கடவுளின் பெயரைச் சுமப்பவர்கள்…!

கடவுளின் பெயரை சுமப்பவர்கள் வறுமையையும் சேர்த்து சுமக்கிறார்கள்.

கடலூர் மாவட்டத்தில் வட்டத்தூர் என்னும் கிராமம் உள்ளது. அங்குள்ள பெண்களின் பெரும்பாலானவர் பெயர் மேரி என்று தான் முடியும்.

ஏன் எல்லாருடைய பெயரும் மேரி என்று முடிகிறது என்று வயதான பெண் ஒருவரிடம் கேட்டேன்.

“நாங்க சின்னப்பிள்ளையா இருந்தப்ப எங்க வீட்டுல உள்ளவங்க எல்லாரும் இந்துல இருந்து கிறுத்துவ மதம் மாறுனாங்க. அப்ப எங்க அப்பா, அம்மா இந்தப் பெயரை வச்சுட்டாங்க” என்றார்.

இவர் சொன்னதிலிருந்து சில உண்மைகள் புலப்படுகிறது. அன்றைய காலக்கட்டத்தில் இந்து மதத்தில் உள்ள தீண்டாமைக் கொடுமைகள் தாங்க முடியாமல் கிறுத்துவ மதத்திற்கு ஒடுக்கப்பட்ட மக்கள் மாறினார்கள் என்ற வரலாற்று உண்மை நினைவிற்கு வருகிறது.

வட்டத்தூரில் உள்ள பெரும்பாலான வீடுகள் வாழ்வதற்கான தகுதியை இழந்திருந்தன. வீடுகளைத் தார்பாய்கள் தான் பாதுகாக்கும் நிலைமை. வட்டத்தூரில் சில வீடுகள் மட்டுமே சிமெண்ட் வீடுகள். சிமெண்ட் வீடுகள் அரசாங்கம் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தால் கட்டப்பட்டவை.

வட்டத்தூரில் மதுப் பழக்கத்தின் காரணமாக ஆண்கள் இறப்பதும் குடும்ப பாரத்தை பெண்கள் சுமப்பதும் இயல்பான போக்கு.

குடியினால் பாதிக்கப்பட்ட குடும்பம் தான் ஏசு மேரியின் குடும்பம். மேரிக்கு ஊட்டச்சத்து குறைபாடுடையதை நம்மால் உணர முடிகிறது. பொருளாதார ரீதியாகவும், உடலளவிலும் நலிவுற்றவரான அவருக்கு 3 பெண் குழந்தைகள்.

பொருளாதார நிலைமையில் நலிவுற்றவராக இருக்கும் மேரி மனதளவில் வலிமைக் கொண்டவர். தன் கணவர் வாழும் காலத்தில் குடிபோதையில் எவ்வளவு அடித்தாலும் வாங்கியிருக்கிறார்.

கணவர் வாங்கும் சம்பளம் எதுவும் குடும்பத்துக்குப் பயன்படவில்லை. பெரும்பாலும் குடிபோதைக்குத் தான் பயன்படும். அதிகளவிலான குடியினால் நோய் வாய்ப்பட்ட கணவரை கவனிக்கும் சுமையும் மேரி மீது விழுந்துள்ளது.

கடன் வாங்கி மருத்துவச் செலவு செய்தும் கணவர் உயிர்பிழைக்காத நிலையில் கடன் சுமையால் குடும்பமே வறுமையில் தவித்தனர். இத்தனையும் அந்தப் பெண் கடந்துவந்துள்ளார் என்று நினைக்கையில் மனம் வலிக்கிறது.

இதன் விளைவாக பெண் குழந்தைகள் இருவரும் கல்வியை இடையிலேயே நிறுத்திவிட்டு திருப்பூரில் 8 ஆயிரம் சம்பளத்திற்கு வேலைக்குச் செல்கின்றனர்.

மேரியும் படிக்கவில்லை; தன்னுடைய இரண்டு பெண் குழந்தைகளும் படிக்கவில்லை. ஆனால் இக்குடும்பத்துக்கு ஒரே ஒரு ஆசை. வீட்டின் கடைக்குட்டியான ஆண்டிரியாவை அவள் விருப்பப்படி படிக்க வைத்து ஆளாக்க வேண்டும்.

ஆண்டிரியா அரசுப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கிறாள். அவளும் ஆரோக்கியமான உணவு உட்கொள்ளவிலை. மருத்துவராக வேண்டும் என்பது அவளுக்கு கனவு.

அவளிடம் யாராவது சொல்லுங்கள், “பாப்பா அதெல்லாம் நம்மாள முடியாதுடா. அதுக்கு நீட் தேர்வு எழுதணும், லட்சக்கணக்கில் கோச்சிங்க் செண்டருக்கு பணம் கட்டணும், ஆனா நம்மலால அவ்வளவு காசு கட்ட முடியாதும்மா” என்று சொல்லி இப்போதே அவள் மனதை பக்குவப்படுத்துங்கள், இல்லையென்றால் வருங்காலத்தில் ஏமாந்து போய்விடுவாள்.

இதுபோன்ற ஓராயிரம் ஆண்டிரியாக்கள் இந்தியா முழுவதும் உள்ளனர். ஓராயிரம் ஆண்டிரியாவிற்கு பின் இருக்கும் பொருளாதார  நிலைமை மோசமானது. ஆனால் அனைத்து ஆண்டிரியாவின் கனவையும் உருக்குலைக்கும் ‘நீட்’டை வெளியேற்ற என்ன செய்ய போகிறோம்?.

– கு.சௌமியா

You might also like