சமூக விரோதிகளை ஒடுக்குவதில் அலட்சியம் கூடாது!

தலையங்கத்தின் ஒரு பகுதி:

தலைநகர் சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரும் வழக்கறிஞருமான ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது. இந்தக் கொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் சட்டம் குறித்த பெரும் விவாதங்கள் எழுந்துள்ளன.

கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக 11 பேரை அடுத்த சில மணி நேரத்தில் கைது செய்துவிட்டதாகக் காவல் துறை அறிவித்துள்ளது. சென்னை மாநகரக் காவல் ஆணையராக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதுபோன்ற நடவடிக்கைகள் ஒருபுறம் இருந்தாலும், இந்தச் சம்பவம் காவல் துறை மற்றும் அரசின் மீது எதிர்மறையான விமர்சனங்களுக்கு வழிவகுத்திருப்பதை மறுக்க முடியாது.

ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவரைக் கூலிப்படையினர் பல நாள்களாகக் கண்காணித்துக் கொலை செய்திருப்பது, காவல்துறை செயல்பாட்டின் போதாமையை உணர்த்துகிறது.

எனவே, காவல்துறையின் அலட்சியம் இந்தக் கொலைக்குக் காரணம் என்று எதிர்க்கட்சிகள் விமர்சிப்பதைக் குறைசொல்ல முடியாது.

காவல்துறையைக் கட்டுப்படுத்தும் உள்துறை அமைச்சகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தன் பொறுப்பில் வைத்திருக்கும் நிலையில், அரசின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களும் இந்த விமர்சனங்களுக்கு முகம்கொடுத்து, இனி இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

கடந்த இரண்டு மாதங்களில் முக்கியப் பிரமுகர்களின் மரணங்கள் நிகழ்வது தொடர்கதையாகி உள்ளது. திருநெல்வேலியில் இரண்டு மாதங்களுக்கு முன்பு காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெயக்குமார் தனசிங் சடலமாக மீட்கப்பட்டார்.

அதே ஊரில் பசுபதி பாண்டியன் ஆதரவாளர் தீபக் ராஜா வெட்டிக் கொல்லப்பட்டார். சேலத்தில் அதிமுக பிரமுகர் சண்முகம் கொலை செய்யப்பட்டார். இதுபோன்ற முக்கியப் பிரமுகர்களின் படுகொலைகள் மக்கள் மத்தியில் அரசு மீதான எதிர்மறைத் தாக்கத்தையே உருவாக்கும்.

ஆம்ஸ்ட்ராங் கொலையை அடுத்து கூலிப் படையினர், ரௌடிகளை ஒடுக்குவது குறித்த விவாதங்களும் எழுந்துள்ளன.

எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுப்பதில் காவல் துறையும் அரசும் மிகுந்த எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும்.

குறிப்பாக, சமூக விரோதிகளுக்குக் கிடைக்கும் அரசியல், அதிகார மட்டத்தின் உதவிகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அரிவாள் கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கூலிப் படையினர், சமூக விரோதிகள் மீது காவல்துறை பாரபட்சமில்லாத நடவடிக்கைகள் எடுப்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

  • நன்றி: இந்து தமிழ் திசை 

#சமூக_விரோதிகள் #அரிவாள்_கலாச்சாரம் #கூலிப்_படை #காவல்_துறை #ஆம்ஸ்ட்ராங்_கொலை #Amstrong_Murder #முதல்வர் #மு_க_ஸ்டாலின் #Police_Department #Armstrong_Murder #Armstrong #CM #M_K_Stalin #Antisocial

You might also like