நடிகர்களுக்கு ரசிகர்களின் உயிர் முக்கியம் இல்லையா?

ஊர் சுற்றிக் குறிப்புகள்:

நடிகர் விஜயின் பிறந்தநாளையொட்டி சென்னையில் உள்ள நீலாங்கரையில் அவருக்காக நடந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது, ஒரு சிறுவனின் கையில் தீப்பற்றி எரிந்தக் காட்சிப் பார்க்கிற பலரையும் பதற வைத்திருக்கிறது.

ஒரு பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது இத்தகைய விளைவுகள் உருவாகுவது, தற்செயலாக இருக்கலாம். இதுவும் அப்படிப்பட்ட நிகழ்வாகவேப் படுகிறது.

ஆனால், திரை நட்சத்திரங்களுக்காக அவர்களது ரசிகர்கள் வைத்திருக்கும் மதிப்பு எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை என்னுடைய அனுபவத்தில் உணர முடிந்திருக்கிறது.

மதுரைக்கு அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர், தான் மிகவும் நேசிக்கும் ஒரு நடிகருக்கு அனுப்பிய ஒரு பரிசு என்ன தெரியுமா? அவருடைய கட்டைவிரல்.

தன்னுடைய கைக் கட்டைவிரலை வெட்டி அதைப் பார்சலாக அவருக்குப் பிடித்த நடிகருக்கு அனுப்பி இருக்கிறார். அந்த செய்தி வெளிவந்து அப்போது அச்சு ஊடகங்களில் பரபரப்பான செய்தியானது.

தங்களுக்குப் பிடித்தமான நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது அதற்கான ஆரவாரக் கொண்டாட்டத்தின் போது, ஆர்வ மிகுதியால் சில ரசிகர்கள் உயிரிழந்த நிலையும் இங்கு நிகழ்ந்திருக்கிறது.

என்னுடைய நேரடி அனுபவத்தில், ஒரு ரசிகரின் மனநிலை எந்த அளவுக்குத் தீவிரமாக இருக்க முடியும் என்பதை நிஜமாகவே தீச் சுட்ட உணர்வுடன் உணர முடிந்திருக்கிறது.

அப்போது பிரபலமான நடிகர் ஒருவர் அரசியலுக்கு வருவது குறித்த சர்ச்சைகளும் அவருக்கு எதிரான ஒரு சவால்களும் இருந்த காலகட்டம்.

மதுரை பேருந்து நிலையத்தின் மையப் பகுதியில் 20 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் தன்னுடைய உடம்பைச் சுற்றி முழுக்கப் பட்டாசைச் சுற்றி, அதைப் பற்ற வைத்துக் கொண்டார்.

அதோடு, அந்தப் பிரபல நடிகருக்கு ஆதரவான முழக்கங்களோடு அவர் சரிந்து விழுந்தார். பிறகு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அதன்பின்னர், அவரது வீட்டிற்குச் சென்ற ஒரு வார காலத்திற்கு பிறகு பத்திரிகை ஒன்றுக்காக அந்த இளைஞரை சந்திக்க அவரது வீட்டிற்குச் சென்றிருந்தேன். எளிய ஓட்டு வீடு. ஒரே அறை தான். அதற்குள் பெற்றோருடன் வசிக்கிற இளைஞர் அவர்.

நான் போனபோது வெறும் கையுடன் அமர்ந்திருந்தார். பாயில் அமர்ந்திருந்தார் உடம்பில் பட்டாசு கொளுத்தி உடம்பு முழுக்க தீப் புண்களாக இருந்தது.

அதையெல்லாம் மீறி ஒரு புன்னகையுடன் என்னை வரவேற்றவர், கீழே என்னை அமர வைத்து தனக்குப் பிடித்த நடிகரைப் பற்றி அவ்வளவு உற்சாகத்துடன் பேச ஆரம்பித்துவிட்டார்.

அவருக்கு தன்னுடைய உடலில் தானே ஏற்படுத்திக் கொண்ட வலி தெரியவில்லை. ஆனால் தான் நேசிக்கிற ஒரு நடிகருக்கு எதிரான சவால் அவருக்கு முக்கியமாகப்பட்டிருக்கிறது.

அதற்காக எந்த எல்லைக்கும் தான் போகத் தயாராக இருப்பதாகச் சொன்னவர், தன்னை அந்த நடிகர் சென்னைக்கு வரவழைத்து அறிவுரைக் கூறி, அவருடன் புகைப்படம் எடுத்ததுடன் அவருக்கு கைச் செலவுக்கும் பணம் கொடுத்து அனுப்பியதை மிகவும் பரவசத்துடன் பேசினார்.

அந்த இளைஞருடைய பெற்றோர்களும், மகனுடைய அதித் தீவிரமான அந்த செய்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் இருந்தது ஆச்சரியமாக இருந்தது.

ஒரு நடிகரின் படங்களைத் தொடர்ந்து பார்த்து அதன் மூலம் ரசிகராக உருமாறுகிற ஒருவர், அதன் தீவிரத் தன்மையில் எந்த அளவிற்கு தன்னை உருக்குலைத்துக் கொள்ள முடியும் என்பதற்கு உதாரணமாக ஒரு கண்கூடாக நான் நேரடியாக பார்த்த சாட்சி இந்த இளைஞர்.

எத்தனையோ நடிகர்கள் தங்களுடைய வருமானத்தை உயர்த்திக் கொள்வதற்காக பல்வேறு யுக்திகளைக் கையாளுகிறார்கள். ஊடகங்களைப் பயன்படுத்துகிறார்கள்.

ரசிகர் மன்றங்களைப் பயன்படுத்துகிறார்கள். ரசிகர்களின் உணர்வைப் பயன்படுத்துகிறார்கள்.  எல்லாம் நடிகர்களுக்குக் கிடைக்கும் கூடுதலான ஒரு விளம்பரத்தைப் போலிருக்கலாம்.

ஆனால், இதில் ஒரே ஒரு கேள்வி இதையெல்லாம்விட அந்தத் திரையுலகம் சார்ந்த நட்சத்திரங்களுக்கு ரசிகர்களாக இருப்பவர்களின் உயிரும் பாதுகாப்போம் மிக முக்கியம் இல்லையா?

-மணா

You might also like