வழிபாட்டு உரிமையில் பிறர் தலையிடலாமா?

சில தினங்களுக்கு முன்பு இந்துக் கோவில்களில் உள்ள சீரடி சாய்பாபா சிலைகளை அகற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அந்த வழக்கிற்கு தமிழக அறநிலையத்துறை பதிலளிக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுக்க பல்வேறு இடங்களில் சீரடி சாய்பாபாவுக்குக் கோயில்கள் பரவலாக இருப்பது இறை உணர்வு உள்ளவர்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

குறிப்பாக சீரடியில் குவியும் பக்தர்கள் கூட்டம் எந்த அளவுக்கு அதிகமாக இருக்கிறது என்பதும் இந்தியா முழுக்க உள்ள பக்த கோடிகள் உணர்வார்கள். அங்கு வரக்கூடிய பக்தர்கள் அனைவரும் இஸ்லாமிய மதம் சார்ந்தவர்கள் அல்ல. சீரடிக்கு வருபவர்கள் அதிகம் பேர் இந்துக்களே.

பலதரப்பட்ட பிரபலங்கள் சீரடி சாய்பாபா கோவிலுக்கு வந்திருக்கிறார்கள். வந்து அவருடைய பெருமையையும் தங்கள் வாழ்வில் நடந்த மாற்றங்களையும் பல்வேறு விதத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். பிரதமராக இருந்த நரேந்திர மோடி கூட அங்கு சென்று வழிபட்டதும் அனைவருக்கும் தெரிந்தது விஷயம்தான்.

ஆக, எந்த அரசியல் கட்சிப் பாகுபாடும் இல்லாமல் ஜாதி, மத அடையாளப் பாகுபாடுகள் இல்லாமல் இந்தியா முழுக்கவும், சமயங்களில் வெளிநாடுகளில் இருந்தும் அதிகப்படியான பக்தர்கள் வந்து வழிபடக்கூடிய இடமாக தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறது சீரடி சாய்பாபா கோவில்.

அந்தக் கோவிலுக்கான சிலைகளைப் போல இந்தியாவெங்கும் அவருக்கான பல்வேறு கோவில்கள் உருவாகி இருக்கின்றன.

அவற்றை உருவாக்கியவர்கள் பெரும்பாலும் இந்து சமூகத்தினர் தான்.

தமிழகத்திலும் அப்படிப்பட்ட கோயில்கள் சென்னையிலும், தமிழகத்தின் கடைக்கோடி மாவட்டம் வரைக்கும் பல்வேறு இடங்களில் சாய்பாபா கோவில்கள் எழுந்திருக்கின்றன.

அவற்றிற்கென்று தனி வழிபாட்டு முறையும், அவருடைய புகழ் பாடும் வழிபாட்டு முறையும் தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறது.

குறிப்பாக சென்னை மயிலாப்பூரில் பிரபலமாக இருக்கும் சீரடி சாய்பாபா கோவிலுக்கு எவ்வளவு பக்தர்கள் தினமும் வந்து வழிபடுகிறார்கள் என்பது எவ்வளவு ஒற்றுமை உணர்வோடு பக்தர்கள் இங்கு வருகிறார்கள் என்பதை தெளிவாகப் புலப்படுத்தும்.

இதில், குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒரு விஷயம் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் சாய்பாபா சீரடியில் வாழ்ந்த காலத்திலேயே அவர் மத உணர்வுக்கு அப்பாற்பட்ட ஒரு நபராகவே வாழ்ந்து வந்திருக்கிறார். அவர் வாழ்ந்த காலத்திலேயே அவரைச் சுற்றியுள்ளவர்களின் வாழ்வில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறார்.

அந்த அனுபவங்களைக் கண்கூடாக உணர்ந்ததன் விளைவாகத்தான் அவர் வாழ்ந்த காலத்தில், ஒரு மனித வடிவில் வந்த தெய்வத்தைப் போல பிறரால் மதிக்கப்பட்டிருக்கிறார். அந்த மதிப்பு தான் நாளுக்குநாள் கூடி அவர் மறைந்த இடத்தை ஒரு புண்ணியத் தலத்தை போல் மாற்றி இருக்கிறது.

இன்றும் சீரடிக்குச் செல்பவர்கள் அவர் அங்கு வாழ்ந்ததற்கான பல்வேறு அடையாளங்களை நேரடியாக பார்க்க முடியும். அவருடைய அசலான புகைப்படத்தையும் அவர் பயன்படுத்திய பொருள்களையும், அவர் வாழ்ந்த இடத்தையும் பார்வையிட முடியும்.

சீரடிக்கு வருகின்ற பக்தர்கள் பெரும்பாலானோர் அந்த இடங்களுக்குச் செல்கிறார்கள், அந்த இடத்தைத் தொட்டு வணங்குகிறார்கள். அங்கு சீரடி சாய்பாபாவின் உருவம் பதித்த டாலர்கள் ஏராளமாக விற்பனை ஆகின்றன.

இது எல்லாமே எந்த விதமான மத உணர்வு சார்ந்த விஷயமல்ல என்பது அங்கு இயல்பாக வரக்கூடிய பக்தர்கள் அனைவரும் உணர்ந்த விஷயம்.

இப்படி தமிழகத்திலும் சென்னை துவங்கி காரைக்குடி, ராமநாதபுரம், மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாய்பாபாவிற்கான கோவில்கள் அமைந்திருக்கின்றன.

அங்கு அவரை வழிபட வருகிறவர்களில் பெரும்பாலானோர் மதத்தை கடந்தவர்களாகவே இருக்கிறார்கள். அவர்கள் சாய்பாபாவை மத அடையாளம் சார்ந்து யாரும் வழிபட வருவதில்லை. அவரைப் பற்றிய அனேகப் பாடல்கள் தமிழில் வெளிவந்திருக்கின்றன. அவரைப் பற்றிய நூல்கள் வெளிவந்திருக்கின்றன. தொலைக்காட்சி சீரியல்களும் வெளிவந்திருக்கின்றன.

இந்த அளவில் சமீப காலத்தில் மனித வடிவில் நம்மிடைய வாழ்ந்த ஒருவர் தேசம் முழுமைக்கும் பரவலாக கொண்டாடப்பட்டிருப்பது ஒரு அபூர்வமான விஷயம் தான்.

தமிழகத்திலும் இத்தகைய அற்புதமான ஒரு மனம் கொண்ட மகான்கள் உருவாகி இருக்கிறார்கள். அவர்களின் பின்புலம் பார்த்து யாரும் அங்கு செல்வதாகத் தெரியவில்லை.

ஒரு இடத்திற்கு போகும்போது அந்த இடத்தில் அவர்களுக்கு கிடைக்கின்ற மன நிறைவு தான் அவர்களைத் தொடர்ந்து அங்கு வரவழைக்கிறது. தங்கள் வழிபாட்டுக்கு உரியவராக அவரைத் தேர்ந்தெடுக்க வைக்கிறது. அப்படிப்பட்ட ஒருவர்தான் சீரடி சாய்பாபாவும்.

இப்படிப்பட்ட ஒருவரை மிக அண்மைக் காலத்தில் நம்மிடைய சிறப்புக்குரிய வகையில் வாழ்ந்து மறைந்து, வழிபாட்டுக்கு உரியவராக மதிப்பிடப்பட்டு வணங்கப்படுகின்ற ஒருவரை, வெறும் மத அடையாளம் சார்ந்த ஒருவராக மட்டும் பார்த்து அறநிலையத்துறை சார்ந்த கோவில்களிலிருந்து அவருடைய சிலைகளை நீக்குவதற்கான ஒரு முயற்சியை முன்வைத்து சாய்பாபா மீது பக்தி வைத்து அவரை வழிபடுகின்ற லட்சக்கணக்கான பக்தர்களின் உணர்வைப் புண்படுத்துவதாக அமையும்.

அறநிலையத்துறைச் சார்ந்த கோவில்களில் சீரடி சாய்பாபாவின் சிலைகள் வைக்கப்பட்டிருந்தால், அங்கு வருகின்ற பெரும்பாலான பக்தர்களின் உணர்வுகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டே அங்கு வைக்கப்பட்டதாக பெரும்பாலும் அமைந்திருக்கும்.

அப்படிப்பட்ட சிலைகளை அகற்ற முற்படுவது எந்த ஒரு வழிபாட்டு உணர்விற்கும் உகந்தது அல்ல.

தமிழகத்தைப் பொறுத்தவரை இந்து மதத்திற்கும் இஸ்லாமிய மதத்திற்குமான நெருக்கமான உறவு எப்போதும் இயல்பாகவே இருந்து வந்திருக்கிறது.

நாகூர் ஆண்டவருடைய தர்காவிற்கு  செல்பவர்களில் இந்துக்களும் அடக்கம். அவர்கள் வருடம் தோறும் நடத்தும் சந்தனக்கூடு விழாக்களில் இந்துக்களும் பரவலாகவே கலந்து கொண்டிருக்கிறார்கள்.

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் அதற்கு மேல் உள்ள தர்காவிற்குச் சென்று வணங்கி விட்டு வருவதையும் பார்க்க முடியும்.

மதுரையில் பிரபலமாக நடக்கும் சித்திரை திருவிழாவின் போது அங்கு வருகின்ற பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் குளிர்பானங்கள் கொடுத்து அவர்களை உபசரிப்பு என்பது வருடம் தோறும் இயல்பாக நடந்து வருகிறது.

ஆக, இரு மதம் சார்ந்த சார்ந்தவர்கள் என்ற உணர்வைத் தாண்டி இயல்பாக நடக்கக்கூடிய விஷயங்களாக இந்த ஒற்றுமை இங்கு சாத்தியப்பட்ட ஒன்றாகத்தான் இருக்கிறது.

வழிபடும் பக்தர்கள் தாங்கள் வழிபடும் தெய்வங்களை மத உருவில் பார்ப்பதில்லை. அதை, மதம் மட்டும் சார்ந்த ஒன்றாகப் பார்ப்பவர்கள் தான் இரண்டு மத உணர்வுகளுக்கும் ஒரு துவேசம் ஏற்படுத்தக்கூடிய ஒன்றாக அதை உருமாற்றுகிறார்கள்.

இரு மதங்களுக்கு இடையே இயல்பாக இருக்கும் நட்புணர்வையும் பரஸ்பர மதிப்புணர்வையும் எந்தவிதமான துவேசங்களாலும் நாம் கெடுத்து விட வேண்டாம்.

-யூகி

You might also like