திராவிட பாணியில் விஜய்?

தமிழக வெற்றிக் கழகத் தலைவரான நடிகர் விஜய் சமீபத்தில் நடந்த தேர்வில் வெற்றியடைந்த மாணவர்களையும், பெற்றோர்களையும் சந்தித்திருக்கிறார். உற்சாகமாக உரையாற்றியிருக்கிறார்.

தன்னை எளிமைப்படுத்தி வந்தவர்களிடம் உரையாடியிருக்கிறார். குழந்தைக்கு ‘தமிழரசி’ என்று பெயர் சூட்டியிருக்கிறார். விதவிதமான வெரைட்டியாக உணவருந்த ஏற்பாடு செய்திருக்கிறார்.

ஊடகங்கள் பாரபட்சமில்லாமல் அவரைக் கொண்டாடியிருக்கின்றன. தொலைக்காட்சி விவாதங்களில் அவர் சொன்னதையும், சொல்லாமல் விட்டதையும் பற்றி சொற்களால் அலசிக் காயப்போட்டு விட்டார்கள்.

நீட் உள்ளிட்ட பல பிரச்சினைகளில் அவருடைய பேச்சும், செயலும் திராவிட பாணியில் தான் இருந்தது.

மத்திய அரசை ‘ஒன்றிய அரசு’ என்று தான் குறிப்பிட்டார். கல்வியைப் பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று மாநில உரிமை பற்றிப் பேசினார். தமிழ், தமிழர் அடையாளத்தையும் சீமானைப் போல நினைவூட்டினார்.

எம்.ஜி.ஆர். பாணியில் வந்தவர்களை நிறைந்த உணர்வுடன் பசியாற்றியிருக்கிறார். நடுத்தர வயதான பெண் ஒருவர் “நீங்க நல்லாயிருக்கணும் நாடு முன்னேற” என்ற மக்கள் திலகத்தின் பாடலைப் பாடி விஜயை நாணத்துடன் சிரிக்க வைத்தார்.

ஒருபக்கம் தி.மு.க.வின் கொள்கை, எம்.ஜி.ஆரின் அணுகுமுறை, சீமானின் மொழி, மாநில உணர்வு மூன்றையும் ஒருங்கிணைத்திருக்கிறார் விஜய்.

இனி அடுத்த மாநாட்டில் அவர் வெளிப்படுத்தப் போவதையொட்டி அவரது அரசியலின் எதிர்காலம் இருக்கும்.

அப்படி அவருடைய செயல்பாடு தற்போதுள்ள நிலையிலேயே நீடித்தால் – தே.மு.தி.க தலைவர் விஜய்காந்த் நிரப்பிய இடத்தை விஜய் அடைய வாய்ப்பிருக்கிறது.

எப்படியோ தமிழகத்தில் உள்ள பல கட்சிகளை யோசிக்க வைத்திருக்கிறார் விஜய். இதுவே தமிழக வெற்றிக் கழகத்திற்குக் கிடைத்திருக்கிற சிறு பொறி மாதிரியான வெற்றி தான்!

– லியோ

#நீட் #தமிழக_வெற்றிக்_கழகத்_தலைவர் #நடிகர்_விஜய் #எம்ஜிஆர் #மத்திய_அரசு #ஒன்றிய_அரசு #திமுக #சீமான் #தேமுதிக #neet #tamizhaga_vettri_kazhagam #actor_vijay #mgr #dmk #seeman #dmdk

You might also like