சென்னையில் ஓர் அதிசயக் குடும்ப விழா!

சென்னையில் ஒரு வித்தியாசமான அதிசயமான குடும்ப விழா. அத்துடன் Sparkles from Iraianbu (சின்னச் சின்ன சிந்தனைப் பொறிகளின் தொகுப்பு) என்ற நூலின் வெளியீடும் சிறப்பாக நடைபெற்றது.

மதுராந்தகத்தில் வாழ்ந்து மறைந்த வேதாந்த ராமானுஜம் – ஜனகவல்லி தம்பதியரின் மகன்கள், மகள்கள், பேரக் குழந்தைகள் என 108 அன்பு உறவுகள் சேர்ந்து எடுத்த விழா.

வேதாந்த ராமானுஜத்தின் 100வது பிறந்த நாள் விழா. அவருக்கு 14 பிள்ளைகள், அதில் 7 பெண்கள், 7 ஆண்கள். கணவன் மனைவியே தனிக் குடும்பங்களாக வாழும் காலத்தில் கூட்டுக் குடும்பத்தின் பெருமையை கைவிடாத பெருமக்கள். மகிழ்ச்சியான பெருவிழா.

14 பேரில் ஒருவரான எஸ்.வி. சீனிவாசன் அரசுப் பணியில் உயர் அலுவலராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். அவர் தொகுத்த நூல் Sparkles from Iraianbu.

முன்னாள் தலைமைச் செயலர் வெ. இறையன்பு ஐஏஎஸ் நூலை வெளியிட பத்திரிகையாளர் சுந்தரபுத்தன் பெற்றுக்கொண்டார். முதன்முதலில் இறையன்பு அவர்களை சந்தித்தது மற்றும் நூலைப் பற்றியும் 15 நிமிடங்கள் சுருக்கமாகப் பேசினார் சுந்தரபுத்தன்.

அவரைத் தொடர்ந்து பேசிய வெ. இறையன்பு, காலையில் வாட்ஸ் ஆப்பில் அனுப்பப்படும் தன்னுடைய சிந்தனைகளை எழுதத் தொடங்கியது ஏன், அதுபற்றி நண்பர்களின் எதிர்வினைகள், பாராட்டுகள் பற்றி விரிவாகப் பேசியதுடன், தொகுப்பாசிரியர் எஸ்.வி. சீனிவாசனின் மேன்மையான குணங்கள் குறித்தும் எடுத்துக் காட்டினார்.

மேலும், அவரது குடும்ப உறவுகளின் ஒற்றுமையையும் அன்பையும் நெகிழ்ந்து பாராட்டினார்.

நன்றியுரையில், சில நாட்களிலேயே மிக விரைவாக நூலை அச்சிட்டு வெளியிட்ட பற்றிய அனுபவங்களைப் பகிர்ந்தார் பதிப்பாளர் மாப்பிள்ளை நல்லதம்பி.

எஸ்.வி. கோபாலகிருஷ்ணன் உறவினர்களையும் சிறப்பு விருந்தினர்களையும் வரவேற்று மகிழ்ந்தார். எஸ்.வி. சீனிவாசனின் துணைவியார் ஷியாமளா, தன் குடும்பத்தைப் பற்றி சிற்றுரை ஆற்றினார்.

விழாவில் பத்திரிகையாளர் மானா பாஸ்கரன், குணசேகரன், மணவை பொன் மாணிக்கம், இயக்குநர் ராசி அழகப்பன், திரவிய முருகன், சிவா உள்ளிட்ட பலரும் பங்கேற்றுச் சிறப்பித்தனர். அழகு தமிழில் எளிமையாக விழாவை தொகுத்து வழங்கினார் பேரன் சத்தியநாராயணன்.

You might also like