சில படங்கள் இப்படித்தான் இருக்குமென்ற எதிர்பார்ப்புடன் தியேட்டருக்கு செல்வோம்; அங்கு நாம் நினைத்தபடியே ‘ரிசல்ட்’ காத்திருக்கும். மிகச்சில படங்கள் அதற்கு எதிர்த்திசையில் அமைந்து நம்மை ஆச்சர்யத்தில் மூழ்கடித்துவிடும்.
அப்படியொரு ஆச்சர்யத்தைத் தந்துவிடாதா என்ற எதிர்பார்ப்பைத் தேக்கிக்கொண்டு ‘பயமறியா பிரமை’ படம் காணச் சென்றேன். படம் பார்த்து முடிந்ததும், கிடைத்த அனுபவம் எத்தகையதாக இருந்தது?
ஒரு பாத்திரத்தில் பல கலைஞர்கள்!
ஜெகதீஷ் (ஜேடி) எனும் நபர் 96 கொலைகளைச் செய்துவிட்டு, சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். தனது நாவலுக்காக, அவரைச் சந்திக்கச் செல்கிறார் எழுத்தாளர் கபிலன் (வினோத் சாகர்).
தன்னைக் குறித்து கபிலன் எழுதிய நாவலைக் கையில் வைத்திருக்கும் ஜெகதீஷ், ‘இந்த கதைய சொல்றதுக்கு எதுக்கு இத்தனை பக்கம்’ என்று கேட்கிறார். ‘கொஞ்சம் சுருக்கமா கதை சொல்லியிருக்கலாம்’ என்கிறார். ‘இதுல என்னோட முகமே தெரியலையே’ என்று கூறுகிறார்.
அதற்கு, அந்த படைப்பில் தன்னையே வாசகர்கள் காண்பதாகக் கூறுகிறார் கபிலன். மேலும், தான் எழுதியவற்றைப் படிக்க வாசகர்கள் காத்திருப்பதாகச் சொல்கிறார்.
இருவருக்குமான விவாதம் முற்றுகிறது. அப்போது, ’நான் செய்த கொலைகள் அனைத்தும் ஒருவகையில் கலையே’ என்கிறார் ஜெகதீஷ்.
‘அது எப்படி’ என்று கபிலன் கேட்க, ஜெகதீஷ் பதில் சொல்லத் தொடங்குகிறார்.
பதின்ம வயதில், எந்தக் காரணமும் இல்லாமல் தன்னை அவமானப்படுத்திய நபரைக் கொலை செய்கிறார் ஜெகதீஷ். பிறகு, வெவ்வேறு காரணங்களுக்காக வெவ்வேறு நபர்களைக் கொல்கிறார். அதன் பின்னணியில், மாறன் என்கிற நபர் இருக்கிறார்.
போலீசில் ஜெகதீஷை மாட்டிவிட மாறன் முடிவு செய்ய, இறுதியாக அவரையும் கொலை செய்கிறார். பிறகே, சிறையில் ஜெகதீஷ் தண்டனை அனுபவித்து வருகிறார்.
இடைப்பட்ட காலத்தில் மனைவி, மகளோடு வாழ்ந்தது, அவர்களைப் பிரிந்தது, தனது உண்மை முகம் அவர்களுக்குத் தெரிய வந்தது என்று பலவற்றைக் கபிலனிடம் பகிர்கிறார்.
இறுதியாக, தான் என்னவாக இருந்திருக்கலாம் என்று ஜெகதீஷ் எண்ணிப் பார்ப்பதோடு படம் முடிவடைகிறது.
ஒரு ரவுடி அல்லது கேங்க்ஸ்டர் கதைகளின் பொதுவான அம்சங்களைக் கலந்து கட்டி ஒரு கதையாக்கினால் என்ன கிடைக்குமோ, அதையே ‘பயமறியா பிரமை’யும் சொல்கிறது.
ஆனால், ஆறு அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்ட திரைக்கதை காட்சிகள், ‘நான் லீனியர்’ முறையில் முன்னும் பின்னுமாகச் சொல்லப்பட்ட அத்தியாயங்கள் என்று வேறுபட்டு நிற்கிறது.
இதில் நாயகனாக நடித்திருப்பவர் ஒரு நபர் அல்ல. கதைப்படி ஒருவர் கதை சொல்வதாக இருந்தாலும், அதனைப் படிக்கும் வாசகர்கள் அப்பாத்திரமாகத் தங்களைக் கருதிக் கொள்வதைக் குறிப்பிடும்விதமாக வெவ்வேறு நபர்களின் வழியே அக்கதை நகர்கிறது. அதையே இப்படத்தின் யுஎஸ்பி ஆக கொள்ளலாம்.
வித்தியாசமான ஆக்கம்!
இந்தப் படத்தில் ஜேடி, குரு சோமசுந்தரம், ஹரீஷ் உத்தமன், ஜான் விஜய், வினோத் சாகர், சாய் பிரியங்கா, விஸ்வந்த், ஹரீஷ், ஜாக் ராபின், ஏகே, திவ்யா கணேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ஹரீஷ் உத்தமன், குரு சோமசுந்தரம் வரும் காட்சிகள் நம்மை ஈர்க்கும் வகையில் உள்ளன. ‘இது ஒரு கேங்க்ஸ்டர் கதை’ என்பதை உணரவைப்பதாக அக்காட்சிகள் இருக்கின்றன.
நந்தா இப்படத்தின் ஒளிப்பதிவு இயக்குனர். பிரவீன் இதன் ஒளிப்பதிவாளர். பிரேம் வடிவமைப்பிலும் ஒளி பயன்படுத்தலிலும் நல்லதொரு ரசனையை வெளிப்படுத்தியுள்ளது இக்கூட்டணி.
தொடர்ந்து அனைத்து பிரேம்களிலும் இருண்மை சீராகப் பரவி நிற்க, டிஐ வழிவகை செய்துள்ளது.
சதீஷின் கலை வடிவமைப்பு, குறைந்த இருளில் ஆங்காங்கே பின்னணியைக் காட்டப் பயன்பட்டுள்ளது.
திரைக்கதை ஆறு அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டு, அவையும் முன் பின்னாக நகர்வதாகக் காட்டப்பட்டிருப்பதால், ‘கதை புரிந்ததா இல்லையா’ என்ற கவலையின்றிக் காட்சிகளைக் கோர்த்திருக்கிறார் படத்தொகுப்பாளர் அகில் பிரகாஷ்.
‘லைவ் சவுண்ட்’டில் இது படம்பிடிக்கப்பட்டிருக்கிறது.
அதற்கேற்றவாறு ஏ.எம்.ரஹ்மதுல்லாவின் ஒலிக்கலவையும், விஜய் ரத்தினத்தின் ஒலி வடிவமைப்பும் நமக்கு வித்தியாசமானதொரு அனுபவத்தைத் தருகிறது.
இசையமைப்பாளர் கே கொஞ்சம் வித்தியாசமான அனுபவத்தை இதில் தந்திருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் பின்னணி இசை தந்து, உரையாடல்களின்போது அமைதி காத்திருக்கிறார்.
இப்படத்தை எழுதி இயக்கியிருக்கும் ராகுல் கபாலி, ஒரு வித்தியாசமான காட்சியாக்கத்தைத் தர எண்ணியிருக்கிறார். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். ஆனால், திரையில் அவர் சொல்லும் கதைதான் சட்டென்று பிடிபட மாட்டேன் என்று முரண்டு பிடிக்கிறது.
என்ன கதை!
படத்தின் முடிவு பற்றிச் சொல்வதால், கீழே இருக்கும் வரிகள் அனைத்தும் ‘ஸ்பாய்லர்’ ரகத்தில் சேரும்.
பதின்ம வயதில் நாயகன் கொலையாளி ஆவதில் இருந்து திரைக்கதை தொடங்குகிறது. ஒருவேளை அவரை அப்படியொரு ஆத்திரத்தில் தள்ளுவதற்குக் காரணமான நபர், தனது துவேஷத்தையும் மூர்க்கத்தையும் வெளிப்படுத்தாமல் விட்டிருந்தால் எப்படி இருந்திருக்கும்?
இப்படிக் கதையில் திருப்பத்தை ஏற்படுத்திய அனைத்துக் காட்சிகளுக்கும் வேறொரு தீர்வினைப் படத்தின் முடிவில் முன்வைக்கிறார் இயக்குனர். அது, சாதாரணமான ஒரு மனிதன் தனது வாழ்வை ரொம்பச் சாதாரணமாக எதிர்கொள்வதாக இருக்கிறது.
திரைக்கதையின் நடுவே, கொலையாளியான ஜெகதீஷ் ‘என் வாழ்வில் நடந்தவற்றுக்கும், நீங்கள் என்னைப் பற்றி எழுதிய கதைக்கும் பெரிதாக ஒற்றுமை இல்லை’ என்கிறார்.
அதற்கு, எழுத்தாளர் கபிலன் உரிய பதிலளிக்காமல் ஏதேதோ சொல்கிறார்.
‘நானும் சளைத்தவன் இல்லை’ என்பது போல, தான் கொலை செய்த ஆட்களைச் சுற்றி ரத்தத்தில் கோலம் இட்டதைக் கலை என்று குறிப்பிடுகிறார் ஜெகதீஷ்.
ஒரு கதையில் ஏதேனும் ஒரு மூலையில் இருக்கும் பாத்திரமாகவாவது பார்வையாளர் தன்னை உணர வேண்டும். இதில் அப்படியொன்று நிகழவே இல்லை.
ஆனால், ஒரு நாவலைப் படித்து அதிலுள்ள மையப்பாத்திரம் போல வாசகர்கள் தங்களைக் கருதிக்கொள்வது போன்று இந்தப் படத்தில் காட்சியாக்கம் அமைக்கப்பட்டுள்ளது. நல்லதொரு முரண்!
இந்தப் படத்தில் ஜெகதீஷ், கபிலன் இரண்டு பேருமே தூய்மையான தமிழில் ‘ஒரு மேடை நாடகம்’ போல உரையாடுகின்றனர். சிற்றிதழ்களில் கூட இப்படியொரு நடையை ஏற்பதற்கான மனநிலையில் எத்தனை வாசகர்கள் இருப்பார்கள் என்று தெரியவில்லை?
சந்தர்ப்ப சூழ்நிலையின் எதிரொலியாக, சமூகம் தன் மீது நிகழ்த்தி வரும் வன்முறைக்கான பதிலடியாக ஒருவன் குற்றவாளியாக மாறுவதையும், அதை இன்னொரு நபர் அதிகார வர்க்கத்தின் பசிக்காகப் பயன்படுத்திக் கொண்டதையும் இக்கதை பேசுவதாகக் கொள்ளலாம்.
அப்படிப்பட்ட ஒரு குற்றவாளி தான் செய்த கொலைகள் பற்றியும், அதனால் தன் மனநிலையில், குடும்பத்தில், சுற்றத்தில் ஏற்பட்ட பிசகுகள் குறித்தும் விலாவாரியாகச் சொல்வதாகத் திரைக்கதையை அமைத்திருக்கலாம்.
அது போன்று எதையும் நிகழ்த்தாமல், ‘வித்தியாசமான காட்சியாக்கம்’ என்ற ஒன்றை மட்டும் நம்பிக் களமிறங்கியிருக்கிறது இந்த ‘பயமறியா பிரமை’.
இதனைக் காணும் நம்மைப் பயம், பிரமை இரண்டுமே தொற்றவில்லை. வேறு என்ன தொற்றியது என்று கேட்கிறீர்களா? இதனைப் படித்து முடித்தபிறகு உங்களுக்கே தெரியவரும்!
– உதயசங்கரன் பாடகலிங்கம்