஸ்ரீதரே எழுதுவார் என்பதில் உறுதியாக இருந்தார். அவர் அழுத்தமாகச் சொல்லும் வகையில், திறன்மிக்க வகையில் செயலாற்றினார் ஸ்ரீதர்.

‘எதிர்பாராதது’, ‘மகேஸ்வரி’, ‘லட்சாதிபதி’, ‘மாமன் மகள்’ படங்களுக்கு கதை, வசனம் எழுதியவர் ‘அமரதீபம்’ படத்தில் தயாரிப்பாளராகவும் மாறினார்.

அதன்பின்னரும் கூட ‘மாதர் குல மாணிக்கம்’, ‘எங்க வீட்டு மகாலட்சுமி’, ‘யார் பையன்’, ‘உத்தம புத்திரன்’, ‘மஞ்சள் மகிமை’ படங்களில் தனது எழுத்தாக்கத்தின் வன்மையை நிரூபித்தவாறு இருந்தார்.

ஆர்.எஸ்.மணி, டி.ஆர்.ரகுநாத், டி.பிரகாஷ் ராவ், அடூர்த்தி சுப்பாராவ் போன்ற இயக்குனர்களோடு இணைந்து பணியாற்றிய அனுபவம், ஸ்ரீதரை இயக்குநராகவும் உருமாற்றியது. 1959இல் ‘கல்யாண பரிசு’ தந்தார். அந்த திரைப்படம், அதுவரை திரையுலகில் நிலவி வந்த பல போக்குகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

ஸ்ரீதரின் தனித்துவப் படைப்புகள்!

ஒரு ஆணை இரண்டு பெண்கள் விரும்புவதுதான் ‘கல்யாண பரிசு’வின் மையக் கதை. அந்த இரண்டு பெண்களும் சகோதரிகள் என்று கதை சொன்னார் ஸ்ரீதர்.

அவர்களில் ஒருவர் இறந்துவிட, இன்னொரு நாயகியைத் திருமணம் செய்யாமல் நாயகன் புறக்கணிப்பதும், அவருக்குச் சிறந்த வாழ்வைப் பெற்றுத் தருவதுமே அக்கதையின் முடிவுகளாக இருந்தன.

வசனங்களில் மட்டுமே மாயாஜாலங்களை நிகழ்த்தி இப்படத்தை மக்களுக்கு நெருக்கமானதாக மாற்றியிருக்கலாம்.

அந்த வித்தையை அறிந்தவர் தான் ஸ்ரீதர். ஆனால், அதற்குப் பதிலாக ஒளிப்பதிவாளர் ஏ.வின்சென்ட் உடன் இணைந்து ‘காட்சிப்பூர்வமானதாகவும்’ ஆக்கினார்.

படிக்கட்டுகளில் ஏறி இறங்கும்போது வேறுபட்ட உணர்வுகளை வெளிப்படுத்துவது, சராசரி மனிதர்களின் வாழ்பனுபவங்களைச் சொல்லும் நிகழ்வுகளைக் காட்சிகளாக ஆக்குவது, அதற்கு முன் இராத கேமிரா கோணங்களையும் நகர்வுகளையும் காட்சிப்படுத்தியது என்று பல சிறப்புகள் அப்படத்திற்கு உண்டு.

அனைத்துக்கும் மேலே ஜெமினி கணேசன், சரோஜா தேவி, விஜயகுமாரியை மீறி கே.ஏ.தங்கவேலு – எம்.சரோஜாவின் நகைச்சுவை படத்திற்கு முதுகெலும்பாக அமைந்தது. அதுவரை வந்த காதல் படங்களில் இருந்து ‘கல்யாண பரிசு’வை வேறுபடுத்தியது.

அந்தப் படத்தின் வெற்றி தமிழ் திரையுலகின் போக்கையே திசை திருப்புவதாக அமைந்தது. ஒரு ‘ட்ரெண்ட்செட்டர்’ ஆக மாறியது.

பிறகு ‘மீண்ட சொர்க்கம்’, ‘விடிவெள்ளி’, ‘புனர்ஜென்மம்’ படங்களை இயக்கினார் ஸ்ரீதர். 1961இல் ‘தேன் நிலவு’ தந்தார். பெரிய வெற்றியாக அமையாவிட்டாலும் கூட, இன்றளவில் நகைச்சுவைப் படங்களுக்கான முன்மாதிரியாகத் திகழ்கிறது இப்படம்.

‘சின்னச் சின்ன கண்ணிலே’, ‘பாட்டு பாடவா’, ‘ஓஹோ எந்தன் பேபி’ என்று தேனினும் இனிய பாடல்களைத் தந்தார் ஏ.எம்.ராஜா. ஜெமினி கணேசன், வைஜெயந்தி மாலா, கே.ஏ.தங்கவேலு, எம்.சரோஜா என்று காதலும் நகைச்சுவையும் ததும்பச் செய்யும் நடிகர்களின் துணையோடு ’ரொமாண்டிக் காமெடி’யாக இப்படத்தினை உருவாக்கியிருந்தார் ஸ்ரீதர்.

மிகக்குறைந்த நாட்களில், குறைவான செட்களில் படம்பிடிக்கப்பட்ட ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ இந்தியத் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தது. காதல் எனும் ஒரேயொரு உணர்வினைக் கொண்டு ஒரு முழுப்படத்தையும் நிரப்பிவிட முடியும் என்று அதில் நிரூபித்திருந்தார் ஸ்ரீதர்.

கல்யாண் குமார், முத்துராமன், தேவிகா என்று அக்காலகட்டத்தில் முன்னணியில் இல்லாத நடிகர், நடிகையரைக் கொண்டு அதனைச் சாதித்தார்.

அந்தப் படத்திலும் கதை என்பது கடுகளவுதான். அதனைத் திரைக்கதை எழுதும் திறமையால் பூதாகரமாகக் காட்டியிருந்தார் ஸ்ரீதர்.

கடுமையான சோகத்திற்கு ஆளாகும் ஒரு நபரின் வாழ்வை ‘சுமைதாங்கி’யில் சொன்னார். அந்த வகைமை படங்களை ரசிப்பவர்களுக்கு அது இன்றுவரை ஒரு ‘மைல்கல்’ ஆகவே உள்ளது.

‘அடுத்த ஜென்மத்துலயும் உன்னை பழிவாங்காம விடமாட்டேன்’ என்று வில்லத்தனத்தின் உச்சத்தனத்தைக் காட்டும் பாத்திரங்கள் இன்று சர்வ சாதாரணம். அதற்கான தொடக்கத்தைத் திரையுலகில் அமைத்தவர்களில் முக்கியமானவர் ஸ்ரீதர்.

அதற்கு வித்திட்ட படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’. அந்தப் படத்தில் நூறு வயதைத் தாண்டியவராக, தடுமாறும் உடலமைப்புடன் தோன்றி நம்மை மிரட்சிக்கு ஆளாக்குவார் எம்.என்.நம்பியார்.

1964இல் வெளியான ‘காதலிக்க நேரமில்லை’ படத்தை 2கே கிட்ஸ்களும் கூட ரசிக்கத்தான் வேண்டும். அந்த அளவுக்கு ‘எவர்க்ரீன் இளமை’யை நிறைத்திருக்கும் அப்படம்.

நகைச்சுவையே பிரதானம் என்பதற்கேற்ப நாகேஷ், டி.எஸ்.பாலையா, ரவிச்சந்திரன், முத்துராமன், சச்சு என்று பலரையும் கொண்டு நம்மைச் சிரிக்க வைத்திருந்தார் ஸ்ரீதர்.

காஞ்சனாவும் ராஜஸ்ரீயும் சென்னையில் இருந்து சொந்த ஊர் திரும்பித் தங்கள் பங்களாவுக்குள் நுழையும் காட்சியை ஒரே ஷாட்டில் படமாக்கியிருப்பார் ஸ்ரீதர். இப்போதும் கூட ஆச்சர்யத்தை மூட்டுகிற ‘மேக்கிங்’ அது.

பின்னாட்களில் வெண்ணிற ஆடை, கொடிமலர், நெஞ்சிருக்கும் வரை, ஊட்டி வரை உறவு, சிவந்த மண், அவளுக்கென்று ஒரு மனம், அலைகள், உரிமைக்குரல் என்று ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத பல திரைப்படங்களைத் தந்தவர் ஸ்ரீதர். அவை தரும் காட்சியனுபவமும் வெவ்வேறுபட்டதாக இருக்கும்.

சிவாஜியை மட்டுமே இயக்குவார் என்று சொல்லப்பட்ட நாட்களில், எம்ஜிஆரை கொண்டு ஸ்ரீதர் உருவாக்கவிருந்த படங்கள் அடுத்தடுத்து நின்றுபோயின.

அதனால் ஏற்பட்ட அதிருப்தியைப் போக்கியது ‘உரிமைக்குரல்’. வழக்கமான கமர்ஷியல் படம் என்றபோதும், அதில் இருந்த ஜனரஞ்சகத்தன்மை இயக்குனரின் சிறப்பை எடுத்துக்காட்டியது.

ஜெமினி, சிவாஜி, எம்ஜிஆர், முத்துராமன் என்று பயணித்த ஸ்ரீதர், எழுபதுகளின் பிற்பாதியில் அக்காலகட்டத்து இளம் நட்சத்திரங்களோடு கைகோர்க்கவும் தயங்கவில்லை. அதனாலேயே ‘மீனவ நண்பன்’ எடுத்த கையோடு அவரால் ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ படத்தைத் தர முடிந்தது.

‘தண்ணி கருத்திருச்சி’ பாடலைத் தயக்கம் ஏதுமின்றிக் காட்சிப்படுத்த முடிந்தது. அந்த படத்தில் ஜெயசித்ராவின் பாத்திரத்தையும் நியாயப்படுத்துகிற வகையில் அவரால் கதை சொல்ல முடிந்தது.

‘அழகே உன்னை ஆராதிக்கிறேன்’, ‘சௌந்தர்யமே வருக வருக’, ‘மோகன புன்னகை’ என்று இயங்கிய ஸ்ரீதர், பிறகு கார்த்திக், ஜெயா, நிழல்கள் ரவியைக் கொண்டு ‘நினைவெல்லாம் நித்யா’ தந்தார். ‘நீதானே என் பொன்வசந்தம்’ என்று இளைய தலைமுறையினர் பாடிக்கொண்டே தியேட்டருக்கு வரக் காரணம் ஆனார்.

வெற்றிகளையும் தோல்விகளையும் மாறி மாறிக் கண்டாலும், தான் நினைத்த படைப்புகளைத் தருவதில் ஸ்ரீதர் ஒருபோதும் சுணக்கம் காட்டியதில்லை.

எண்பதுகளிலும் அது தொடர்ந்தது. பல தோல்விகள் அடுத்தடுத்து வந்தபோதும், இடையிடையே ‘தென்றலே என்னைத் தொடு’ மாதிரியான வெற்றிகளைத் தந்து ரசிகர்களைத் திருப்திப்படுத்தினார் ஸ்ரீதர்.

அவரது இயக்கத்தில், இறுதியாக ‘தந்துவிட்டேன் என்னை’ திரைப்படம் வெளியானது.

தமிழில் வெவ்வேறுபட்ட வகைமையில் படங்களைத் தந்த இயக்குனர்களில் முதன்மையானவர் ஸ்ரீதர். பின்னாட்களில் மணிவண்ணன் போன்ற மிகச்சில இயக்குனர்களே அந்த வரிசையில் சேர்ந்தனர்.

அப்படியொரு சிறப்பைப் பெற, பரந்துபட்ட வாசிப்பு அனுபவத்தோடு பல மொழிகளில் வெளியாகும் திரைப்படங்களையும் கண்டிருக்க வேண்டும். அதனைப் பெற்றவர் ஸ்ரீதர்.

அனைத்துக்கும் மேலே ரசிகர்களை ஈர்க்கும் வகையிலான பாடல்களையும், வண்ணமயமான காட்சியாக்கத்தையும் கொண்டிருந்தன அவரது பல படைப்புகள்.

அதனாலேயே வெவ்வேறுபட்ட தொழில்நுட்பக் கலைஞர்களோடு பணியாற்றியபோதும் ‘ஸ்ரீதர் படங்கள்’ எனும் முத்திரையைத் தாங்கி நின்றன அவரது திரைப்படங்கள்.

ஸ்ரீதரின் படங்களை மீண்டும் மீண்டும் பார்த்து ரசிப்பதும், அவற்றில் அவர் மறைத்து வைத்துள்ள நுட்பங்களை மீட்டெடுத்துச் சிலாகிப்பதுமே அவருக்கான சிறந்த ‘போற்றுதலாக’ அமையும்!

– உதய் பாடகலிங்கம்

You might also like