பிஞ்சு மனதில் நஞ்சு விதைகளைப் பரப்பாதீர்!

தென் தமிழகத்தில் அனேகப் பள்ளிகளில் மாணவ, மாணவிகள் தங்கள் சாதிய அடையாளத்தைக் காட்டும் விதத்தில் கைகளில் குறிப்பிட்ட வண்ணக் கயிறுகளைக் கட்டிக் கொள்வது என்பது அண்மைக் காலமாக நீடித்து வருகிறது.

இந்த அடையாளக் கயிறுகளைக் கட்டிக் கொண்ட மாணவர்களால், மற்ற சமூகத்து மாணவர்களுக்கு சில பிரச்சனைகள் உருவாகி, பள்ளி வளாகத்திலேயே வன்முறைகளும் நடந்திருக்கின்றன.

சம்மந்தப்பட்ட பள்ளித் தலைமையோ அல்லது மற்றவர்களோ இந்த அடையாளப்படுத்தும் கயிறுகளை மாணர்வர்கள் கட்டி வருவதை ஆதரிக்காத நிலையிலும், அப்படிக் கட்டி வந்து, மாணவர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதையும் தடுக்க முடியவில்லை.

இத்தகைய அடையாளங்களால் பல பிரச்சினைகள் தொடர்ந்து உருவான நிலையில்தான் ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதியான கே.சந்துரு அவர்களின் தலைமையின் கீழ் ஒரு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.

அந்தக் குழுவும் பல்வேறு மாவட்டங்களில் இத்தகைய பிரச்சனைகள் எழக் காரணமாக இருந்த பள்ளிகளில் ஆய்வு நடத்தி, மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடம் பேசி தன்னுடைய அறிக்கையை தமிழக அரசிடம் அண்மையில் சமர்ப்பித்திருக்கிறது.

அந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட நிலையிலேயே அதற்கு எதிரான ஒரு எதிர் விமர்சனங்கள் வரத்துவங்கி விட்டன.

சில சமூக வலைத்தளங்களில் அத்தகைய அறிக்கைகளை செயல்படுத்தக் கூடாது என்கின்ற தொணியில் விமர்சித்து எழுதிய நிலையில், சென்ற வாரத்தில் சென்னை கமலாலயத்தில் கூடிய பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில், ஒரு தீர்மானமே இதுகுறித்து போடப்பட்டிருக்கிறது.

அவர்கள் அந்தத் தீர்மானத்தில் கே.சந்துருவின் அறிக்கையை குறிப்பிட்டு, விமர்சித்து தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள்.

ஆக, ஒரு தேசியக் கட்சியே இந்த மாதிரியான அளவுக்கு இறங்கி, முன்னாள் நீதிபதி சமர்ப்பித்த அறிக்கைக்கு எதிரான ஒரு எதிர் விமர்சனத்தை முன் வைத்திருப்பது அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் தான் இருக்கிறது.

இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட அதே நேரத்தில், அதே தென் தமிழகத்தில் மீண்டும் மாணவர்களுக்கிடையே இதே பிரச்சனை எழுந்திருக்கிறது. சாதிய மோதல்கள் நடந்திருக்கின்றன.

அதனால் அவர்களுக்குள் இளம் வயதிலேயே பரஸ்பரம் தாக்குதல் நடந்திருக்கிறது. இந்தத் தாக்குதல் குறித்த செய்திகளும் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் இளம்வயதினர் மத்தியில் அதுவும் பள்ளிக்கூடத்தில் சீருடையின் மூலம் சமத்துவத்தை வலியுறுத்துகிற நாம், ஏன் இம்மாதிரியான சாதிய அடையாளத்தை வெளிப்படுத்தும் மனப்போக்கைத் தொடர்ந்து அனுமதித்துக் கொண்டிருக்கிறோம்.

இத்தகைய கேள்வி பள்ளி ஆசிரியர்கள் மனதில் மட்டுமல்ல, பல பெற்றோர்கள் மனதிலும் இருக்கக்கூடும்.

ஆனால், அரசு இதுமாதிரியான எதிர் விளைவுகளைப் பொருட்படுத்தாமல் இளம்வயதில் அவர்களுடைய பிஞ்சு மனங்களில், ஒரு களையை நடுவதைப் போல இத்தகைய சாதிய அடையாளங்கள் அவர்கள் மீது திணிக்கப்பட்ட நிலையில், அவர்கள் அந்த அடையாளங்களுடன் அதை உருவாக்குகிற ஒரு சாதிய மனோபாவத்துடன் பள்ளிக்கூடங்களுக்கு போகிறபோது, அங்கு சமத்துவம் அடிபட்டு போகிறது.

அது பல மோதல்களுக்கும் மாணவர்களுக்கிடையே ஒரு ஒற்றுமையின்மைக்கும், பிளவுகளுக்கும் காரணமாகிவிடுகின்றது.

அதனால் தமிழக அரசு எந்த விதமான எதிர் விமர்சனங்களையும் பொருட்படுத்தாமல் முன்னாள் நீதியரசர் கே.சந்துரு சமர்ப்பித்த அந்த அறிக்கையை நடைமுறைப்படுத்த முன் வர வேண்டும்.

இந்த சமயத்தில் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் நினைவுப்படுத்த விரும்புகிறோம்.

சாதிய உணர்வுகள் கிளைவிடுவது எதன் மூலம் என்று கண்டறிவது, பெரும் சிக்கலான ஒன்றுதான்.

தென் மாவட்டங்களில் அடிக்கடி முன்பு உருவான கலவரங்களுக்குத் திருவிழாவின்போது, நடத்தப்படும் நாடகங்களில் ஒரு குறிப்பிட்ட சாதியத் தலைவரைப் பற்றி பாடிய பாடல் கூட எதிர்விளைவு உருவாக்கி கலவரச் சூழலை இருக்கிறது என்பது சமூகவியலாளர்களுக்கு நன்கு தெரியும்.

ஆக சமூகத்தில் நாம் எந்த விதமான விதைகளை தூவுகிறோம் என்பதை பொறுத்தே, அதற்கான எதிர் விளைவுகளும் அமையும்.

அத்தகைய மோசமான நச்சு விதைகளைப் பள்ளிக்கூடத்தில் கல்வியைக் கற்க வருகிற சமத்துவ உணர்வோடு நாம் இருக்க வேண்டும் என்று நினைக்கிற மாணவர்கள் மத்தியில் நச்சு விதைகளை விதைப்பதற்கு நாமே காரணமாகி விட வேண்டாம்.

– அகில் அரவிந்தன்

You might also like