நாடாளுமன்றத்தில் (நேற்று) மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி மற்றும் பாஜக உறுப்பினர்கள் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. நீட் தேர்வு, அக்னி வீரர் திட்டம், பண மதிப்பிழப்பு உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் குறித்து ராகுல் காந்தி பாஜகவுக்கு கேள்வி எழுப்பி இருந்தார்.
அதேபோல் பாஜகவினர் உண்மையான இந்துக்கள் அல்ல. உண்மையான இந்துக்கள் வெறுப்பு, வன்மம் ஆகியவற்றை தூண்ட மாட்டார்கள். ஆனால் பாஜகவினர் வெறுப்பை விதைக்கிறார்கள். 24 மணி நேரமும் பாஜகவினர் வெறுப்பை விதைத்து வருகின்றனர். பாஜகவும், பிரதமர் மோடியும் இந்துக்களின் ஒட்டுமொத்த பிரதிநிதி அல்ல’ என பல்வேறு குற்றச்சாட்டுகளை சாரம்சமாக வைத்து ராகுல் காந்தி உரையாற்றியிருந்தார்.
இந்த நிலையில், மக்களவையில் ராகுல் காந்தி பேசியதில் சில பகுதிகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியது. இந்துக்கள் குறித்தும் பிரதமர் மோடி குறித்தும் பேசிய சில பகுதிகள் அவைக்குறிப்பில் இடம் பெறவில்லை என கூறப்படுகிறது.
அதேபோல் பாஜக, ஆர்.எஸ்.எஸ் ஆகியவை குறித்து ராகுல் முன்வைத்த விமர்சனங்களும் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்நிலையில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான எனது உரையின் குறிப்பிட்ட பகுதியை நீங்கள் நீக்கி இருக்கிறீர்கள்.
அவை நடைமுறைப்படி அவ்வாறு நீக்குவதற்கு சபாநாயகருக்கு அதிகாரம் இருக்கிறது. ஆனால், மக்களவை நடைமுறை மற்றும் நடத்தை விதிகளின் விதி 380 இல் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்ட உரைகளை மட்டும்தான் நீக்க முடியும்.
ஆனால், எனது உரையின் கணிசமான பகுதிகளை, இந்த விதியின் கீழ் நீக்கியிருப்பது கண்டு அதிர்ச்சியடைகிறேன். எனது கருத்துக்களை பதிவுகளிலிருந்து நீக்குவது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் கோட்பாடுகளுக்கு எதிரானது.
முழுமையற்ற விவாதத்தில் தொடர்புடைய பகுதிகளை மக்களவையில் இன்று (ஜூலை 2) இணைக்கிறேன். எனது உரையின் நீக்கப்பட்ட பகுதிகள் விதி 380ன் வரம்பிற்குள் வராது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்திய அரசியலமைப்பின் 105(1) வது பிரிவின்படி, மக்களின் கூட்டுக் குரலை நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தும் அதிகாரம் ஒவ்வொரு உறுப்பினருக்கும் உண்டு.
அந்த உரிமையையும், நாட்டு மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளையும் நிறைவேற்றும் வகையில், நேற்று நான் செயல்பட்டேன். நான் கருதிய கருத்துக்களை பதிவுகளில் இருந்து நீக்குவது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் கொள்கைகளுக்கு எதிரானது.
குற்றச்சாட்டுகள் நிறைந்த அனுராக் தாக்கூரின் பேச்சில், ஆச்சரியப்படும் விதமாக ஒரே ஒரு வார்த்தை மட்டுமே நீக்கப்பட்டுள்ளது.
உரைகளை அவை குறிப்பில் இருந்து நீக்கும் விவகாரத்தில் நீங்கள் எடுத்த முடிவு ஏற்கும்படியானது அல்ல என்பதை உரிய மரியாதையுடன் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
எனவே, நீக்கப்பட்ட எனது உரையின் பகுதிகளை மீண்டும் அவைக் குறிப்பில் சேர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன் என்று அந்தக் கடிதத்தில் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.