போதைப் பொருட்களை ஒழிக்க கை கோர்ப்போம்!

ஜுன் 26 – சர்வதேச போதை ஒழிப்பு தினம்

சிகரெட் புகையின் ஊடே தலையைக் கோதிக்கொண்டு வலமும் இடமும் திரும்பிப் பார்க்கும் நட்சத்திரங்களைத் திரையில் பார்த்து ரசிகர்கள் பரவசமடைந்த காலமொன்று உண்டு.

அது போலியானது என்ற உண்மையை உணராமல், நாமும் அப்படியொரு ‘ஆண்மைத்தனமான’ (?!) தோற்றத்துடன் திகழ வேண்டுமென்று தமது வாழ்வைச் சீரழித்த தலைமுறை ஒன்று உண்டு.

அது போன்று எத்தனையோ போதைப்பொருட்களை, விதவிதமான கற்பிதங்களை நம்பி இன்றைய தலைமுறையினர் பலர் சீரழிந்து வருகின்றனர்.

திரைப்படங்கள், விளம்பரங்கள் தான் அவற்றை முன்னெடுக்கின்றன என்றில்லாமல், இன்று கிடைத்த வெளி எங்கும் போதைப்பொருட்களைப் பெறுவதற்கான தூண்டுதல்கள் நிறைந்து கிடக்கின்றன.

பெட்டிக்கடைகள், மளிகைக்கடைகள் முதல் பார்கள், பப்கள், நட்சத்திர ஹோட்டல்கள் என்று எங்கும் அவை கிடைக்கின்றன என்பதே நிலைமையாக உள்ளது.

இந்தச் சூழலில், அவற்றால் விளையும் தீமைகள் குறித்த விழிப்புணர்வை உண்டாக்குவதும், அப்பழக்கங்களில் மூழ்கியவர்களை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவதும் சவாலாக மாறியுள்ளது.

அதேநேரத்தில், அதனைச் செயல்படுத்தினால் மட்டுமே எதிர்காலத் தலைமுறையினருக்கு நல்லதொரு உலகத்தைக் கைமாற்றிவிட்ட திருப்தி கிடைக்கும் என்ற நிலையும் தற்போது உள்ளது.

மது அருந்துபவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்த காலகட்டத்தில் மதுக்கடைகள், பார்கள் ஆகியன ஊருக்கு ஒதுக்குப்புறமாக அமைந்திருந்தன. அந்த எண்ணிக்கை அதிகமானபோது அனைத்தும் ஊருக்குள் வந்துவிட்டன.

அதையே சற்று மாற்றி, ஊருக்குள் விற்பனை செய்யப்பட்டதாலேயே அந்த எண்ணிக்கை அதிகரித்து விட்டதாகச் சொல்பவர்களும் உண்டு. நமக்கு அந்த விவாதம் தேவையில்லை.

மேற்சொன்னது போலவே, இன்று போதைப்பொருட்கள் எல்லா இடத்திலும் கிடைக்கிற சூழல் உள்ளது.

கொக்கைன், அபின் போன்றவை கிலோ கணக்கில் பிடிபடும்போது, அவற்றின் மதிப்பு எவ்வளவு என்று தினசரிகளில் குறிப்பிடப்படும். அவை கோடிகளில் இருக்கும்.

போதைப்பொருள் தடுப்பு ஆர்வலர்கள் பலர், அதனைக் குறிப்பிடக் கூடாது என்று பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். அதனைத் தொடர்ந்து உட்கொள்வதால் விளையும் தீமைகளைச் சுட்டிக்காட்ட வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.

இன்று, ஒரு போதைப்பொருளானது பொருளாதார, சமூக வேறுபாடுகளைத் தாண்டி பல தரப்பினரையும் சென்றடையக் கூடிய நிலை உள்ளது.

அதனைச் சரி செய்ய, ‘போதைப்பொருள் உட்கொள்வது ஒரு வகை அந்தஸ்து’ என்ற மனோபாவத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும். ’அது சாதாரணமான விஷயம் தான்’ என்றெண்ணும் நிலையையும் அடியோடு மாற்ற வேண்டும்.

‘போதைப்பொருள் உட்கொள்வது தவறு’ என்று சுட்டிக்காட்டும் திரைப்படங்கள் கூட, அவற்றைச் சுகிப்பதை விலாவாரியாகக் காட்டும் அளவுக்கு, அதனால் விளையும் கொடுமைகளைக் காட்டுவதில்லை. அதுவே, அந்தந்த படைப்பாளிகளின் ‘படைப்பு நேர்மை’யை நமக்கு உணர்த்தி விடுகிறது.

பள்ளி, கல்லூரிகளில் பயில்பவர்களைக் குறி வைத்து, இன்று போதைப்பொருள் வியாபாரம் நடந்து செல்வதாகச் சொல்லப்படுகிறது.

போதைப்பொருட்கள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன, அவை கடந்து வரும் பாதையில் ஏற்படுத்தும் தீமைகள் என்ன, அதனை உட்கொள்பவர் எதிர்காலத்தில் என்ன ஆவார் என்பதை அத்தளிர்களிடத்தில் விளக்கிச் சொல்லும்பட்சத்தில், அவற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைத்திட முடியும்.

பான், குட்கா போன்ற வடிவங்களிலும் போதைப்பொருட்கள் கிடைக்கின்றன. அவற்றை ஒழிப்பதற்கு அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் கூட, சட்டவிரோதமான முறையில் இன்றும் அது தொடர்ந்து வருகிறது. அவை மிகக்குறைந்த விலையிலும் கிடைக்கின்றன என்பதே நாம் கவனிக்க வேண்டியது.

‘அப்படிப்பட்ட நிலை இங்கில்லை’ என்பவர்கள் ஒரே ஒருமுறை அரசுப் பேருந்து, ரயில் என்று பொதுப்போக்குவரத்து முறையைப் பயன்படுத்தலாம்.

அந்த நிலையத்தைச் சிறிது நேரம் வலம் வரலாம். ஐந்து நிமிடங்களாவது பெட்டிக்கடைகள் இருக்குமிடங்களில் கொஞ்சம் காத்திருந்து ‘கண்காணித்து’ நோக்கலாம்.

அப்போது, பழைய தினசரிகளில் அல்லது வேறு ஏதோ காகிதங்களில் சுற்றி அவை விற்கப்படுவதைக் காண முடியும்.

அது போன்ற வஸ்துக்கள் செய்யும் கொடுமைகளைச் சொல்லி மாளாது.

பதின்ம வயதினரிடம் அது போன்ற போதைப்பொருட்கள் ஏற்படுத்தும் தாக்கம் மிக அதிகம்.

அதனைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்று நினைப்பவர்கள் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியரிடம் ‘பற்கள் மற்றும் ஈறு பாதுகாப்பு’ சோதனைகளை மேற்கொள்ளலாம்.

இவற்றையெல்லாம் தாண்டி உடலில் நேரடியாகச் செலுத்தக்கூடிய, உறிஞ்சக்கூடிய வகையிலான போதைப்பொருட்கள் பயன்பாடும் தற்போது அதிகரித்திருப்பதாகச் சொல்கின்றனர் போதைப்பொருட்கள் எதிர்ப்பு ஆர்வலர்கள்.

அரசு சார்ந்த கல்வி நிறுவனங்கள் மட்டுமல்லாமல் பத்து முதல் 25 வயதினர் இருக்கும் அனைத்து கல்வி நிலையங்களிலும் ‘முழு உடல் சோதனை’ நடத்தும்போது இன்னும் முழுமையாக விவரங்கள் தெரிய வரலாம்.

மிகப்பெரிய துக்கம், ஏமாற்றம், இயலாமை என்று ஒரு சில காரணங்களுக்காகப் போதையின் பிடியில் தன்னை ஒப்புக் கொடுத்தனர் இதற்கு முன் வாழ்ந்தவர்கள். இன்றோ, காரண காரியம் ஏதுமில்லாமல் அந்தக் கொடிய வலையில் தானாகச் சென்று சிலர் சிக்கிக் கொள்கின்றனர்.

‘விழுந்தால் எழுவது கடினம்’ என்று கூறி வழிகாட்ட ஆள் இல்லாமல் சிக்குபவர்கள் நிறைய. அவர்களுக்காகவாவது ‘போதைப்பொருட்கள் எதிர்ப்பு விழிப்புணர்வு’ அதிகப்படுத்தப்பட வேண்டும்.

1987-ம் ஆண்டில் ஐநா பொதுச்சபை முன்னெடுத்ததன் மூலமாக, ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோதக் கடத்தல் தடுப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறாது.

அதற்கான கருபொருள் உருவாக்கப்பட்டு, அதனைச் செயல்படுத்துவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

அந்த வகையில், ‘சான்றுகள் தெளிவாக உள்ளன; போதைப்பொருள் ஒழிப்பில் முதலீடு செய்வோம்’ என்பது 2024-ம் ஆண்டுக்கான கருப்பொருளாகக் கொள்ளப்பட்டுள்ளது.

ஒரு மனிதன் நல்லதொரு வாழ்வை மேற்கொள்ள, ஆரோக்கியமான உடல் நலமும் மனநலமும் அவசியம். அதனை அடியோடு தகர்க்கிற போதைப்பொருள் பழக்கத்தை, ‘அவற்றை அதிகப்படுத்துகிறேன் பேர்வழி’ என்கிற பெயரில் உட்கொள்பவர்களே அதிகம்.

அது போன்ற மூடத்தனத்தை ஒழித்தாலே, அதில் சிக்கிச் சீரழிபவர்களைப் பெருமளவில் மடை மாற்றிவிட முடியும்.

போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை உருவாக்குவதன் மூலமாக, ஒரு மனிதன் தன் வாழ்வில் பெறுகிற இன்பங்களை, அவற்றின் இயல்புகளோடு அனுபவிக்கிற நிலையை உருவாக்கலாம்.

உணவின் அறுசுவைகளை முழுமையாக அறிந்திட விடாமல் தடுக்கும் போதைப்பொருட்களைத் தவிர்ப்பதன் மூலமாக, வாழ்வின் எத்தனையோ இன்பங்களைப் பெற்றிட முடியும்.

நாம் ஒவ்வொருவரும் நமது திறனை அதிகபட்சமாகப் பயன்படுத்தி இதற்கான முயற்சிகளில் ஈடுபடுவோம்; போதைப்பொருட்கள் இல்லா சமூகத்தை உருவாக்குவோம்; நல்லதொரு உலகை அடுத்த தலைமுறையினருக்கு அளித்திடுவோம்..!

-மாபா

#World_Drug_Day #சர்வதேச_போதை_ஒழிப்பு_தினம் #சிகரெட் #போதைப்_பொருட்கள் #பள்ளி #கல்லூரி #Cigarette #Drugs #School #College

You might also like