கடவுள் ஏன் கல்லானார்…?

திரைத் தெறிப்புகள்-7:  

****

-1970-ம் ஆண்டு வெளிவந்த ‘என் அண்ணன்‘ திரைப்படத்தில்,

“கடவுள் ஏன் கல்லானார்
மனம் கல்லாய்ப் போன மனிதர்களாலே”.

என்று துவங்கும் பாடலில் கீழ்க்கண்ட வரிகள் வரும். “இங்கு எல்லோருக்கும் நல்லவன் தன்னை இழந்தான்” என்கிற வரிகளை எழுதியவர் கவியரசு கண்ணதாசன்.

என்னதான் நல்லவராக நடந்துகொண்டாலும் அல்லது நடந்துக்கொள்ள தொடர்ந்து முயற்சித்தாலும் ஒருவரால் தன்னைச் சுற்றியிருக்கிற சொந்தங்கள், நட்பு வட்டாரங்கள், சுற்றியுள்ள சமூகத்தினர் அனைவரையுமே ஒருசேரத் திருப்திப்படுத்திவிட முடியாது.

என்னதான் நாம் நல்லுணர்வோடு பழகிக் கொண்டு இருப்பதாக நாம் உண்ர்ந்தாலும்கூட அதை விமர்சனம் செய்பவர்களும் இருந்து கொண்டுதான் இருப்பார்கள். இது ஏசு, புத்தர், காந்தி முதல் பலருக்கும் நடைமுறை வாழ்வில் பொருந்தும்.

எதிரிகளே இல்லாத நிலை யாருக்கும் சாமானியமாக வாய்த்துவிடாது. தன்னைச் சுற்றியிருக்கும் சமூகம் தன்னைச் சரிவர புரிந்துகொள்ளாதால் தன்னுடைய அடிப்படை இயல்பையே இழந்தவர்களும் இங்கே இருக்கிறார்கள். தன் உயிரையே இழந்தவர்களும் இருக்கிறார்கள்.

இதைத்தான் கண்ணதாசன் “இங்கு எல்லாருக்கும் நல்லவன் தன்னை இழந்தான்” என்று மிகமிக எளிமையாக நம்மைச் சுற்றி இருக்கும் யதார்த்தைப் புரிய வைத்து இருப்பார்.

அதே பாடலில்  “சதிச்செயல் செய்தவன் புத்திசாலி-
                               அதைச் சகித்துக்கொண்டிருந்தவன் குற்றவாளி
                               உண்மையைச் சொல்பவன் சதிகாரன்
                               இது உலகில் ஆண்டவன் அதிகாரம்”.

என்றும் தொடரும் வரிகளும் தற்காலத்திற்கும் மட்டுமல்ல, சர்வாதிகாரம் மேலோங்கும் எந்த ஆட்சிக் காலத்திற்கும் பொருந்தும்.

You might also like