அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பரபரப்பான செய்திகள் அடிபடத் துவங்கிவிட்டன. தேர்தலில் போட்டியிடும் டிரம்ப்புக்கும் ஜோ பைடனுக்கும் இடையில் வழக்கமான காரசாரமான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
இதில், அமெரிக்க அதிபர் தேர்தலுக்குப் போட்டியிடும் பைடனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டு அவர் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார். அவருடைய உடல்நலம் குறித்த அறிக்கையை அவ்வப்போது வெள்ளை மாளிகை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது.
அது ஒருபுறம் இருக்க இதே தேர்தலில் போட்டியிடும் இன்னொரு வேட்பாளரான டொனால்ட் டிரம்ப்பை படுகொலை செய்வதற்கான ஒரு முயற்சி கடந்த ஜூலை 13-ம் தேதியன்று நடந்திருக்கிறது. கூட்டத்திற்கு இடையில் அவரை துப்பாக்கியால் சுட்டிருப்பவர் 20 வயது இளைஞரான தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ்.
படிப்பிலும் மற்றவருடன் பழகுவதிலும் நல்ல விதமாகவே உணரப்பட்டிருக்கிற க்ரூக்ஸ், ஏன் இந்த கொலை முயற்சியில் ஈடுபட்டார்?
டிரம்ப்புக்கும் அவருக்குமான பகைமை உணர்வு இருந்ததா? அப்படி இருக்கும் பட்சத்தில் துப்பாக்கியால் சுடும் அளவுக்குப் போனதற்கு என்ன காரணம்? என்கின்ற பல கேள்விகளை அமெரிக்கக் காட்சி ஊடகங்கள் தொடர்ந்து எழுப்பிக் கொண்டிருக்கின்றன.
அது தொடர்பான விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது. இருந்தாலும் இதற்கெல்லாம் பதில் சொல்வதற்கு க்ரூக்ஸ் என்ற அந்த 20 வயதே ஆன இளைஞன் தற்போது உயிரோடில்லை.
சம்பவம் நடந்ததுமே க்ரூக்ஸை பாதுகாப்புப் படையினர் சுற்றுக் கொண்டுவிட்டனர். காதில் ஏற்பட்ட சிறு காயத்துடன் தப்பித்திருக்கிறார் டிரம்ப். காதில் சிறு கட்டுப்போட்ட நிலையில் அவர், அமெரிக்க தேசியக்கொடி பின்னால் பறக்க அவர் காட்சி ஊடகங்களுக்கு முன்னால் தோன்றியபோது மக்கள் திரளுக்கு இடையில் பெருத்த ஆரவாரம்.
கடந்த பிப்ரவரி மாதத்தில் அமெரிக்காவிலுள்ள ஒரு பிரபல பல்கலைக்கழகம் நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் பின்தங்கியே இருந்தார் டிரம்ப். ஜோ பைடன் அவரை விட முன்னிலையில் இருந்தார்.
இதெல்லாம் சுடப்பட்ட நிகழ்வு நடப்பதற்கு முன் இருந்த சூழ்நிலை. டிரம்ப் மீது க்ரூக்ஸின் கொலை முயற்சி எப்போது நடந்ததோ அப்போதிருந்தே தேர்தல் கணிப்புகளில் முன்னிலைக்கு வந்துவிட்டார். ஊடகங்கள் அவருக்கே முதலிடம் கொடுக்கின்றன.
அவரும், “அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக்குவோம்“ என்கின்ற முழக்கத்தை முன்னிறுத்தி இருக்கிறார். அவருக்கும் அந்த முழக்கத்திற்கும் ஆதரவாகவும் எதிராகவும் பல நாடுகள் அணி பிரிந்து நிற்கின்றன.
குறிப்பாக ரஷ்யாவை டிரம்ப் ஆதரிக்கிறார். சீனாவை எதிர்க்கிறார். இப்படி பலப்பல உலக அளவிலான அரசியல் பின்விளைவுகளை ஏற்படுத்தி இருக்கிறது க்ரூக்ஸின் கொலை முயற்சி சம்பவம்.
திட்டமிட்ட அல்லது திட்டம் குறித்து வெளியே தெரியவராத ஒரு கொலை முயற்சி, எவ்வளவு அரசியல் அதிர்வுகளுக்கு காரணமாக அமைந்திருக்கிறது அல்லது அமையப்போகிறது என்பதை அமெரிக்கத் தேர்தல் முடிவுகள் தான் உணர்த்த வேண்டும்.