விசு அரங்கேற்றிய குடும்ப ‘கலாட்டா’க்கள்!

தியேட்டரில் இன்றைய தலைமுறை ஆக்‌ஷன், த்ரில்லர், க்ரைம் படங்களைப் பார்ப்பதையே பெரிதும் விரும்புகிறது. சின்னத்திரையில் கூட இப்போது காதலும் மோதலும் மட்டுமே ’கவன ஈர்ப்பு பொருளாக’ இருந்து வருகின்றன.

உறவுகளுக்கு இடையேயான முரண்கள், அதனால் விளையும் பிரச்சனைகள், அவற்றுக்கான தீர்வுகளை முன்வைக்கும் படைப்புகளில் கூட ‘பழிக்குப் பழி’ என்ற வஸ்து விறுவிறுப்புக்காகச் சேர்க்கப்பட்டு பின்னர் அதுவே பிரதானம் என்றாவதே நிலைமையாக உள்ளது.

அப்படிப்பட்ட தருணங்களில் குடும்பப் பிரச்சனைகளை மையமாகக் கொண்ட பழைய திரைப்படங்களே, அதனை விரும்பும் ரசிகர்களுக்கு ஆசுவாசம் தருகின்றன.

கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், ஆர்.சி.சக்தி, விசு, கே.பாக்யராஜ், வி.சேகர் போன்ற பல இயக்குனர்கள், தங்களது படங்களை அப்படிப்பட்ட ரசிகர்களுக்காகவே தந்திருக்கின்றனர். அவற்றில் சில படைப்புகள் என்றென்றைக்குமானவையாகத் திகழ்கின்றன.

அந்த வகையில் சம்சாரம் அது மின்சாரம், பெண்மணி அவள் கண்மணி, சகலகலா சம்பந்தி உட்பட விசு இயக்கிய சில குடும்பச் சித்திரங்கள் இன்றும் நம் மனதைக் கொள்ளை கொள்வதாக விளங்குகின்றன.

நாடகத்தின் மீதான காதல்!

ஒய்.ஜி.பார்த்தசாரதியின் ‘யுனைடெட் அமெச்சூர் ஆர்ட்டிஸ்ட்’ குழுவில் ஒருவராக அங்கம் வகித்ததன் வழியாகத் தனது கலையுலக வாழ்வைத் தொடங்கியவர் விசு. இவரது சகோதரர்களும் நாடக நடிகர்கள் தான். அதனால் நாடகத்திற்கான எழுத்தாக்கம், அதனைக் காட்சிப்படுத்துதல், மேடை ஏற்றுவதில் புதிய நுட்பங்கள் என்றிருந்தது அவரது ஆரம்பகால வாழ்க்கை.

கிரேஸி மோகன், ஒய்.ஜி.மகேந்திரன், மௌலி, எஸ்.வி.சேகர் என்று தனக்கு முன்னும் நகைச்சுவை நாடகங்களில் கோலோச்சிய பலரோடு விசுவுக்கு நெருக்கமான நட்பு உண்டு. அந்த நாடக ஆர்வம்தான், அவரை இயக்குனர் கே.பாலச்சந்தரிடம் உதவி இயக்குனராகச் சேர வழி வகுத்தது.

எழுபதுகளின் இறுதியில் பாலச்சந்தர் இயக்கிய படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றியதோடு வசன கர்த்தாகவும் செயலாற்றினார் விசு.

அவர் எழுத்தாக்கத்தில் பெரும் வரவேற்பு பெற்ற நாடகங்களைத் திரைக்கதையாக்குவதிலும் பங்களிப்பைத் தந்தார்.

1977-ல் விசு வசனம் எழுதிய ‘பட்டினப் பிரவேசம்’ வெளியானது. தொடர்ந்து சதுரங்கம், அவன் அவள் அது, மழலைப் பட்டாளம், தில்லு முல்லு, நெற்றிக்கண், கீழ் வானம் சிவக்கும் ஆகிய படங்களுக்கு வசனம் எழுதினார்.

வெடிச்சிரிப்பைத் தந்த ‘தில்லு முல்லு’!

‘கோல் மால்’ என்ற பெயரில் இந்தியில் வெளியான படத்தைத் தமிழில் ரஜினிகாந்தை நாயகனாகக் கொண்டு ‘ரீமேக்’ செய்ய விரும்பினார் கே.பாலச்சந்தர். அந்த காலகட்டத்தில் ரஜினி நடிக்கும் படங்கள் எல்லாமே ‘ஆக்‌ஷன்’ வகையறாவில் இருந்தன. அதனை மாற்றிக் காட்ட வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தார் பாலச்சந்தர். அதற்கேற்ப, தில்லு முல்லு திரைக்கதையை வடிவமைத்தார்.

அந்தப் படத்தில் ‘அய்யம்பேட்டை கலியபெருமாள் இந்திரன்’ என்று ஆள் மாறாட்டம் செய்யும் பாத்திரத்தில் ரஜினி நடித்தது இன்றும் நம்மைச் சிரிப்பலையில் தள்ளாடச் செய்யும். தேங்காய் சீனிவாசன், சௌகார் ஜானகி பாத்திரங்கள் வடிவமைக்கப்பட்ட விதமும் புதுமையாகத் தெரியும்.

‘காசேதான் கடவுளடா’ படத்திற்குப் பிறகு, தேங்காய் சீனிவாசனை நினைவில் கொள்ளச் செய்வது ‘தில்லு முல்லு’தான். ‘அதுல என்ன பெருமை’, ‘புல்லரிக்குதுப்பா’ என்று அவர் பேசிய வசனங்கள் இன்றைய ‘மீம்ஸ்’ கலாட்டாக்களோடு பொருந்துபவை.

‘தில்லு முல்லு’வில் வரும் இண்டர்வியூ காட்சியில் விசு ஒருவருக்குக் குரல் கொடுத்திருப்பார். ‘சென்னையில இருக்குற லேடீஸ் காலேஜ் பேர் சொல்லப்பா’ என்ற கேள்விக்கு, அவர் பதிலளிக்கும் விதமே நம்மைக் குலுங்கிச் சிரிக்கச் செய்யும். அதேபோல, ‘நெற்றிக்கண்’ படத்திலும் கவுண்டமணி வரும் காட்சிகளில் நம்மைக் கண்ணீர் வரச் சிரிக்கச் செய்யும் விசுவின் வசனங்கள்.

அந்த அனுபவங்களே, பின்னர் தான் கதை திரைக்கதை வசனம் எழுதிய படத்தில் ஒரு பாத்திரத்தில் நடிக்கலாம் என்ற தைரியத்தை அவருக்குத் தந்தது.

இனிய தொடக்கம்!

எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில், விசுவின் எழுத்தாக்கத்தில், 1981இல் வெளியானது ‘குடும்பம் ஒரு கதம்பம்’. அதன் வெற்றி ஒரு இனிய தொடக்கத்தைத் தந்தது.

ஒரு குடியிருப்பில் வாடகைக்கு வசிக்கும் குடும்பங்கள் வெவ்வேறு சாதி, மதம் சார்ந்தவர்களாக இருப்பதையும், அவர்களுக்குள் இருக்கும் சமூக, பொருளாதார வித்தியாசங்களையும் காட்டியது.

பிரச்சனைகள் என்னவென்பதைத் தொடக்கத்தில் காட்டி, பிறகு மெல்ல அவற்றின் முழு வீரியத்தையும் நமக்குணர்த்தி, அதனால் கதை மாந்தர்கள் படும் அல்லல்களை விளக்கி, இறுதியாகத் தீர்வுகளைச் சொல்வதாக முடிவடையும் அப்படம்.

கதை சொல்லும் பாணியில் நிறைய நாடகத்தனம் தெரிந்தாலும், அதையும் மீறி நடிப்புக் கலைஞர்களின் பங்களிப்பும், கேமிரா நகர்வுகளும் நமக்கு வேறொரு அனுபவத்தைத் தரும்.

இந்தக் கதையில் ஒரு தம்பதியருக்கு பிரச்சனையாக இருக்கும் விஷயம், இன்னொரு குடும்பத்தினருக்குத் தீர்வைத் தருவதாக இருக்கும்.

போலவே, இவர்களுக்கான பிரச்சனை அவர்களுக்கான தீர்வாக இருக்கும். அப்படி பிரதாப் போத்தன் – சுமலதா தம்பதியரையும், எஸ்.வி.சேகர் – சுஹாசினி தம்பதியரையும் திரையில் காட்டியிருப்பார் இயக்குனர்.

கமலா காமேஷ் கணவராக, நித்யா மற்றும் பூபதியின் தந்தையாக, இதில் விசு நடித்திருப்பார். மனைவி வீட்டு வேலை செய்து சம்பாதிக்க, எந்த வேலையும் செய்யாமல் வெட்டிப் பேச்சு பேசி பிறரை வம்பிக்கிழுக்கும் கணவராகத் தோன்றியிருப்பார்.

ஒரு காட்சியில், ‘என்கிட்ட இவ்ளோ பணம் எப்படி வந்ததுன்னு கேட்கறதுக்கு முன்னாடி, உங்க கையால ஒரு தடவையாவது உழைச்சு சம்பாதிச்சுட்டு வாங்க’ என்று சொல்வார் நித்யா. அதன்படியே செய்து, உணர்வுக் கொந்தளிப்பில் தான் வாங்கிய சம்பளப் பணத்துடன் அவர் முன்னே வந்து நிற்பார் விசு.

இன்று வேலைக்குச் செல்லாமல் மது போதையே கதி என்று கிடக்கும் எத்தனையோ குடிமகன்களுக்கான சாட்டையடியாகத் தெரியும் அந்தக் காட்சிகளும், விசு ஏற்ற பாத்திரப் படைப்பும்.

இது போல அப்படத்தில் உள்ள எத்தனையோ விஷயங்கள் இன்றைய சூழலுக்கும் பொருந்திப் போகக் கூடியவை.

பிறகு ‘மணல் கயிறு’ என்ற படத்தை முதன்முறையாக இயக்கினார் விசு. அதில் எஸ்.வி.சேகர், சாந்தி கிருஷ்ணா இருவரும் நாயகன் நாயகியாக நடித்தனர்.

அந்தப் படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது. அதில் எஸ்.வி.சேகர் போடும் நிபந்தனைகளுக்கு ஏற்றவாரு ஒரு பெண் இருக்கிறார் என்று சாந்தி கிருஷ்ணாவை அவரது தலையில் கட்டும் ‘நாரதர் நாயுடு’ பாத்திரத்தில் நடித்தார் விசு.

பிறகு தானும் தனது சகோதரர் கிஷ்முவும் நாயகர்களாக நடித்த ‘கண்மணிப் பூங்கா’ படத்தைத் தந்தார். அது தோல்வியுற்றது.

தொடர்ந்து டௌரி கல்யாணம், புயல் கடந்த பூமி, ராஜதந்திரம், நாணயம் இல்லாத நாணயம், புதிய சகாப்தம், கெட்டி மேளம், சிதம்பர ரகசியம் ஆகிய படங்களை இயக்கினார்.

அவற்றில் ஒரு பாத்திரத்தில் நடிக்கவும் செய்தார். ஏனோ அந்தப் படங்கள் ‘குடும்பம் ஒரு கதம்பம்’, ‘மணல் கயிறு’ போன்ற வெற்றியைச் சம்பாதிக்கவில்லை.

அப்போதுதான், தனது ஆரம்பகாலப் படங்களில் இருந்த ப்ளஸ் பாய்ண்ட்களை துறந்து வழக்கமான மசாலா படங்களைத் தான் இயக்கி வருவதை உணர்ந்தார் விசு.

அதன்பிறகு, அவர் இயக்கிய படமே ‘சம்சாரம் அது மின்சாரம்’. அதுவே, இன்று அவருக்கு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் அடையாளத்தை உறுதிப்படுத்தியது.

தேசிய விருது தந்த படம்!

ஏவிஎம் தயாரிப்பில், விசு இயக்கிய ‘சம்சாரம் அது மின்சாரம்’, 1986 ஜூலை 18-ம் தேதியன்று வெளியானது. அது ஒரு குறுகிய காலத் தயாரிப்பு. அதற்காக போடப்பட்ட வீடு செட், ஏவிஎம் ஸ்டூடியோவில் பல ஆண்டுகாலம் நிலைத்திருந்தது.

அந்தப் படத்தின் கதை, விசு எழுதிய ஒரு நாடகத்தை அடிப்படையாகக் கொண்டது. 1975-ம் ஆண்டு அதன் உரிமையை வாங்கிய இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், ஒய்.ஜி.மகேந்திரன் இயக்கத்தில் ‘உறவுக்குக் கை கொடுப்போம்’ என்ற பெயரில் தயாரிக்கவும் செய்தார். அந்தப் படம் வெற்றி பெறவில்லை.

அதே கதையை மீண்டும் எடுக்கிறேன் என்று விசு சொன்னபோது, ஏவிஎம் நிறுவனம் மறுப்பு தெரிவிக்கவில்லை. அந்த காலகட்டத்தில் சங்கர் குரு, தர்மதேவதை, மெல்லத் திறந்தது கதவு என்று அதிக பட்ஜெட்டில் சில படங்களை அந்நிறுவனம் தயாரித்து வந்தது.

இதர படங்களின் பட்ஜெட்டை கணக்கிட்டால், ‘சம்சாரம் அது மின்சாரம்’ படத்திற்கான செலவு மிகச்சிறியது.

அது தெரிந்தும், தனது பலம் எதுவென்று தெரிந்து களத்தில் இறங்கினார் விசு. அந்தப் படத்தில் ரகுவரன், லட்சுமி, சந்திரசேகர், மாதுரி, கமலா காமேஷ், காஜா ஷெரிஃப், மனோரமா, கிஷ்மூ, இளவரசி, திலீப் ஆகியோரது பாத்திரங்கள் வலுவாக வடிவமைக்கப்பட்டிருந்தன.

மாதுரியின் தந்தையாக வரும் டெல்லில் கணேஷ் கூட, இரண்டொரு காட்சிகளில் வந்தாலும் நம் மனதில் நிலைக்கும்படியாக பெர்பார்மன்ஸை தரும் வகையில் வார்த்தார் விசு.

ஒரு சாதாரண நடுத்தரக் குடும்பத்தில் உறவுகளுக்குள் எழும் பிரச்சனைகளால் விரிசல் உண்டானால், இறுதியில் தீர்வு எப்படிப்பட்டதாக இருக்குமென்று சொன்னது அப்படத்தின் முடிவு. இன்றும் கூடப் பல பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்குத் தனிக்குடித்தனத்திற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள அந்தப் படமும் ஒரு காரணமாக இருந்து வருகிறது.

‘சம்சாரம் அது மின்சாரம்’ திரைப்படம் அதன் பட்ஜெட்டை விட பல மடங்கு வசூலைப் பெற்றது மட்டுமல்லாமல், சிறந்த பொழுதுபோக்கு திரைப்படத்திற்கான தேசிய விருதையும் வென்றது. கன்னடம், தெலுங்கு, மலையாளம், வங்காளம், இந்தி மொழிகளில் ‘ரீமேக்’ ஆனது.

அந்தப் படம் தந்த வரவேற்புக்குப் பிறகு, விசு தனது ராஜபாட்டையில் பயணித்தார்.

திருமதி ஒரு வெகுமதி, கோவலன் அவன் காவலன், பெண்மணி அவள் கண்மணி, சகலகலா சம்பந்தி, வரவு நல்ல உறவு, வேடிக்கை என் வாடிக்கை என்று வரிசையாக ஹிட்கள் தந்தார்.

கைம்பெண் திருமணம், கையூட்டு தவிர்த்தல், முதியவர்களுக்கு மரியாதை, குடி போதை தடுப்பு, வரதட்சணை கொடுமை, பிறர்மனை நோக்காமை என்று சமூகத்தில், குடும்பங்களில் நிலவும் பிரச்சனைகளை கருப்பொருளாக மாற்றினார். அதன் வழியே ரசிகர்களை தியேட்டர் வாசலில் திரள வைத்தார்.

தொண்ணூறுகளுக்குப் பிறகு விசு இயக்கிய படங்கள் முழுமையானதாக அவரது பாணியில் அமையவில்லை.

அவற்றில் நகைச்சுவைக்கான இடமும் பெரியளவில் இல்லை. அது போன்ற காரணங்களால் அவரது படங்கள் சரிவைச் சந்தித்தன.

அந்த காலகட்டத்தில் மன்னன், உழைப்பாளி, சின்ன மாப்ளே, வனஜா கிரிஜா என்று பிற இயக்குனர்களின் படங்களில் நடிக்கத் தொடங்கினார். ’அரட்டை அரங்கம்’ நிகழ்ச்சி மூலமாக மக்களோடு பேசும் வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டார். அது விசுவின் இன்னொரு பரிமாணத்தை வெளிப்படுத்தியது.

விசுவின் திரைப்படங்களில் இருக்கும் அரசியல், சமூகம் சார்ந்த பார்வை, இன்று பலரால் விமர்சிக்கப்படுகிறது. ஆனால், அவற்றை எதிர்ப்பவர்கள் கூட அவரது வெற்றிப்படங்களில் இருக்கும் பொழுதுபோக்கு அம்சங்களைச் சிலாகிப்பார்கள். அதுவே அவரது பலம்.

இன்றும் கூட, விசுவின் படங்களைப் பார்க்க உட்கார்ந்தால் நம் மனம் சிரித்துச் சிரித்து லேசாகி விடும். அப்படங்களின் உள்ளடக்கம் வெறும் நகைச்சுவை தோரணமாக அல்லாமல் நம் வாழ்வோடு சம்பந்தப்பட்டதாக இருப்பது அதற்கொரு காரணம்.

அவரது படங்களின் முன்பாதி ’குடும்ப கலாட்டா’வாகவும், பின்பாதி ‘அவற்றுக்கான தீர்வாக’வும் இருப்பதை நம்மால் நன்குணர முடியும்.

அனைத்தையும் தாண்டி, குறிப்பிட்ட காலகட்டத்தில் வாழ்ந்த மக்களின் மனநிலையை, சமூகத்தின் எண்ணவோட்டத்தைக் குறிப்பிட்ட அளவில் பிரதிபலிக்கும் வகையில் அவை இருப்பதை அறிய முடியும். விசு இயக்கிய குடும்பச் சித்திரங்களை மீண்டும் மீண்டும் நாம் ரசிக்க அந்த ஒரு காரணமே போதுமானது!

– உதயசங்கரன் பாடகலிங்கம்

You might also like