உள்ளொழுக்கு – உண்மைகளின் இன்னொரு முகம்!

‘உள்ளும் புறமும் காண்பது ஓருருவம் தானா’ என்ற கேள்வியை எவராலும் தவிர்க்க முடியாது. ஏனென்றால், நாம் ஏதோ ஒரு வழியில் எதிர்கொள்ளும் தகவல்கள், உண்மைகளுக்குப் பின்னே என்னென்னவோ மறைந்திருக்கும்.

அவற்றின் மீதத் துளிகளை நாம் அறிய நேரும்போது, அடிவயிற்றைக் கவ்வும் வலியின் ஊடாக உயிரைப் பிரித்தெடுப்பது போன்ற உணர்வைப் பெற நேரலாம். அப்படிப்பட்ட தருணங்களை மையப்படுத்துகிறது ‘உள்ளொழுக்கு’ மலையாளத் திரைப்படம்.

ஊர்வசி, பார்வதி திருவோத்து, அர்ஜுன் ராதாகிருஷ்ணன், பிரசாந்த் முரளி, அலான்சியர் லோபஸ் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தை கிறிஸ்டோ டோமி இயக்கியுள்ளார்.

இத்திரைப்படம் நமக்கு எப்படிப்பட்டக் காட்சியனுபவத்தைத் தருகிறது.

சுமை தாங்காத மனம்!

அஞ்சு (பார்வதி திருவோத்து), ராஜீவ் (அர்ஜுன் ராதாகிருஷ்ணன்) இருவரும் ஒருவரையொருவர் தீவிரமாகக் காதலிக்கின்றனர்.

‘ஒருவர் இல்லாமல் இன்னொருவர் இல்லை’ எனும் அளவுக்கு அவர்களது காதல் இருக்கிறது. ஆனால், அஞ்சுவின் பெற்றோர் அக்காதலை ஏற்பதாக இல்லை.

தெரிந்தவர்கள் மூலமாக லீலாம்மா குடும்பம் பற்றி அவர்களுக்குத் தெரிய வருகிறது. அதையடுத்து, உடனடியாக அவரது மகன் தாமஸ்குட்டியை (பிரசாந்த் முரளி) அஞ்சுவுக்கு மணம் முடிக்கச் சம்மதிக்கின்றனர்.

திருமணம் முடிந்த சில நாட்களிலேயே தாமஸ்குட்டியின் உடல்நலம் பாதிக்கப்படுகிறது. படுக்கையில் இருக்குமளவுக்கு நிலைமை மோசமாகிறது.

தாமஸ் குட்டியை இரவும் பகலும் கவனித்துக் கொள்கிறார் அஞ்சு. அந்தத் தருணங்களின்போது, தன்னால் அச்சூழலைச் சகிக்க முடிவதில்லை என்று தாய் ஜிஜியிடம் (ஜெயா குரூப்) அஞ்சு புலம்ப, அவர் பதிலுக்கு ‘எல்லாம் சரியாகும்’ என்றே சொல்கிறார்.

அந்தக் காலகட்டத்தில், ராஜீவ்வை மீண்டும் அஞ்சு சந்திக்க நேர்கிறது. மெல்ல அவர்களது பழக்கம் பழைய நிலையை அடைகிறது. அதன் தொடர்ச்சியாக, அஞ்சு கர்ப்பமடைகிறார்.

அந்த உண்மை தெரியவந்த கணத்தில் இருந்து, அஞ்சுவின் மனம் பதறுகிறது. தாமஸ்குட்டியையும் லீலாவையும் நேருக்குநேராகச் சந்திக்க முடியாமல் அவர் தவிக்கிறார்.

இந்த நிலையில், கீழே விழுந்து தாமஸுக்கு காயம் ஏற்படுகிறது. மருத்துவமனையில் அவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்படுகிறார்.

அந்தச் சூழலில் தான் எவ்வாறு தன்னை வெளிப்படுத்திக் கொள்வது என்று தெரியாமலும், தன் மனதில் புதைந்திருக்கும் உண்மையை மறைக்க இயலாமலும் தவிக்கிறார் அஞ்சு. ‘எப்படியாவது, எங்காவது என்னை அழைத்துச் சென்றுவிடு’ என்று ராஜீவ்விடம் போனில் கெஞ்சுகிறார்.

பதிலுக்கு ‘இப்போது என்னால் எந்த ஏற்பாடையும் செய்ய முடியாது’ என்ற ஒற்றைப் பதிலையே திரும்பத் திரும்ப ராஜீவ் சொல்கிறார். அது, அஞ்சுவை இன்னும் அழுத்தத்திற்கு உள்ளாக்குகிறது.

அன்றிரவு லீலாவும் அஞ்சுவும் ஒரு அறையில் தங்குகின்றனர். நள்ளிரவில் கண் விழிக்கும் அஞ்சு, அங்கிருக்கும் கண்ணாடி முன்னே நின்று தனது வயிற்றைத் தடவிப் பார்க்கிறார்.

தற்செயலாக அதனைப் பார்க்கும் லீலா, தனது மருமகள் கர்ப்பமுற்றிருப்பதை உணர்கிறார். தாமஸ் குட்டியின் குழந்தை அது என்று நினைத்துவிடுகிறார்.

அடுத்த நாள் காலையில், தாமஸ் குட்டியைக் காண ஆவலுடன் செல்கிறார் லீலா. அஞ்சுவை அவர் முன்னே நிற்க வைத்து, ‘அந்த தகவலைச் சொல்’ என்கிறார்.

கணவரிடம் என்ன சொல்வதென்று அஞ்சு தவித்துக் கொண்டிருக்க, அந்த நொடியில் தாமஸ் குட்டியின் உயிர் பிரிகிறது.

லீலாம்மாவால் அந்த மரணத்தை ஏற்கவே முடியவில்லை. அழுது அரற்றியும், அவரால் அந்த சோகத்தைத் தணிக்க முடிவதில்லை.

அந்தச் சூழலில், மருமகள் வயிற்றில் வளரும் குழந்தையே தனக்கு ஆறுதல் தரும் என்று லீலாம்மா எண்ணுகிறார். அந்த நினைப்பு, அஞ்சுவை இன்னும் மன அழுத்தத்திற்கு உள்ளாக்குகிறது.

பரபரப்பு நிறைந்த ஒரு சிறு நகரம். அதன் அருகே இருக்கும் நீர்நிலையைப் படகில் கடந்து செல்ல வேண்டிய தொலைவில், ஓரிடத்தில் லீலாவின் வீடு இருக்கிறது. தொடர்ந்து மழை பெய்தால், அவ்விடத்தை வெள்ளம் சூழும் என்பதே நிலைமை.

தாமஸ் குட்டியின் மரணச் சடங்குகள் நடைபெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அங்கு மழை பெய்யத் தொடங்குகிறது.

தொடர்ந்து பல நாட்கள் மழை நீடிக்கும் என்ற தகவல் கிடைத்த காரணத்தால், நீர் தேங்கிய கல்லறையில் அடக்கம் செய்ய முடியாத சூழல் உருவாகிறது. அதனால், தற்காலிகமாக ஓரிடத்தில் தாமஸின் சடலம் பாதுகாப்பாக வைக்கப்படுகிறது.

லீலாவின் வீட்டில் வெறுமனே பைபிள் வாசிப்பு, பிரார்த்தனை போன்ற சில சடங்குகளே மேற்கொள்ளப்படுகின்றன. அந்த சடங்குகளில் அஞ்சுவால் மற்றவர்களைப் போல இருக்க முடிவதில்லை.

மனதிலிருக்கும் உண்மை ஒரு சுமையாக மாறி, அஞ்சுவை வாட்டுகிறது. அவரைத் தன்னுடன் அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்ய இயலாத அளவுக்கு, ராஜீவ்வின் பொருளாதாரச் சூழல் இருக்கிறது.

இந்த நிலையில், அஞ்சுவுக்கு ராஜீவ் உடன் இருக்கும் தொடர்பு லீலாம்மாவுக்குத் தெரிய வருகிறது. ‘அது ஒரு ஆண் பெண் இடையிலான பழக்கம் தான்’ என்று அவர் தன்னைத்தானே சமாதானம் செய்துகொண்டாலும், குற்றவுணர்வு நிறைந்து வழியும் அஞ்சுவின் முகம் ‘அந்த உறவு எல்லைகளைக் கடந்தது’ என்பதைச் சொல்லிவிடுகிறது.

அப்போது, ‘உன் வயிற்றில் வளரும் குழந்தைக்குக் காரணம் தாமஸ் குட்டியா இல்லையா, உண்மையைச் சொல்’ என்கிறார் லீலா. அதற்கு ‘இல்லை’ என்கிறார் அஞ்சு.

அந்தப் பதிலை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கும் லீலாம்மாவிடம், ‘சடங்குகள் முடிந்ததும் நான் சென்றுவிடுகிறேன்’ என்று மட்டும் அவர் பதிலளிக்கிறார்.

அதற்கு, ‘வெள்ளம் வடிந்தபிறகு, இங்கிருக்கும் கல்லறையிலேயே என் மகனை அடக்கம் செய்வேன்’ என்கிறார் லீலா. ஆனால், அது நிகழ்வதற்குள் லீலாவுக்கும் அஞ்சுவுக்கும் மட்டுமே தெரிந்த அந்த உண்மை மற்றவர்களுக்கும் தெரிய வருகிறது.

அதன்பிறகு என்னவானது? அஞ்சுவும் ராஜீவ்வும் ஒன்றுசேர்ந்தார்களா? லீலாம்மா என்ன செய்தார் என்பது உட்படப் பல கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது இப்படம்.

‘உள்ளொழுக்கு’ என்பது மிகப்பழமையான தமிழ் சொல். ‘உள்ளுக்குள் ஒன்று ஊடாடிக் கொண்டிருக்கும்’ என்பதைக் குறிக்கும்விதமாக அது பயன்படுத்தப்படுகிறது.

டைட்டிலுக்கு அர்த்தம் சேர்க்கும் வகையில், அனைத்து பாத்திரங்களின் மனதிலும் வேறு சில எண்ணங்கள், உண்மைகள் இருப்பதை வெளிக்காட்டும்விதமாக இதில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மெதுவாக நகரும் திரைக்கதை!

உலகப்படங்கள் என்று நாம் ரசிக்கும் சில அயல்மொழிப் படங்களைப் போல, எழுபதுகளில் விருதுகளை வாரிக் குவித்த ‘யதார்த்த பாணியில் அமைந்த’ சில படங்களைப் போல, ‘உள்ளொழுக்கு’ படத்தின் திரைக்கதையும் மிக மெதுவாக நகர்கிறது. அதேநேரத்தில், அதன் இயக்கத்தில் நம்மால் பிசகைக் கண்டறிவது கடினம்.

அந்த வகையில், மிக நேர்த்தியாகத் திரையில் கதை சொல்லலை நிகழ்த்தியிருக்கிறார் இயக்குநர் கிறிஸ்டோ டோமி.

‘இது போன்ற கதைகளுக்குக் காட்சிகளை வடிவமைத்துப் படம்பிடிக்கும்போது மக்கள் ரசிக்கும்படியாக அமையாது’ என்று கருதத்தக்க ஒரு கதையை எடுத்துக்கொண்டு, அதனை மிகத்திறம்படத் திரையில் காட்டியிருக்கிறார்.

இந்தப் படத்தின் யுஎஸ்பி ஆகவும் அதுவே இருக்கிறது. பெரும்பாலான இடங்களில் வசனங்களும், அவை இல்லாத இடங்களில் மௌனமும் நிறைந்திருக்கின்றன.

ஆனால், பாத்திரங்கள் வெளிப்படுத்தும் உணர்வுகளையும் மீறி வேறொன்றை நாம் புரிந்துகொள்ள உதவுகிறது சுஷின் ஷ்யாம் அமைத்துள்ள பின்னணி இசை மிக எளிமையான வடிவத்தில் அமைந்த அவ்விசை, சட்டென்று நம்மை ஈர்க்கிறது.

மழை பெய்து கொண்டே இருக்கும் சூழல், திரையில் பெரும்பாலான இடங்களில் இடம்பெற்றுள்ளது. அதனைத் திரையில் காட்டுவதில் முகம்மது பாவாவின் கலை வடிவமைப்பு பெரும்பங்கு வகிக்கிறது.

இப்படத்தின் விஎஃப்எக்ஸ், டிஐ ஆகிய நுட்பங்களும் அடைமழை பெய்யும் சூழலைத் திரையில் காட்ட உதவியிருக்கின்றன.

யதார்த்தம் என்ற பெயரில் இருட்டை திரையில் நிறைக்காமல், மேகம் சூழ்ந்த இடத்துக்குள் நாம் அடைபட்ட உணர்வை உருவாக்க மெனக்கெட்டிருக்கிறது ஷெனாத் ஜலாலின் ஒளிப்பதிவு.

கிரண் தாஸின் படத்தொகுப்பு திரையில் கதை சீராக விரிய வகை செய்திருக்கிறது.

‘இப்படியொரு படத்தை எப்படி லைவ் சவுண்டில் உருவாக்க முடியும்’ என்ற கேள்விக்குப் பதிலளிக்கிறது ஜெயதேவன் சக்கடத்தின் உழைப்பு. படம் முழுக்க மழை பெய்யும், நீர் ததும்பும், சத்தம் இருந்துகொண்டே இருக்கிறது.

அதையும் மீறி வசனங்களும் பின்னணி இசையும் இதர ஒலிகளும் பின்னிப் பிணைய வழி வகுத்திருக்கிறது அனில் ராதாகிருஷ்ணனின் ஒலி வடிவமைப்பு.

ஊர்வசி எப்பேர்ப்பட்ட நடிகை என்பதை ‘மைக்கேல் மதன காமராஜன்’, ‘வனஜா கிரிஜா’, ‘இரட்டை ரோஜா’, ‘மலைக்கோட்டை’, ‘சிவா மனசுல சக்தி’ உட்படப் பல கமர்ஷியல் தமிழ் படங்களில் அறிந்திருக்கிறோம்.

கடந்த சில ஆண்டுகளில் வெளியான ‘மகளிர் மட்டும்’, ‘சூரரைப் போற்று’, ‘ஜெ பேபி’ ஆகியவற்றில் அவரை வயதானவராகவும் ரசித்திருக்கிறோம்.

அப்படிப்பட்ட ஊர்வசியை இறுக்கமான முகத்துடன் காட்டியிருக்கிறது ‘உள்ளொழுக்கு’. அதையும் மீறி, அப்பாத்திரம் மகிழ்ச்சியடைவதையும் அழுது அரற்றுவதையும் காட்டிய விதத்தில் ஆச்சர்யமூட்டுகிறார் இந்த நடிப்பு ராட்சசி.

‘பூ படத்தின் நாயகியா இவர்’ என்று சொல்லும் அளவுக்குக் குண்டான உடல்வாகை அடைந்தபோதும், ‘அதெல்லாம் உங்க நினைப்புக்கே வராது’ என்று சவால்விடும் அளவுக்கு இதில் தனது நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் பார்வதி திருவோத்து.

குற்றவுணர்ச்சி ததும்பும் பாவனையைப் படம் முழுக்க ‘மெயிண்டெய்ன்’ செய்திருப்பது அசாதாரணம்.

இவர்களது அசுரத்தனமான நடிப்பை மீறி பிரசாந்த் முரளி, அலாய்சியர் லோபஸ், ஜெயா குரூப், வீணா நாயர், அர்ஜுன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட ஒரு டஜன் பேர் தங்களது பங்களிப்பைத் தந்திருக்கின்றனர்.

சில திரைக்கதைகளில் கதை நிகழும் களம் நம் மனதில் முழுமையாகப் பதியாது. காரணம், அக்களம் திரையில் பரந்து விரிந்ததாகக் காட்டப்பட்டிருக்காது.

சில கதைகளில் பாத்திரங்களின் உணர்வுகள் நமக்குக் கடத்தப்படாமல் விடுபட்டுப் போய்விடும். அத்திரைக்கதையில் போதுமான அளவுக்கு ‘குளோஸ் அப்’ ஷாட்கள் இருக்காது.

சிலவற்றில் இதர பாத்திரங்கள் எவ்வாறு குறிப்பிட்ட காட்சியில் ‘ரியாக்ட்’ செய்கின்றன என்பதோ, அச்சூழல் எவ்வாறிருக்கிறது என்பதோ ‘மிட் ஷாட்’களில் போதுமான அளவுக்குச் சொல்லப்பட்டிருக்காது.

‘உள்ளொழுக்கு’ படத்தில் அப்படியொரு குறையைக் காணவே முடியாது. மையப்பாத்திரங்களின் முக பாவனைகள், உடலசைவுகள் தொடங்கி பிரேம்களில் நிறைந்திருக்கும் நேர்த்தி வரை நம்மை ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் கிறிஸ்டோபர் டோமி.

என்னவாகிறோம் நாம்!?

‘தியேட்டருக்கு சென்றோம், ஜாலியா படம் பார்த்தோம்’ என்றெண்ணுபவர்களின் ‘கப் ஆஃப் டீ’ ஆக நிச்சயம் ‘உள்ளொழுக்கு’ இருக்காது.

அதேநேரத்தில், வழக்கத்திற்கு மாறான கதை சொல்லலையும் திரை மொழியையும் எதிர்பார்ப்பவர்களை நிச்சயம் இப்படம் ஆச்சர்யப்படுத்தும்.

மழை பெய்யும் சத்தம் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகளில் உள்ளது. அது காட்சிரீதியிலும் மிகத்தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது. அதில் எந்தளவுக்கு விஎஃப்எக்ஸ் பங்கு உண்டு எனத் தெரியவில்லை.

இப்படம் ‘லைவ் சவுண்ட்’டில் படம்பிடிக்கப்பட்டது என்ற தகவலே அதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்பதைத் தெளிவுபடுத்துகிறது.

அது போன்ற சில அம்சங்களே, இத்திரைக்கதையில் குறைவான பாத்திரங்கள் இடம்பெற்றிருப்பதை ஒரு குறையாகக் கருதவிடாமல் தடுக்கின்றன. லீலாம்மாவின் மருமகனோ, அவரது வீட்டாரோ திரைக்கதையில் தனியாகக் காட்டப்படவில்லை.

ராஜீவ் பாத்திரம் தங்கியிருக்கும் இடமும், வேலை செய்யுமிடமும் மிகக்குறைவான அளவிலேயே திரையில் காட்டப்பட்டுள்ளது. போலவே, மெதுவாக நகரும் திரைக்கதை சிலருக்கு ‘அசூயை’யை ஏற்படுத்தலாம். ஸ்பாய்லர் என்றபோதும், இதனைச் சொல்லியாக வேண்டியிருக்கிறது.

‘உள்ளொழுக்கு’வில் இருக்கும் மிகச்சிலக் குறைகளைப் புறந்தள்ளிவிட்டால், ஒரு மாமியாரையும் மருமகளையும் மட்டுமே உற்றுநோக்கும் வகையில் இது அமைந்திருப்பதை உணர முடியும்.

சமீபத்தில் மலையாளத்தில் வெளியான ‘மந்தாகினி’ போலவே, மருமகளை ஒரு பெண்ணாக மட்டுமே கருதும் மாமியாரை, அவரது மனோபாவத்தை முன்னிலைப்படுத்துகிறது இப்படம். ‘உள்ளொழுக்கு’ படத்தை இன்றைய தலைமுறை கொண்டாடுவதற்கு இதை விட வேறொரு காரணம் தேவைப்படாது.

– உதயசங்கரன் பாடகலிங்கம்

 

You might also like