நாடாளுமன்றத்தில் திருமா பேசும்போது மைக் ஆஃப்!

18-வது மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்ற உறுப்பினர்கள் கடந்த இரண்டு நாட்களாக நாடாளுமன்ற உறுப்பினர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். இரண்டாவது நாளான நேற்று தமிழகம், புதுச்சேரியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக கூட்டணியைச் சேர்ந்த 40 உறுப்பினர்களும் தமிழில் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

இந்த நிலையில் மக்களவையில் இன்று சபாநாயகர் தேர்வு நடைபெற்றது. இதில், பாஜக கூட்டணியைச் சேர்ந்த ஓம் பிர்லா இரண்டாவது முறையாக மக்களவை சபாநாயகராகத் தேர்வு செய்யப்பட்டார்.

இதைத் தொடர்ந்து மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஓம் பிர்லாவை பாராட்டி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல். திருமாவளவன் பேசினார்.

அப்போது நாடாளுமன்ற வளாகத்தில் இருந்த அம்பேத்கர், காந்தி உள்ளிட்ட தலைவர்களின் சிலைகள் ஒரு ஓரத்தில் கொண்டுபோய் மறைவிடத்தில் வைக்கப்பட்டுள்ளது என்றும் அந்த சிலைகளை ஏற்கெனவே இருந்த இடத்தில் நிறுவ வேண்டும்” என்று பேசிக்கொண்டிருந்தபோதே திருமாவளவனின் மைக் அணைக்கப்பட்டது.

அதோடு, சபாநாயகர் ஓம் பிர்லா வேறு ஒருவரை பேச அழைத்தார். சபாநாயகர் ஓம் பிர்லாவின் இந்த செயலால் எதிர்க்கட்சிகள் அதிருப்தியில் சத்தம் எழுப்பி தங்களது எதிர்ப்பை பதிவுசெய்தனர்.

அதைத் தொடர்ந்து அவையில் கடும் அமளி ஏற்பட்டதால் மக்களவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.

You might also like