இறுகப்பற்ற மறந்த உறவு!

உயிர் உருக, அலறித்துடித்துக் கொண்டிருந்த தாயின் சத்தம் மருத்துவமனையை பிளந்துகொண்டிருக்க, கதவுக்கு பின்னால், படபடத்த கால்களோடு, கண்ணீரை அழுத்திக்கொண்டு, பயத்தை விழுங்கி கொண்டு, தேகம் முழுக்க படர்ந்த பயத்தோடு, இங்கும் அங்குமாய் நடந்துகொண்டிருக்கிறார் அவர்.

வானிலிருந்து இறங்கிய தேவதூதனாய் திடீரென்று வந்த நர்ஸ், ‘உங்களுக்கு மகள், மகன் பிறந்திருக்கிறான்’ என்றபோது, உடைந்து அழுகிறார் அந்த ஆண் தாய்.

வயதெல்லாம் தளர்ந்து, மீசையெல்லாம் மழுகி ஒரு குழந்தையைபோல, ‘என் புள்ள’ என்று அப்பாவித்தனமாக கண்களில் கண்ணீரோடும் முகத்தில் சிரிப்போடும் பெருமிதம் கொண்ட தந்தைகள் போற்றக் கூடியவர்கள் தான்.

சதா எந்நேரமும் அன்பை பொழிந்து கொண்டும், பாசத்தை பறைசாற்றிக்கொண்டும் இருக்கும் கலைகள் பெரும்பாலான அப்பாக்களுக்கு கைகூடுவதில்லை. ஆனால், மனதின் அடியில் எப்போதும் பிள்ளைகளின் வளர்ச்சி குறித்த கனவுகள் தேங்கி கொண்டேயிருக்கிறது.

சாப்டியா, தூங்குனியா? என்றெல்லாம் நேரடியாக பிள்ளைகளிடம் கேட்டு பெறத் தெரியாத அப்பாக்கள் தான், ‘அவன், அவள் சாப்படாளா?’ என்று திரையிட்ட பாசத்தை மனதுக்கு தேக்கி வைத்திருக்கிறார்கள். அந்த தேக்கம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது.

தந்தையாய் பரிணமித்த கனம் தொடங்கி கனவுகளுக்கான சித்திரங்களை செதுக்கி தனது பிள்ளையின் முழு எதிர்காலத்தையும் மனவரைபடத்தில் தீட்டி விடுகிறார்கள் தந்தைகள்.

அதுவரை கூட்டிலிருந்த அந்த பறவை பறக்க தயாராகிறது. முதல் நாள் பள்ளிக்குச் செல்ல தயாராகும் குழந்தையின் விரலை ஏந்திக்கொண்டு நடைபோடும் வழிநெடுங்கிலும் அந்த தந்தைக்கு தட்டப்படுவதெல்லாம் அதன் எதிர்காலமும் அன்றைய நாள் குறித்த எதிர்பார்ப்பும் தான்.

இன்றைக்கும் ஜூன் மாதங்களில் எத்தனையோ பள்ளி வளாகங்கள் தந்தைகளின் உறைவிடங்களாக மாறிக்கிடக்கின்றன. குறிப்பாக மகள்களை பெற்ற அப்பாக்களின் உலகம் அலாதியானது.

அதுவரை அப்பாக்களின் மூளை படிமங்களில் குடிகொண்டிருக்கும் ஆணாதிக்கம் மகள்களின் வருகையால் உதிர்ந்து சுக்குநூறாகிவிடுகிறது. உருகி கரைகிறார்கள். அம்மா இல்லாமல் வளரும் மகள்களைக் கொண்டாடித் தீர்க்கிறார்கள். சித்தியால் மகளுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதால் மறுமணத்தை மறுத்து, மகளுக்காக வாழும் தந்தைகள் ஏராளம்.

விடலை பருவத்தை எட்டியதும் அதுவரை அப்பாக்களிடமிருந்த நெருக்கத்தில் அந்தியம் தொற்றிவிடுகிறது. உரையாடல்களில் இயல்பாகவே இடைவெளிகள் விழுந்து, ‘ம்’, ‘ஓகே’ ‘சரி’ என்ற ஓரிரு வார்த்தைகளில் பேச்சுக்கள் முற்று பெற்றுவிடுகின்றன.

‘அவர்கிட்ட பேச என்ன இருக்கு?’ என்ற வார்த்தைகளின் அப்பாக்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடுவதில்லை. தன் கையே தன் கண்ணை குத்துவதால், கண்கள் பழிதீர்ப்பதில்லை தானே

இந்த பருவ வயது மாற்றங்களை தமிழ் சினிமா நிறைய படங்களில் அழுத்தமாக பதிவு செய்துள்ளது.

‘7 ஜி ரெயின்போ காலனி’யில் மகனை நினைத்து உருகும் தந்தை, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தில் வரும் ‘அன்புள்ள அப்பா அப்பா’ பாடல், சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்தில் தந்தையின் மறைவுக்குப் பிறகு அவரை நினைத்து உருகும் மகன் என பல இடங்களில் பதிவு செய்துள்ளது.

மகள்கள் என வரும்போது அவர்களை ஆரத்தழுவி கொண்டாடியிருக்கிறது.

‘ஆனந்த யாழை’ பாடல் முதல் ‘அபியும் நானும்’, ‘என்னை அறிந்தால்’ படத்தில் ‘உனக்கென்ன வேணும் சொல்லு’ என மகள்களை கொண்டாடித் தீர்த்திருக்கிறது.

தந்தையுடனான இந்த விலகல்கள் மீண்டும் நெருக்கத்தை தேடும் காலங்களில் அவர் நினைவுகளாகி விடுகிறார்.

நினைவுகளை எண்ணி வருந்திக் கொண்டிருப்பதற்கு பதிலாக, அவருடன் அமர்ந்து பேச உங்களுக்கும், உங்களுடன் பேச அவருக்கும் ஆயிரம் கதைகள் இந்த நொடிப்போதில் இருக்கத்தானே செய்கிறது. இன்னும் தாமதமாகவிடவில்லையே.

– நன்றி: நியூஸ் 4 இணையதளம்

You might also like