திரைத் தெறிப்புகள் – 8 :
1952-ம் ஆண்டு வெளிவந்த ‘பணம்’ என்கிற படத்தில், கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்கள் பாடிய “எங்கே தேடுவேன், பணத்தை எங்கே தேடுவேன்” என்று துவங்கும் பாடலை எழுதியவர் உடுமலை நாராயணகவி.
கலைவாணருக்கு பல பாடல்களை எழுதி இருக்கிற உடுமலை நாராயணகவியின் பாடல்களில் சமூக பொறுப்புணர்வு மிகுந்து இருக்கும்.
இந்தப் பாடலில்,
“கருப்பு மார்கெட்டில் கலங்குகின்றாயோ
கஞ்சன் கையிலே சிக்கிக் கொண்டாயோ
சந்நியாசி கோலத்தோடு உலவுகின்றாயோ
இரும்பு பெட்டிகளில் இருக்கின்றாயோ
இரக்கமுள்ளவரிடம் இருக்காத பணமே
உன்னை எங்கே தேடுவேன்?”
– என்று இன்றைக்கும் மிகக் கச்சிதமாகப் பொருந்தும் வரிகளைக் கவிஞர் எழுதி அதைக் கலைவாணர் அவருக்கே உரித்தான நையாண்டியான குரல் வளத்தோடு பாடி இருப்பதை இப்பொழுது கேட்கும்போதும் வியப்பாக இருக்கும். நிகழ்காலப் பொருத்தத்துடன் இருக்கும்.
இதில் வரும் ஒரு சிக்கென்ற வரி “சுவற்றுக்குள் தங்கமாய் பதுங்கி விட்டாயோ” என்கின்ற வரியின் யதார்த்தம் இப்பொழுதும் பல வீடுகளில் சோதனையிடும் அமலாக்கப் பிரிவினருக்கு நன்கு விளங்கும்.
கருத்துள்ள பாடல் எப்படியெல்லாம் காலத்தை மீறி நின்று பொருள் தருகிறது!