தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகர்களுக்கு, நாயகர்களுக்கு எந்தளவுக்கு ரசிகர்கள் வரவேற்பைத் தருவார்களோ, அதே அளவுக்கு அக்காட்சிகளை வடிவமைத்த எழுத்தாளர்களையும் கொண்டாடுவார்கள். அந்த வகையில், தொண்ணூறுகளில் பல நகைச்சுவைப் படங்களில் தனது பங்களிப்பைக் கொட்டியவர் கிரேசி மோகன்.
நாடகங்களுக்கு எழுத்தாக்கம் செய்து, அவற்றில் நடித்து, உலகம் முழுக்க அவற்றை அரங்கேற்றச் செய்த காலத்திலும் கூட, சினிமாவுக்கென்று ஆண்டில் சில நாட்களை, ஒரு நாளில் சில மணி நேரங்களை ஒதுக்கினார்.
அதன் பலனாக, இன்றும் நாம் ரசிக்கத்தக்க பல நகைச்சுவைக் காட்சிகளைத் தந்து சென்றிருக்கிறார். அவர் வசனம் எழுதிய படங்களில் ஒன்று, சந்தான பாரதி இயக்கிய ‘வியட்நாம் காலனி’.
சி.வி.ராஜேந்திரன் தயாரித்த இந்தப் படத்தில் பிரபு, கவுண்டமணி, வினிதா, மனோரமா, நாசர், எஸ்.என்.லட்சுமி, ஜெயந்தி, டெல்லி கணேஷ், தியாகு உட்படப் பலர் நடித்திருந்தனர். சித்திக் – லால் மலையாளத்தில் எழுதி இயக்கிய ‘வியட்நாம் காலனி’ படத்தின் ரீமேக் இது.
கவுண்டமணி ‘அட்ராசிட்டி’!
‘வியட்நாம் காலனி’ படத்தின் திரைக்கதை நல்லதொரு ‘மசாலா’ படத்திற்கு ஏற்ற வகையில் அமைக்கப்பட்டிருக்கும்.
ரொம்பவே சாந்தமான, பிறருக்குத் துன்பம் நினைக்காத ஒரு அப்பாவி இளைஞன், அதற்கு எதிரான வேலையொன்றைச் செய்ய நேர்கிறது.
கட்டடம் கட்டும் நிறுவனமொன்றில் சேரும் அந்த நபர், ஒரு காலனியில் குடியிருக்கும் மக்களை அந்நிறுவனத்தின் ‘புராஜக்ட்’டுக்காக காலி செய்ய முயல்கிறார்.
அங்கு வசிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் சாதாரண மக்கள். ஆனால், அவர்களில் ஒரு சிலர் செய்த தவறாலும், துரோகத்தாலும் அந்த காலனி உரிமையாளர் குடும்பம் பாதிக்கப்பட்டதை அறிகிறார் அந்த நபர். அதனைத் தான் வேலை செய்யும் நிறுவனம் சாதகமாகப் பயன்படுத்தியதையும் அறிகிறார்.
முடிவில், தான் செய்ய வந்த வேலைக்குப் பதிலாக, அந்த காலனியில் வசிக்கும் மக்களின் நலனுக்காகச் சில விஷயங்களை அந்த இளைஞன் செய்து முடிப்பதாகப் படம் முடிவடையும்.
‘ஹீரோயிசம்’ காட்டப் பல வாய்ப்புகளைக் கொண்டிருந்தும், இந்தப் படத்தில் அதிகமாகச் சண்டைக் காட்சிகள் கிடையாது. அதேநேரத்தில், வயிறு வலிக்கச் சிரிக்கும் அளவுக்கு நகைச்சுவை உண்டு.
மனோரமா, டெல்லி கணேஷ், காகா ராதாகிருஷ்ணன், தியாகு போன்றவர்கள் இருந்தாலும், அவர்களை மீறி ‘சிக்சர்’ அடித்திருப்பார் கவுண்டமணி.
பிரபு வரும் காட்சிகளில் அவர் செய்யும் ‘அட்ராசிட்டி’யை ’இவ்வளவுதான்’ என்று வரையறுக்க முடியாது. அதுவே, இப்போதும் இப்படத்தைக் காணக் காரணமாக உள்ளது.
‘அட கர்த்தரே.. கர்த்தரே..’ என்று மனோரமாவிடம் கத்தும்போதும், ‘வாசனை மூக்கை துளைக்குது.. மூக்குல எக்ஸ்ட்ரா ரெண்டு ஓட்டை போடலாம் போலிருக்கே’ என்று சொல்லும்போதும், விழுந்து விழுந்து சிரிக்க வைத்திருப்பார் கவுண்டமணி.
இந்த படத்தில் அவர் பேசும் வசனங்கள் ‘பஞ்ச்’ ஆக இருக்காது. அதேநேரத்தில், அந்த வசனங்கள் எல்லாம் ‘இமிடேட்’ செய்யக் கடினமானதாக, நினைத்து நினைத்துச் சிரிக்க வைப்பதாக இருக்கும்.
டெல்லி கணேஷ், காகா ராதாகிருஷ்ணன், தியாகு இடம்பெறும் காட்சி, ஒரு மேடை நாடகம் நடக்குமிடத்திற்குள் நாமே நுழைந்துவிட்ட அனுபவத்தைத் தரும்.
‘சென்டிமெண்டு’ம் உண்டு!
‘வியட்நாம் காலனி’ படத்தின் தொடக்கத்திலேயே பிரபுவின் தாயாக ஜெயந்தி நடித்த காட்சிகள் வரும். அவையே சோகத்தில் தோய்த்தெடுத்ததாகத்தான் இருக்கும். பின்பாதியில் எஸ்.என்.லட்சுமி, நாசர் சம்பந்தப்பட்ட காட்சிகள் ‘சென்டிமெண்ட்’டில் உச்சம் தொட்டிருக்கும்.
இவர்கள் போதாதென்று காலனியில் வசிக்கும் குடியிருப்புவாசிகளோடு பிரபு பேசும் காட்சி ’உணர்வுப்பூர்வமாக’ அமைந்திருக்கும்.
இதில் வில்லன்களாக விஜயரங்கராஜ், அசோக் ராவ், உதய் பிரகாஷ் ஆகியோர் நடித்தனர். அவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் ‘அரதப்பழசாக’ இருந்தாலும், தொண்ணூறுகளில் வந்த பிற படங்களை ஒப்பிடுகையில் நேர்த்தியாகத்தான் அமைந்திருக்கும்.
எம்.எஸ்.பிரபுவின் ஒளிப்பதிவு, சந்திரனின் படத்தொகுப்பு, சூரியகுமாரின் கலை வடிவமைப்பு ஆகியன உட்பட இப்படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பும் சிறப்பானதாகவே அமைந்திருக்கும்.
அவற்றோடு இளையராஜாவின் இசையும் சேர்ந்து, இப்படத்தின் காட்சியாக்கத்தினை மேலும் ஒருபடி உயர்த்தியிருக்கும்.
‘மார்கழி மாசம்’ பாடல் காதலைத் தூண்டும் ரகமாக இருக்க, ‘சாமிக்கு நான் பூப்பறிக்க’ பாடல் துள்ளலை விதைக்கும்.
‘எனக்கு உள்ளதெல்லாம்’, ‘என்னென்னமோ சொல்ல’ பாடல்கள் வழக்கமாக நாம் கேட்கும் பாடல்களில் இருந்து வேறுபட்டு நிற்கும். அதில் உச்சமாக, ’கை வீணையை ஏந்தும்’ பாடல் நம்மை வசீகரித்து உள்ளிழுக்கும்.
இதர பாடல்களை மனோவும் சொர்ணலதாவும் பாடியிருக்க, ‘கை வீணையை’ மட்டும் பாம்பே ஜெயஸ்ரீ பாடியிருப்பார். அவர் இப்படியொரு குரலைத் திரையிசையில் வெளிப்படுத்தியிருக்கிறார் என்பதே ஆச்சர்யமான விஷயம் தான்.
‘கிரேஸி’ அனுபவம்!
வியட்நாம் காலனி ஒரு ‘ரீமேக்’ படம் என்றபோதும், தமிழில் பிரபு, கவுண்டமணி மற்றும் கிரேஸி மோகனின் கூட்டணி நமக்கு வித்தியாசமான அனுபவத்தைத் தந்திருக்கும்.
பொதுவாக கமல்ஹாசன் நடித்த ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘மைக்கேல் மதன காமராஜன்’, ‘சதிலீலாவதி’, ‘அவ்வை சண்முகி’, ‘காதலா காதலா’, ‘தெனாலி’, ‘பஞ்ச தந்திரம்’, ‘பம்மல் கே சம்பந்தம்’, ‘வசூல்ராஜா எம்பிபிஎஸ்’ போன்ற படங்களில் கிரேஸி மோகனின் வசனங்கள் கொண்டாடத்தக்கதாக இருப்பது நாமறிந்தது.
ஆனால் பிரபுவுடன் அவர் கைகோர்த்த ‘சின்ன வாத்தியார்’, ‘சின்ன மாப்ளே’ படங்களிலும் வெளுத்துக்கட்டியது பலர் அறியாதது.
பிரபுவின் உடல்மொழி, முகபாவனையோடு அவரது அப்பாவித்தனம் நிறைந்த சிரிப்பு, ஆத்திரம், குதர்க்கம் ஆகியவற்றை வெளிக்காட்டுவதற்கான வகையில் காட்சிகளை வடித்திருப்பார் கிரேஸி மோகன்.
போலவே ‘தேடினேன் வந்தது’, ‘சிஷ்யா’ போன்ற படங்களில் கவுண்டமணி பாணியிலேயே பல வசனங்களை எழுதியிருப்பார்.
அவை அனைத்தும் இன்றும் நாம் கொண்டாடத்தக்க வகையில் ‘கிரேஸி’ அனுபவங்களை தருவதாக இருக்கும்.
சந்தான பாரதி இயக்கிய இப்படத்தில் ரொமான்ஸ், காமெடி, செண்டிமெண்ட், ஆக்ஷன் என்று அனைத்துக்கும் இடம் தரப்பட்டிருக்கும்.
முப்பதாண்டுகளுக்குப் பிறகும் ரசிக்கத்தக்க அனுபவத்தைத் தருவதே, இப்படத்தின் ‘எவர்க்ரீன்’ அந்தஸ்துக்குச் சான்று. சுருக்கமாகச் சொன்னால், ‘வியட்நாம் காலனி’ என்பது ’கிரேசி மோகன் + பிரபு + கவுண்டமணி காம்போவின் வெற்றி’ எனலாம்!
– உதய் பாடகலிங்கம்