40 விழுக்காடு காடுகளை விழுங்கிய உண்ணிச் செடி!

தமிழக அரசின் சுற்றுச்சூழல் பருவநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக உள்ள சுப்ரியா சாகு இ.ஆ.ப., அண்மையில், எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அவர் ஆங்கிலத்தில் வெளியிட்ட பதிவை, யாரோ ஒருவர், கூகுள் மொழிபெயர்ப்பு மூலம் தமிழ்ப்‘படுத்தி’யிருக்கிறார்.

அப்படி மொழிமாற்றம் செய்திருக்கும் பதிவு வாட்ஸ்ஆப்பில் வலம் வந்து என் பார்வையில் பட்டது.

‘முதுமலையில் லாந்தனா கமராவின் படையெடுப்பில் இருந்து அழிக்கப்பட்ட அழகிய சிவப்பு வாட்டில் மடியில் கூடு கட்டி உள்ளது. லந்தானா ஏனெனில் இது காடுகளின் பன்முகத்தன்மையைக் குறைப்பதால்…’

இந்தமாதிரி போகிறது அந்த பதிவு. அதை முழுமையாகப் படித்தால் தலையில் ஒரு முடிகூட மிஞ்சாது போலிருக்கிறது.

லாந்தனா கமரா (Lantana camara) என்பது ஒருவகை தாவரம். தமிழில் இது உண்ணிச்செடி. தமிழக காடுகளுக்கு எங்கிருந்தோ வந்துவிட்ட அடாவடியான ஒரு புதர்ச்செடி இது.

மெக்சிகோ நாட்டில் இருந்து 1809ஆம் ஆண்டில் ஓர் அலங்காரச் செடியாக இது வந்ததாகவும் சொல்வார்கள்.

இப்போது கிட்டத்தட்ட நம் நாட்டின் எல்லா காடுகளிலும் 3 லட்சம் சதுர கி.மீ. பரப்பளவு வரை பரவி, உண்ணிச்செடி ஆட்சி செய்கிறது.

இந்தியாவில் புலிகள் வாழும் காடுகளில் 40 விழுக்காடு பகுதியை விழுங்கிவிட்ட இந்த உண்ணிப் புதர்ச்செடி, இப்போது கிட்டத்தட்ட நம்நாட்டுத் தாவரமாகவே மாறிவிட்டது.

தரைவழியே பரவுவது மட்டுமின்றி ஏறுகொடிகள் போல மரங்களில் ஏறியும் இது படர்ந்து பரவுகிறது.

உண்ணிச்செடியின் பூக்கள், வண்ணமயமாகப் பூக்கும். இதன்மூலம் ஸ்கிப்பர் போன்ற வண்ணத்துப் பூச்சிகளை, இந்தச் செடி அதிகமாக தன்பக்கம் ஈர்த்து இழுக்கிறது.

உண்ணிப் பூக்களின் அழகும், அதிலுள்ள மதுவும் அதிகம் கவர்வதால், வண்ணத்துப்பூச்சிகள் உண்ணிச்செடிக்கு அருகே உள்ள மற்ற இன புதர்ச்செடிகளை சீந்துவதே இல்லை.

இதனால், உண்ணிச்செடி மேலும் தழைக்கிறது. மற்ற இன புதர்ச்செடிகள் மகரந்தச் சேர்க்கைக்கு வழியின்றி மெல்ல சாகின்றன.

இந்த உண்ணிச்செடியின் பழங்களை காட்டுக்கோழிகள் விரும்பி உண்ணும். பழம் தின்னும் பறவைகளால் இதன் விதைகள் மேலும் பரவுகின்றன.

இந்தியக் காடுகளில் மண்ணின் வளத்தைக் குறைப்பதிலும் உண்ணிச்செடிக்கு பெரும்பங்கு இருக்கிறது.

தப்பித்தவறி இந்தப் புதர்ச்செடியை மேயும் மான், காட்டுமாடு போன்றவை ஒவ்வாமை, வயிற்றுப்போக்கு, நுரையீரல் பாதிப்பு போன்றவற்றால் இறந்து போகவும் நேரிடுகிறது.

இந்த உண்ணிச்செடி தொடர்பாக, சுப்ரியா சாகு சொல்லியிருக்கும் செய்தி அழகானது. அருமையானது.

முதுமலை காட்டில் மட்டும் 3,300 ஹெக்டேர் பரப்பளவுக்கு இந்த உண்ணிச்செடியை அகற்றப்பட்டிருப்பதாக சுப்ரியா சாகு சொல்கிறார்.

இப்படி உண்ணிச்செடி அகற்றப்பட்ட காட்டுத் தரையில் சிவப்பு மூக்கு ஆள்காட்டிப் பறவை இப்போது கூடு கட்டத் தொடங்கியுள்ளது. இதுதான் அவர் சொல்லியிருக்கும் நல்ல செய்தி.

நன்றி: மோகன ரூபன் முகநூல் பதிவு

You might also like