கதையின் பெயர்கள் வேண்டுமானால் கற்பனைகளாக இருக்கலாம்!

நூல் அறிமுகம்:

‘வெங்கம்பய’ நூலில் இடம்பெற்றுள்ள சில தலைப்புகள் நமக்குள் எண்ணற்ற சிந்தனைகளைத் தூண்டிவிடும் ஆற்றல் கொண்டவை. அந்த வகையில், இந்தத் தொகுப்பில் உள்ள ஒவ்வொரு தலைப்பும், ஒரு தனி நாவல் வகையைச் சேர்ந்தது.

தன் எழுத்தின் மூலம் தனக்குள் பொதிந்து கிடக்கும் கேள்விகளை, கோபங்களை, மனிதர்களை, நிகழ்வுகளை எதிர்த்து நின்று சவால் விடும் வகையில் இந்தச் சிறுகதைத் தொகுப்பை இயற்றியுள்ளார், எழுத்தாளர் மாறன்.

தொடக்க கால எழுத்தாளர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் இவர், சிறுகதை மற்றும் ஒரு குறுநாவலையும் எழுதியுள்ளார்.

#உச்சம் – மனப்பிறழ்வு நிலையின் ஒரு வகையான OCD (obsessive compulsive disorder) என்ற சொல்லின் ஆழத்தில் இருந்து உருவாக்கப்பட்ட கதை, எதிர்பாராத தளங்களில் பயணித்து, மனிதர்களின் உடல் ரீதியான தேவை பற்றி நேரடியாகவே பேசுகிறது.

“Surrogate” என்ற பதத்திற்கு ஒரு புதிய திறப்பினை ஏற்படுத்திக் கொடுத்த இக்கதை, மனநலம் பாதிக்கப்பட்டவர், வயதானவர், தெருவோரம் மற்றவரிடம் கையேந்தி வாழ்பவர், என மக்கள் அனைவரும் உடல் உணர்ச்சியின் உச்சத்தில் சமமே என்றும், அதில் விதி விலக்கு இல்லை, என்றும் மிகவும் உணர்வுப்பூர்வமாக விளக்குகிறது.

#வெங்கம்பய – நூலின் தலைப்பைப் பெற்றுள்ள இந்தக் கதை, தலைப்பிலேயே சாதிய அடையாளக் கதை என்று தெரிகிறது.

ஏற்கனவே, இந்தச் சொல்லின் பொருள் அறிந்திருந்தாலும், ஒரு நாவலாக உருவாகக் கூடிய எல்லா அம்சங்களையும் கொண்டு, இந்தக் கதையை, உண்மை நிகழ்வுகளுடன் பொருத்திப் பார்த்துப் புனைந்திருக்கிறார்.

கௌரவக் கொலை என்று இன்றளவும் நடத்தப்பட்டு வரும் சாதிய அடையாளங்களையும், வறட்டு கௌரவங்களையும், தோலுரித்துக் காட்டுகிறது.

முடிவில், மிகை எதார்த்தவாதமாக இருந்தாலும், கதை முழுதும், இந்தச் சாதியப் பெருமைகளை அந்த வீட்டில் உள்ள ஆண்களை விட பெண்களே உயர்த்திப் பிடித்து நிற்பதாகவும் காட்டப்பட்டிருக்கிறது.

கசப்பான உண்மை நிகழ்வுகளை, நேரில் கண்ட பதற்றத்தைத் தருகிறது, இந்தச் சிறுகதை.

#முனியோட்டம் – கடவுளின் பெயரால் நடத்தப்படும் பாவச் செயலையும், மக்களிடம் உள்ள மூட நம்பிக்கையையும் சேர்த்து சமைத்த இந்தச் சிறுகதை, பொதுப் புத்தியில் உள்ள சிறுமைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

மக்களின் கேள்வி எழுப்பும் திறனை முற்றிலுமாக ஒதுக்கி வைத்து விட மதத்தாலும், கடவுளாலும் முடியும் எனும் கசப்பான உண்மையை, முகத்தில் அறைந்து வெளிப்படுத்துகிறது. முடிவில், இழப்புகளை சந்தித்தவருக்கு, நியாயமோ, பதிலோ இல்லாமல் எளிதாகக் கடந்து சென்று விடுகிறது, காலம்.

#இப்பல்லாம்_யாருங்க_சாதி_பாக்குறாங்க – எனக்குப் பிடித்த ஒரு தலைப்பு. கதையின் பாதையும் எதிர்பார்த்த திசையிலேயே பயணிக்கிறது.

கிடைத்த இடத்தில் எல்லாம், கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திச் சாதிய ஒடுக்குதல் நடக்கும் இந்தச் சமூகத்தில், ஒடுக்கப்படும் நபர், எவ்வளவு எத்தனித்தும், எதார்த்த நிலையை மறைக்க முடியவில்லை.

பேசுவதற்கு வேண்டுமானால் சுவாரசியமாக இருக்கும் சமூகநீதி, அதன் நடைமுறைச் சிக்கல்களை இன்னமும் முழுமையாக களைய இயலாத சமூகம், மாற்றம் பெறுவது எப்போது..? பொறுத்துக் கொண்டே இருக்கும் இவர்கள், கல்வியின் மூலமாகவே அதிலிருந்து வெளிவர முடியும்.

#சுதந்திரம் – குடும்பச் சூழலில் உருவான கதைகளையும், சமூகத்திலிருந்து குடும்பம் மீதான பார்வையையும் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார் இக்கதையில்.

என்ன செய்தாலும், சமூகத்திற்கு என்று சொல்வதற்கு ஒரு குறை இருக்கும். அதுவே இக்தையின் வேறாக அமைந்தது – ஆணாதிக்கச் சிந்தனைகளால், பட்டுப்போன மரத்தின் வேர்.

#வீசும்_காற்றில்_பரவிய_விஷம் – ஒரு கதையை இரண்டு வெவ்வேறு திசைகளில் பயணிக்க வைக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ள ஆசிரியரின் முயற்சி பாராட்டுக்குரியது. இன்னும் கொஞ்சம் சுருக்கி எழுதி இருந்தால் சுவாரசியமாக இருக்கும் என்று தோன்றுகிறது.

மேலும், இரண்டு திசைகளில் செல்லும் கதைகளின் முடிச்சு, ஏதேனும் ஒரு புள்ளியில், தர்க்க ரீதியாகப் பொருந்தி இருந்திருக்கலாம். விவரணைகள், சில இடங்களில் மிகச் சுறுக்கமாகவும், சில இடங்களில் மிக நீளமாகவும் அமைந்துள்ளது.

ஒரு சிறுகதையில் உள்ள கதாபாத்திரங்களை, இதே தொகுப்பில், பின்னால் வேறொரு சிறுகதையில் உலவ விட்டிருப்பது சிறப்பு. அதுவே, வேறொரு கதையின் திறப்பாக அமைந்திருப்பது, தொடர்ந்து வாசிக்கும் போது சுவாரசியத்தைக் கூட்டுகிறது.

ஒரு இராணுவ அதிகாரியின் கதை நம்பகத்தன்மையை தாண்டி, நின்றாலும், கதையின் நீளமும் முடிவும் ஏற்றுக் கொள்ள முடியாததாகிறது. எல்லா கதையும் நமக்குப் பிடித்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.!

தான் கண்ட, கேட்ட, அறிந்த சமூக நிகழ்வுகள், சாதிய ஏற்றத் தாழ்வுகள், பாலியல் அத்துமீறல்கள் என, ஒவ்வொன்றையும் கதையாக உருமாற்றி, அவருடைய புரிதலைப் பூடகமாக நமக்குக் கடத்துகிறார், ஆசிரியர்.

ஆனாலும், “இவை எல்லாம் கற்பனைகளே”, என்று தனது முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். கதையின் பெயர்கள் வேண்டுமானால் கற்பனைகளாக இருக்கலாம்..!

  • சங்கர்

******

நூல்: வெங்கம்பய
ஆசிரியர்: மாறன்
டிஸ்கவரி புக் பேலஸ்
பக்கங்கள்: 136

விலை: ரூ. 152/-

You might also like