எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்திய கண்ணதாசன் வரிகள்!

கண்ணதாசனைப் பற்றி நாகேஷ் கூறியவை:

“ஒருநாள் கே.பாலசந்தர், கண்ணதாசன், எம்.எஸ்.விஸ்வநாதன் மூன்று பேரும் ஒன்றாக இருந்தபோது, நான் அங்கே போனேன்.

“வா, நாகேஷ்… உனக்கு தான் ஒரு ‘டூயட்’ பாட்டு எழுதிக் கொண்டிருக்கிறேன்…” என்றார், கவிஞர்.

“தூத்துக்குடி பாஷை பேசுவியே, அதற்கு ஏற்றார்போல் ஒரு பாட்டு கேட்டிருக்கிறேன்…” என்றார், பாலசந்தர்.

”தூத்துக்குடியா…” என்று கேட்டு, பக்கத்தில் இருந்த, பஞ்சு அருணாசலத்திடம், ”பஞ்சு… பாட்டை எழுதிக்கோ…” என்று சொல்ல ஆரம்பித்தார், கண்ணதாசன்.

“முத்துக் குளிக்க வாரீகளா, மூச்சை அடக்க வாரீகளா…”

‘அட… தூத்துக்குடின்னு மனுஷரிடம் சொன்ன மாத்திரத்தில், அதற்கு ஏற்றபடி பாடல் வரிகள் வந்து விழுகின்றனவே…’ என்று, நாங்கள் அனைவரும் ஆச்சரியப்பட்டோம்.

அத்துடன் விடவில்லை.

எம்.எஸ்.வி.,யிடம், ”நம்ம நாகேஷுக்கு, பாட்டுல ஸ்பெஷலா ஏதாவது செய்…” என்று, கவிஞர் கூறினார். தான் போட்டிருந்த, ‘டியூனை’ தாலாட்டு பாணியில் சற்றே நீட்டி, போட்டுக் காட்டினார்.

ஆளான பொண்ணுக பாக்கு வெக்கும் முன்னமே… என்று, தாலாட்டு வரிகளை சேர்த்து, இன்னும் சந்தோஷத்தில் ஆழ்த்தினார்.

‘அனுபவி ராஜா அனுபவி’ படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது, கண்ணதாசனை சந்தித்தேன்.

“மெட்ராஸ் ரோட்டுல நடந்துகிட்டே பாடுறதா, ஒரு பாட்டு எழுதச் சொல்லியிருக்காங்க..” என்றார்.

”கவிஞரே… நான் தாராபுரத்துக்காரன்; மெட்ராஸ் வந்ததுலேர்ந்து, எனக்கு ஒரு பெரிய சந்தேகம்… எங்க ஊர்ல எல்லாம் கன்னுக் குட்டியை அவிழ்த்து, மாடுகிட்ட விடுவாங்க… அது ஓடிப் போய், பசு மாட்டு மடியில முட்டி முட்டி, பாலைக் குடிக்கும். அப்புறம் கன்னுகுட்டியை இழுத்துக் கட்டிவிட்டு கறந்தால், மாடு, பால் சுரக்கும்.

ஆனா, பாருங்கண்ணே… இந்த மெட்ராஸ்ல, கன்னுக் குட்டியோட தோலுக்குள்ளே வைக்கோலை அடைச்சு வெச்சிடறாங்க… அந்த வைக்கோல் கன்னுக் குட்டியை, மாடுகிட்ட எடுத்து போய், ரெண்டு நிமிஷம் காட்டறான்; மாடு பால் சுரக்க ஆரம்பிச்சிடுது… இது எப்படின்னு எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு…” என்றேன்.

”நீ சொல்றது கூட சுவாரசியமா தான் இருக்கு… இதைக் கூட பாட்டுல வெச்சுக்கலாம்…” என்றார்.

‘ம்… பஞ்சு, எழுதிக்க…’ என்று சொல்லி, “மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்…” என்று ஆரம்பித்து, மடமடவென்று பாடல் வரிகளைச் சொல்லியபடியே வந்தவர், எனக்கு இனிய ஆச்சரியத்தைக் கொடுத்தார்…

வைக்கோலால கன்னுக்குட்டி, மாடு எப்போ போட்டது… கக்கத்துல தூக்கி வெச்சா கத்தலயே என்னது… என்று, அவர் சொன்னபோது, எனக்கு ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது.

”என்ன, நாகேஷ் நல்லா இருக்கா…” என்றார், கவிஞர்.

”அண்ணே… எனக்குள்ளே இருக்குற சந்தோஷத்தை எப்படி சொல்றதுன்னே தெரியலை…” என்று சொல்லி, கை குலுக்கினேன்.

என்னால் மறக்க முடியாத கவிஞர் கண்ணதாசன் அவர்கள்.”

– நன்றி: முகநூல் பதிவு

You might also like